மீண்டும் துளிர்க்கும் ராஜபக்ச ராஜ்ஜியம்: என்னவாகும் இலங்கை?

மீண்டும் துளிர்க்கும் ராஜபக்ச ராஜ்ஜியம்: என்னவாகும் இலங்கை?

இலங்கையைச் சூழந்த இருள் இன்னும் அடர்த்தியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கடன் வட்டித் தவணையைச் செலுத்தத் தவறியிருக்கிறது இலங்கை. மறுபுறம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜபக்ச சகோதரர்கள் பழையபடி பலம்பெறுகிறார்கள் எனும் பேச்சுக்கள் எழுந்திருகின்றன. இன்னொருபுறம் அரசுக்கு எதிராக இனவேறுபாடுகளைக் கடந்து ஒன்றாகப் போராடியவர்கள் இனியும் அந்த ஒற்றுமையைத் தொடர்வார்களா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

அதிகரிக்கும் அழுத்தம்

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களின் எதேச்சதிகார ஆட்சியும் தவறான கொள்கைகளும்தான் காரணம் எனக் கூறி மக்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், மே 9-ல் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். முன்னதாக அவரது ஆதரவாளர்கள், அரசுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது நடத்திய தாக்குதல் பெரும் வன்முறைக்கு வித்திட்டது. பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் பலனில்லை, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று பேசிவந்த ரணில் விக்ரமசிங்கேவுக்குப் பிரதமர் பொறுப்பு வழங்கப்பட்டபோது அவரால் ஏதேனும் மாற்றம் நிகழும் எனும் நம்பிக்கை துளிர்த்தது.

அதேசமயம், நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதல் உரையிலேயே, இலங்கை எதிர்கொண்டிருக்கும் சவால்களைப் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்துவிட்டார் ரணில். அடுத்த இரண்டு மாதங்கள் மிக மோசமானதாக இருக்கும் என்று அவர் கூறியிருப்பது தற்போதைய சூழலில், கசக்கும் உண்மைதான் என்றாலும், தன்னாலான முயற்சிகளை அவர் எடுக்கத் தொடங்கினார். இலங்கை எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்த வெளிப்படையான எச்சரிக்கைகளையும் விடுத்துவந்தார். அமைச்சர்களுக்கு வழக்கமான சலுகைகள் கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் என ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு (எஃப்.ஏ.ஓ) தெரிவித்திருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில், வரலாற்றில் முதல் முறையாக தான் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டித் தவணையைக் கட்டத் தவறியுள்ளது இலங்கை. உணவு முதல் மருந்து வரை அத்தியாவசியமான பல பொருட்களை இறக்குமதி செய்துவந்த நாடு என்பதால், அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது, கடன் சுமை போன்றவற்றால் எண்ணற்ற இன்னல்களை இலங்கை சந்தித்துவிட்டது. இத்தனைக்கும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில் ஓரளவு நல்ல இடம் வகித்துவந்த இலங்கை இன்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.

கூடவே, புதிய அரசு எனும் பெயரில் அதிபர் கோத்தபய தலைமையிலான அரசே தொடர்வதால் இலங்கைக்கு உதவ பன்னாட்டு நாணய நிதியம் தயங்குவதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.

மீண்டும் ராஜபக்ச ராஜ்ஜியம்?

மக்களின் கோபத் தீயிலிருந்து தப்பி திரிகோணமலையின் கடற்படைத் தளத்தில் பதுங்கியிருந்த மகிந்த, 9 நாட்கள் கழித்து மே 18-ல் நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவரது மகன் நமல் ராஜபக்சவும் கூடவே வந்தார். இதையடுத்து, 2009 மே மாதம் முடிவுக்கு வந்த இலங்கை உள்நாட்டுப் போரில் வெற்றியைக் குவித்த மகிந்தவுக்கு சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த செல்வாக்கை நினைவுகூரும் வகையில் மீண்டும் அவர் பலம் பெறத் தொடங்குகிறாரா எனும் கேள்விகள் உருவாகின.

2010-ல் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த 18-வது சட்டத்திருத்தம் அதிபர் பதவிக்கு ஒருவர் இரு முறைதான் போட்டியிட முடியும் எனும் ஷரத்தை நீக்கிவிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனும் நிலையை உருவாக்கியது. 2015-ல் அதிபராகப் பதவியேற்ற மைதிரிபால சிறிசேனா, 19-வது சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன் மூலம் அதிபருக்கான கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் அம்சங்கள் நீக்கப்பட்டு, பிரதமருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. இரண்டு முறைதான் ஒருவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியும் எனும் சூழல் இருந்ததால், 2019 தேர்தலில் அண்ணனுக்குப் பதில் தம்பி கோத்தபய அதிபர் தேர்தலில் நின்றார். ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் அவரது வெற்றிக்குப் பெரிதும் உதவின. அதிபரான கையோடு அண்ணனுக்குப் பிரதமர் பதவியும் கிடைக்க கோத்தபய வழிவகுத்தார். முந்தைய சட்டத்திருத்தத்தை நீக்கி 20-வது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிபருக்கான அதிகாரங்களைக் குவித்தார். அண்ணன் தம்பிகளின் ஆட்டம் தொடங்கியது.

சீனா பக்கம் அதிகம் சாய்ந்தது, அளவில்லாத கடன்களை வாங்கியது, இயற்கை விவசாயம் எனும் பெயரில் விவசாயத்தை அழித்தது என அவர்கள் செய்த பல தவறுகளுடன் பெருந்தொற்றுக் கால பாதிப்புகளும் சேர்ந்துகொள்ள கடனும் கம்பலையுமாக மக்கள் தவிக்கத் தொடங்கினர்.

