பேரறிவாளன் விவகாரத்திலும் பெயரைக் கெடுத்துக்கொள்கிறாரா ஆளுநர்?

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான அதிகார யுத்தம், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு வரை எதிரொலித்திருக்கிறது. இவ்வழக்கில், மாநில அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்றும், பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இதுபோன்ற வழக்குகளில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்னுதாரணமாக அமையப்போகிறது. மாநில உரிமை சார்ந்த விவாதங்களில் முக்கியமான வாதமாக முன்வைக்கும் அளவுக்குக் காத்திரமான வார்த்தைகளை நீதிபதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமும் மாநில அரசும் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க தயாராகிவிட்ட பின்னர், இதில் ஆளுநர் ஏன் குறுக்கே நிற்க வேண்டும் எனும் கேள்வியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

அதிகார மோதல்

நீட் விலக்கு மசோதா தொடங்கி பல்வேறு விஷயங்களில் தமிழக அரசுக்குக் குடைச்சல் தரும் வகையிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டுவருவதாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகின்றன. சமீபத்தில் ஊட்டியில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், இணைவேந்தராகப் பொறுப்பு வகிக்கும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சருக்கே அழைப்பு விடுக்கவில்லை என்பதும், அதில் கலந்துகொண்ட சில துணைவேந்தர்கள் அரசியல் கருத்துகளைப் பேசியிருப்பதாக எழுந்த புகார்களும் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. பதிலடியாக, துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதாவைத் தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதும் இரு தரப்புக்கும் இடையிலான அதிகார யுத்தத்தின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த விஷயங்கள்கூட நிர்வாகம் சார்ந்தவை. ஆனால், பேரறிவாளன் விவகாரம் அப்படியானது அல்ல. மகாத்மா காந்தி வழக்கில் தண்டனை பெற்ற கோபால் கோட்சே, 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணம் இருக்கும்போது, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். நீண்ட சட்டப்போராட்டத்தின் பயனாக, ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர், முழுமையான விடுதலை கோரி காத்திருக்கிறார்.

சிறையில் நன்னடத்தை, மூன்று முறை பரோலில் வெளிவந்திருந்த காலகட்டத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் சட்டத்துக்குட்பட்டு செயல்பட்டது என்பன உள்ளிட்ட சாதகமான அம்சங்களும் அவருக்கு உண்டு. அவருக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் ஒரு இடைக்கால நிவாரணம்தான் எனக் குறிப்பிட்டிருக்கும் அவரது தாய் அற்புதம்மாளும் தனது மகனின் விடுதலைக்காகக் காத்திருக்கிறார். இதில் ஆளுநர் - மாநில அரசு அதிகார மோதல் எனும் விஷயம் குறுக்கே வருவது பொருத்தமா என்பதுதான் சாமானியர்களின் மனதில் எழுந்திருக்கும் கேள்வி!

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2014-ல் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவ்வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் குரல்கள் வலுத்துவரும் சூழலில், தனக்கு விடுதலை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார் பேரறிவாளன். ஏப்ரல் 27-ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, ஆளுநரை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.

இவ்விஷயத்தில் ஒவ்வொரு முறையும் முன்னுக்குப் பின்னாக ஆளுநர் பதிலளித்துவருவதால் விசாரணை தாமதமாவதாகவும், இது தொடர்ந்தால் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நபர்களை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்கிறது எனும் நிலை ஏற்படும் என ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நீதிபதிகள், இது மாநில அரசின் அதிகாரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கூடவே, ‘யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்துக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும்? நாங்களே ஏன் விடுதலை செய்யக் கூடாது?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் ஆளுநர் தரப்பு முன்வைத்த வாதங்களும் வலுவற்றவையாக இருப்பதாக நீதித் துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, பன்னோக்கு விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைக்காததால்தான் இதுகுறித்து முடிவெடுக்க முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு முன்வைத்த வாதத்தை சிபிஐ தரப்பே ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், ஆளுநர் ஏன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு கேள்வி.

எங்கு தவறுகிறார் ஆளுநர்?

அரசமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டக்கூறு குடியரசுத் தலைவருக்கு, குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்திவைப்பது அல்லது குறைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. அதேபோல, சட்டக்கூறு 161 ஆளுநருக்கு அதே அதிகாரத்தை வழங்குகிறது. அதேசமயம், அமைச்சரவைக் குழு வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில்தான் பெரும்பாலும் அவர்கள் முடிவெடுப்பார்கள். அப்படியிருக்க, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை எதற்காக மத்திய அரசு / குடியரசுத் தலைவர் வரை ஆளுநர் கொண்டுசெல்ல வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்வி. இதன் மூலம் அமைச்சரவையின் தீர்மானத்தை முடக்க ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்குச் சில நிர்வாக அதிகாரங்கள், நிர்வாகத் துறையைச் சேர்ந்தவர்களுக்குச் சில நீதித் துறை அதிகாரங்கள் என வழங்கியிருக்கிறது அரசமைப்புச் சட்டம். அப்படித்தான் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவை குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டப்படியான அதிகாரமாக, நீதித் துறை அதிகாரமாக இருந்தாலும், குடியரசுத் தலைவர் மத்திய அரசையும், ஆளுநர் அந்தந்த மாநில அரசையும் கலந்தாலோசித்துதான் முடிவை எடுக்க வேண்டும் என்பது மரபு. பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை என்பதால்தான், தற்போது உச்ச நீதிமன்றமே அதைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதிகாரங்களின் எல்லை எது?

டெல்லி, புதுச்சேரி, அந்தமான் - நிகோபர் ஒன்றியப் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்படும் நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் இருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு முதல்வர் - துணைநிலை ஆளுநர் மோதல் உச்சமடைந்துவந்தது. ஆனால், டெல்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன்னிச்சையாக முடிவெடுக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், அமைச்சரவை சகாக்களைக் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.

கிட்டத்தட்ட அதேபோல், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கிலும், ‘மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்’ என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது மிக முக்கியமான தருணம். பொதுவாக, அதிகாரங்கள் விஷயத்தில் ஆளுநருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. மாநிலத்தின் முதல்வரை நியமிப்பது, முதல்வரின் ஆலோசனையுடன் அமைச்சர்களை நியமிப்பது எனத் தொடங்கி மாநில அரசைக் கலைப்பது உட்பட பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள முடியும் என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் அவர்களால் செல்ல முடியாது. ஆளுநர் உரை எனும் பெயரில் சட்டப்பேரவையில் வாசிக்கப்படும் உரையே மாநில அமைச்சரவை தயாரித்து வழங்குவதுதான். எனவே, ஆளுநர் தனது எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இனி என்ன நடக்கும்?

முன்னாள் பிரதமரின் படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், எழுவர் விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் மத்திய அரசு இருக்கிறது. மற்ற பிரச்சினைகளில் காங்கிரஸ் பிரதமர்களைக் கடுமையாக விமர்சிக்கும் பாஜக அரசு, இவ்விவகாரத்தில் காங்கிரஸைவிடவும் கண்டிப்பான நிலைப்பாட்டில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி எல்லா விஷயங்களிலும் மத்திய அரசின் கருத்தையே எதிரொலிக்கும் ஆளுநர், பேரறிவாளன் விவகாரத்திலும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றமே கடுமையான வார்த்தைகளுடன் ஆளுநரைக் கண்டித்திருப்பதால் அது மத்திய அரசிடமும் மாற்றத்தை ஏற்படுத்துமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இவ்விவகாரம் பேரறிவாளனுடன் நின்றுவிடாது. மற்ற 6 பேரும் இதேபோல தங்களுக்கு முழுமையான விடுதலை கோரலாம். எழுவர் விடுதலை குறித்த எதிர்பார்ப்பு தமிழகத்தில் பெருவாரியாக நிலவுவதால், இதேபோன்ற முரண்களும் அதிகார மோதல்களும் மீண்டும் நிகழலாம். இவ்விஷயத்தில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியான அதிமுகவும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கிறது. எனவே, இது இன்னும் கூடுதலாக மத்திய – மாநில உறவு முரண்களுக்கு வழிவகுக்கலாம். அது ஆட்சி நிர்வாகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தச் சூழலில், பேரறிவாளன் வழக்கின் விசாரணை மே 4-ம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது. அப்போது நீதிபதிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என ஒட்டுமொத்தத் தமிழகமும் காத்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in