கரும்பை கழுவிட்டு சாப்பிடுங்க: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

கரும்பை கழுவிட்டு சாப்பிடுங்க: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை 14.01.22 அன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், உங்களுக்காக வாங்கும் பொருட்களை கவனமாக பார்த்து வாங்கும் படியும் கரும்பை கழுவிவிட்டு சாப்பிடும் படியும் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஏ.டி அன்பழகன் இதுகுறித்து தெரிவித்ததாவது:

"பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி, வெல்லம், நெய் திராட்சை, முந்திரி, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை அதிகமாக உள்ளது. பொதுமக்கள் இவற்றை வாங்கும்போது உணவுப் பாதுகாப்புத்துறையிடம் உரிய உரிமம்பெற்ற விற்பனை நிறுவனங்களில் மட்டும் கவனமாக வாங்கி உபயோகிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

அரிசியில் பூஞ்சைகள் இல்லாத அரிசியாகவும், தரமான வெல்லம்தானா என்பதை அறிந்தும், நெய் உணவில் சேர்க்கத் தகுந்ததுதானா அல்லது ஒரு ஊரின் பெயரில் விற்பனை செய்யப்படும் போலி நெய்யா என்பதை சரிபார்த்தும், அதேபோல் தரமான திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொருட்களை கவனமாக பார்த்தும் வாங்கி உபயோகிக்க வேண்டும்.

மேலும், பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கரும்பு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கரும்பு விளைவிக்கும் நிலத்திலிருந்து விற்பனை மேற்கொள்ளப்படும் இடம் வரை பல்வேறு அசுத்தங்களை கடந்தபின்னரே தங்கள் இல்லத்தை வந்தடைகின்றது. இந்நிலையில், கரும்பை துண்டாக்கி நேரடியாக கடித்துத் தின்பதால் கிருமிகள் தொற்றி நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே, கரும்பை சுவைப்பதற்கு முன்னர் சுத்தமான நீரில் கழுவிய பின்னர் உபயோகிக்க வேண்டும்"

இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

மக்களே, கரும்பில் கவனம் தேவை. கரும்பு உட்பட அனைத்தையும் தரமான பொருட்களை கவனமாக தேர்ந்தெடுத்து பாதுகாப்பான முறையில் பொங்கலை கொண்டாடுங்கள்.

படங்கள் எம். சாம்ராஜ்

Related Stories

No stories found.