மனநிலை மாறுகிறதா?

இப்போதும் கோத்தபயவுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் தொடரவே செய்கின்றன என்றாலும், புதிய பிரதமர் ரணில் எடுக்கப்போகும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கிறது. சந்தடிச்சாக்கில் ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை வலுப்பெறச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். போராட்டக்காரர்களின் முக்கிய நிபந்தனையே கோத்தபய பதவிவிலக வேண்டும் என்பதுதான். ஆனால், இன்று வரை அவர் அசைந்து கொடுக்கவில்லை.

இதற்கிடையே, இரண்டு முறை அதிபராக இருந்த மகிந்த அத்துடன் அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவரது அண்ணனும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் (எஸ்எல்பிபி) எம்பி-யுமான சமல் ராஜபக்ச கூறியது கவனம் ஈர்த்தது. பொதுவாகப் பார்த்தால் மகிந்தவை விமர்சிப்பதுபோல் தோன்றினாலும், சமலின் வார்த்தைகள் நிறுவ முயல்வது அதற்கு நேரெதிரான பார்வையைத்தான். ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் தந்தை டான் ஆல்வின் ராஜபக்சவைப் போல நாட்டுக்காகச் சேவைபுரிவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் புகழாரம்தான் சூட்டியிருக்கிறார் இந்த மூத்த ராஜபக்ச.

இப்படி ஒவ்வொரு நிகழ்வும் மீண்டும் ராஜபக்ச குடும்பத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பி-யான சுமந்திரன் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது இன்னமும் கோத்தபயவுக்கான ஆதரவு குறையவில்லை என்பதையே காட்டுகிறது. அரசு எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சில ஆளுங்கட்சித் தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது என்றாலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் விஷயத்தில் காட்டப்படும் அக்கறை, மகிந்தவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து காட்டப்படவில்லை எனும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மக்களின் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீரியமடைந்த நிலையில், கோத்தபயவின் குரலில் வழக்கத்துக்கு மாறான பணிவு தென்பட்டாலும் அவரை அத்தனை எளிதில் நம்பிவிட முடியாது என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.

‘பெளத்த துறவிகள் இன்றைக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். சொல்லப்போனால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களும் கோத்தபய மீது அதிருப்தியில்தான் இருக்கின்றன’ எனப் பலர் சொன்னாலும், நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. கோத்தபய அரசுக்கு எதிரான போராட்டத்தில் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சிங்களவர்கள், தமிழர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நிற்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை சிங்களவர்களும் அனுசரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலிலும், 2009 இறுதிகட்டப் போரை ‘மனிதாபிமான அடிப்படையில்’ நடத்தியதாகக் கூறியிருக்கிறார் கோத்தபய. இறுதிகட்டப் போரில் மொத்தம் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இதைவிட அதிகமான எண்ணிக்கையில் படுகொலை நிகழ்ந்திருக்கும் என்பதே உண்மை. இதில் மனிதாபிமானம் எங்கிருந்து வருகிறது என்பது ராஜபக்ச சகோதரர்களுக்கே வெளிச்சம்!

இப்படியான சூழலில், ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக சிங்களவர்கள் மத்தியில் இன்றைக்கு எழுந்திருக்கும் இந்த எதிர்ப்புணர்வு எதிர்காலத்தில் மறையவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் கருதுகிறார்கள். பெளத்த மதத் தலைவர்கள் ‘நவீன துட்டகைமுனு’க்களாகக் கருதும் ராஜபக்ச சகோதரர்களை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

அதேசமயம் சுற்றுலா, ரப்பர், தேயிலை ஏற்றுமதி ஆகியவற்றைத் தாண்டி இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க ஒரு சில முயற்சிகளும் எடுக்கப்பட்டதை மறுக்க முடியாது.

1977-ல் இலங்கை அதிபரான ஜெயவர்தனே, இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். 1980-களில் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற இலங்கையர்கள் அனுப்பிய அந்நியச் செலாவணி ஓரளவு கைகொடுக்கத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி வன்முறைச் சம்பவங்கள் அந்தச் சூழலைக் குலைத்தன. அதில் ஜெயவர்தனே அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. ஆக, மீண்டும் பிளவுவாதங்கள் அதிகரித்தால் பிரச்சினை மேலும் கூடும்.

இனி என்ன?

ராஜபக்ச சகோதரர்கள் சீனாவையே அதிகம் சார்ந்திருந்தாலும், நெருக்கடியான நிலையில் சீனா விலகி நின்று வேடிக்கைதான் பார்த்தது. சீனாவைப் பொறுத்தவரை எல்லாமே பணம்தான். ஆனால், இலங்கைக்கு இந்தியா அளித்துவரும் உதவிகள் மிக முக்கியமானவை. 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இதுவரை இலங்கைக்கு வழங்கியிருக்கும் இந்தியா, தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. அதேசமயம், இலங்கை நெருக்கடி இந்தியா போன்ற அண்டை நாடுகளில் விவாதங்களை எழுப்பினாலும், உக்ரைன் போர் உள்ளிட்ட சமகால நிகழ்வுகளின் காரணமாக சர்வதேச அளவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.

ரணில் மீது ஓர் அமைதிப் பிம்பம் வைக்கப்படுவதும் மிகைப்படுத்தப்பட்டதுதான். காரணம், 1990-களில் நடந்த அரசியல் வன்முறைச் சம்பவங்களில் அவருக்கும் பங்கு இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேபோல், அவரது ஆட்சிக்காலத்தில் ராஜபக்ச சகோதரர்கள் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரானதே இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில், ரணில் சொன்ன இரண்டு மாதங்களையும் கடந்து இலங்கையின் இன்னல் தொடரும் என்பதே நிதர்சனம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in