பெண்களின் திருமணக் கனவை சிதைக்கும் அறிவிப்பா?

பெண்களின் திருமணக் கனவை சிதைக்கும் அறிவிப்பா?

திமுக அரசு பதவியேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முக்கியமான ஒரு திட்டம் தமிழகத்தில் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் பயணம்செய்ய கட்டணமில்லை என்று அந்த அறிவிப்பு சமூகத்தின் அடித்தட்டில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களின் புதிய பொருளாதாரத்துக்கு வித்திடும் செயலாக அது இருக்கிறது.

கிராமப்புறங்களில் இருந்தும், புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் நகரங்களுக்கு பெண்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களுடைய குறைந்த வருவாயில் பெரும்பங்கு போக்குவரத்துக்காகவே போய்க்கொண்டிருந்தது. அந்த நிலையை மாற்றியது முதல்வரின் இலவச பயண திட்டம். அப்படி அந்த திட்டம் எந்த அளவிற்கு தமிழக பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுத்தந்ததோ அதே அளவுக்கு எதிர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது தற்போது நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டம்.

பல ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு 1989-ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, சமூகவளர்ச்சிக்கான பல திட்டங்களை அப்போது கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம். அது கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல ஆயிரம் ஏழைப்பெண்களின் திருமணக்கனவை சாத்தியமாக்கியிருக்கிறது. அத்தனை ஆயிரம் பெற்றோர்களின் மனவேதனையை போக்கியிருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும், உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்தது.

அப்படிப்பட்ட ஒரு திட்டத்தைத்தான் தற்போது உயர்கல்வித் திட்டமாக மாற்றியுள்ளது தற்போதைய நிதிநிலை அறிக்கை. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவச்செல்வங்களின் பெற்றோர்களிடம் மகிழ்ச்சியை அளிக்கவேண்டிய இந்த அறிவிப்பு அதற்குப்பதிலாக மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்சாரிகள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ``எப்படியாவது தங்கள் பெண்ணை பத்தாவது வரைக்கும் படிக்க வைத்துவிட்டால் ஒரு சவரன் தங்கமும் 25 ஆயிரம் பணமும் கிடைத்து விடும். அதை வைத்து தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம்'' என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தனர் பெண்களைப் பெற்றவர்கள். பல்லைக்கடித்துக்கொண்டு பத்தாவதுவரை படிக்கவைத்துவிட்டால் திருமணத்தைப் பற்றிய கவலையில்லை என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. அதையும் தாண்டி படித்து விட்டால் 50 ஆயிரம் ரூபாயும், ஒரு பவுன் தங்கக்காசும் கிடைப்பது அவர்களை பெரிய பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வரச்செய்தது. தற்போது அது இல்லை என்பது ஏழைகளின் திருமண கனவை சிதைத்துவிடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி பத்தாவது வரையாவது படிப்பார்களா என்பதே கேள்விக்குறிதானே தவிர, இது உயர் கல்வியை ஊக்குவிக்கும் திட்டமாக இருக்கவே இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ``பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வி சேர்வதற்கு மாணவிகளுக்கு தற்போதைய சூழலில் பொறியியல் படிப்பென்றால் ஐந்து லட்ச ரூபாயாவது தேவை. கலைக்கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு செலவாகிவிடும். அப்படி இருக்கும்போது மாதம் ஆயிரம் என்று ஒரு வருடத்திற்கு 12 ஆயிரம் வீதம் மூன்று வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய், அல்லது நான்கு வருடத்துக்கு 48 ரூபாய் என்பது அவர்களுக்கு எந்த வகையிலும் கல்விச் செலவை கட்டுப்படுத்துவதாகவோ, அல்லது ஈடுகட்டக் கூடியதாகவோ அமைந்துவிடாது.

உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏற்கனவே இருக்கும் திட்டத்தை எதற்காக குலைக்க வேண்டும் என்பதுதான் சாமானியர்களின் கேள்வி. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தை தொடர்ந்துகொண்டே கூடுதலாக இப்படி ஒரு வாய்ப்பையும் அளித்தால் அதுதான் நல்ல முடிவாக, நல்ல திட்டமாக அமையும். மாறாக திருமண உதவித்தொகையையும், தங்கத்தையும் நிறுத்துவது தமிழக அரசு சொல்லும் நொண்டிச்சாக்கு'' என்கிறார்கள்.

இந்த திட்டத்தை ரத்துசெய்வது கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஈ.வே.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரசா, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகியோர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிறப்புப் பிரிவினருக்கான திட்டங்கள் அப்படியே தொடருகின்றன. ஆனால், பொதுப்பிரிவினருக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால்தான் இதில் அரசு கையை வைத்திருக்கிறது.

அரசால் செயல்படுத்தப்படும் மேற்கண்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-21-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் மூவலூர் இராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டத்தின்படி பயனடைந்தவர்கள்தான். இத்தனை பேருக்கான ஒருசவரன் தங்கத்துக்கான செலவு, அளிக்கப்படும் நிதி என இரண்டையும் கணக்கிட்டே இத்திட்டத்தை நிறுத்தியிருக்கிறது மாநில அரசு.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு சவரன் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூ.40,000. அத்துடன் ரூ.50,000 நிதி என மொத்தம் ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் ஒரு குடும்பத்துக்கு கிடைத்துவந்த நிலையில் தினமும் ரூ.200, 300 என குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருந்தது. அவ்வளவு பயனுள்ள திட்டத்தை அரசு ரத்து செய்தால், அதனால் பயன்பட்டுவந்த ஏழைகள் எத்தனை மோசமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இப்போது அத்திட்டம் நிறுத்தப்படுமானால் பல ஏழைக்குடும்பத்து பெண்களின் திருமணம் என்பதே கேள்விக்குறியதாகி விடக்கூடும். இது சமூகத்தில் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஆண்டுக்கு ரூ.3,33,251 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசுக்கு திருமண நிதியுதவி திட்டத்திற்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்குவது பெரிய விஷயமல்ல. எனவே, தாலிக்கு தங்கம், ரூ.50,000 வரை நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். அதுதான் விடியலைத் தரும் அரசு என்று மார்தட்டிக் கொள்வதற்கு சரியாக இருக்கும். அப்படி தொடராவிட்டால் அது வறிய குடும்பத்தில் பிறந்த ஏழைப்பெண்களை இருட்டுக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது ஆகும்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ``பெண்களின் முன்னேற்றத்தை மனதில்கொண்டே இத்திட்டம் மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களே சுயமாக உயர்கல்வி பெற்று, வாழ்வில் முன்னேற்றம் அடைய வாய்ப்பாக அமையும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை அடிப்படைக் கொள்கைகளுக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்” என்கிறார்.

இத்திட்டத்தை ஏன் நிறுத்துகிறீர்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்கப்பட்டதற்கு, தங்கத்திற்கு பதிலாக உயர்கல்விக்கான நிதி அளிப்பதன் மூலம் அதை வைரமாக மாற்றுகிறோம் என்று பதில் அளித்திருக்கிறார் . ஆனால் இவர்கள் கூற்றுப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்று சொல்லும் சமூக சிந்தனையாளர்கள், இதனால் மாணவிகளை வைரமாக அல்ல நிலக்கரியாக மாற்றி விடக்கூடிய அபாயமே ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in