மழை வெள்ளத்தால் வீடுகளுக்குப் படையெடுக்கும் பாம்புகள்

பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
மழை வெள்ளத்தால் வீடுகளுக்குப் படையெடுக்கும் பாம்புகள்
வீட்டுக்குள் நுழைந்த பாம்பொன்று...

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, தமிழகம் முழுவதும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைவது அதிகரித்திருக்கிறது. சென்னையில் மட்டும் கடந்த கடந்த 10-ம் தேதி 13 பாம்புகளும், 11-ம் தேதி 22 பாம்புகளும், 12-ம் தேதி 50 பாம்புகளும் பிடிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இவை எல்லாம் வனத் துறையினரால் பிடித்து, பாதுகாப்பாக விடப்பட்டவை. இதுதவிர தன்னார்வலர்கள் பிடித்த பாம்புகளையும், பொதுமக்களே அடித்த அல்லது விரட்டிய பாம்புகளையும் சேர்த்தால் ஆயிரத்தைத் தாண்டக்கூடும். சென்னை மாநகரிலேயே இவ்வளவு பாம்புகள் என்றால், புறநகர்ப் பகுதிகள், கிராமங்கள், மலைப்பகுதிகளில் எவ்வளவு பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் என்பதை கற்பனை செய்தால், தலை சுற்றுகிறது.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த நண்பர் வீட்டு முற்றத்தில், சுமார் 4 அடி நீளத்தில் ஒரு பாம்பு. குண்டாக இருந்த அந்தப் பாம்பின் தோற்றத்தை வைத்து, மலைப்பாம்பு குட்டி என்று தீர்மானித்துவிட்டார் நண்பர். மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து அதைக் காட்டியதுடன், செல்போனில் படம் மற்றும் வீடியோவும் எடுத்திருக்கிறார். அப்போது பயங்கரமாகச் சீறியிருக்கிறது அந்தப் பாம்பு. ஒரு கார் டயர் பஞ்சரானால் எவ்வளவு சத்தம் வருமோ அவ்வளவு உரக்கச் சீறியிருக்கிறது அது. தயவு செஞ்சு அது பக்கம் போகாதீங்க என்று அவரது மனைவி எச்சரித்துவிட்டு, கூகுள் இமேஜ் மற்றும் பாம்பு ஆர்வலர்களின் யு டியூப் வீடியோக்கள் வாயிலாக ஒப்பிட்டுப் பார்த்தபோது, அது மலைப்பாம்பு குட்டியல்ல, முதிர்ந்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் என்று தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் விழிக்க, பாம்பு மெல்ல ஊர்ந்து (அது வேகமாகச் செல்லாது, அவர்கள் மலைப்பாம்பு என்று சந்தேகிக்க இதுவும் ஒரு காரணம்!) அருகில் உள்ள புதருக்குள் மறைந்துவிட்டது. அந்த நண்பர் எனக்குப் போன் போட்டு எச்சரித்தார். ”நீங்களும் இதே பகுதியில்தானே குடியிருக்கிறீர்கள், கவனம். முட்டாள்தனமாக என் பிள்ளைகளை எல்லாம் பாம்பருகே அழைத்துவந்துவிட்டேன். ஏதாவது நடந்திருந்தால், கொட்டும் மழையில் இந்நேரத்தில் அவர்களை எங்கே கொண்டு சென்று எப்படிக் காப்பாற்றியிருப்பேன் என்றே தெரியவில்லை” என்றார். இப்படி பாம்பைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஓர் அனுபவம். சிலரோ, நஞ்சற்ற பாம்பைக்கூட பயத்தில் தலையை நசுக்கி, உடலைச் சிதைத்துக் கொன்றிருக்கிறார்கள்.

ரொனால்ட் கிளைட்டன்
ரொனால்ட் கிளைட்டன்

வருமுன் காப்போம்

மழைக்காலத்தில் இது சாதாரண பிரச்சினை என்றாலும், விழிப்புணர்வு இல்லையென்றால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதுகுறித்து முன்னாள் ராணுவவீரரும், முறைப்படி பயிற்சி பெற்று மதுரையில் பாம்பு பிடிக்கிற தன்னார்வலருமான ரொனால்ட் கிளைட்டனிடம் பேசினேன்.

”வருமுன் காப்பதே எல்லாவற்றையும்விடச் சிறந்தது. பாம்புகள் அடைவதற்கு உகந்ததாக கருதப்படுகிற பழைய தட்டுமுட்டுச் சாமான்கள், நீண்ட குழாய்கள், கற்குவியல் போன்ற தேவையற்ற பொருட்களையும், புதர்களையும் மழைக்காலத்தில் அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல எலிகள் வராத அளவுக்கு வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மீந்த உணவு, சமையலறைக் கழிவுகள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல், வீட்டு வாசலிலோ, வீட்டிற்குள்ளேயோ தொடர்ந்து வைக்கிறபோது அவற்றைத் தின்ன எலிகள் வரும். அந்த எலிகளை வேட்டையாடுவதற்காக பின்னாலேயே பாம்புகள் வரும். வீட்டருகே உள்ள மரங்களின் கிளைகள் ஜன்னலைத் தொடுமளவுக்கு வளர்ந்திருந்தால், அந்தக் கிளைகளை வெட்டிவிட வேண்டும் (மரத்தை அல்ல). இல்லை என்றால் மரம் ஏறத்தெரிந்த கொம்பேறி மூக்கன், சாரை, நல்லபாம்பு போன்றவை வீட்டிற்குள் நுழையும் வாய்ப்புண்டு. சில நேரங்களில் 2-வது, 3-வது தளத்தில் உள்ள வீடுகளில் கூட பாம்புகள் நுழைந்துவிடுகின்றன. அதற்குக் காரணம், கழிவுநீர் குழாய்களில் சல்லடை பொருத்தாததுதான். ஒரு இன்ச் அகலமுள்ள துளை இருந்தால்கூட அதன்வழியே, 6 அடி நீளமுள்ள பெரிய பாம்பே நுழைந்துவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பதற்றப்படாதீர்கள்...

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது உண்மைதான். அதைப் பார்த்தவுடனே நமக்குப் பயம் வருவதும் இயல்புதான். ஆனால், நம் கண்ணில்படும் பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்ற சாதாரண பாம்புகள்தான். உலகில் 2000 வகைப்பாம்புகள் இருக்கின்றன என்றால், அதில் இந்தியாவில் இருப்பது 400 வகையான பாம்புகள்தான். தமிழ்நாட்டில், குடியிருப்பு பகுதிக்குள் அதிகம் தென்படுவது வெறும் 15-25 வகைப் பாம்புகளே. அதிலும் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டைவிரியன் ஆகிய வெறும் 4 வகை பாம்புகள் மட்டும்தான் விஷம் கொண்டவை. இன்னும் சில பாம்புகள் விஷப்பாம்புகள் போலவே போலியான தோற்றம் கொண்டவை. எவை எல்லாம் விஷமுள்ளவை, விஷமற்றவை என்ற புரிதல் இருந்தாலே பாதி பயம் போய்விடும். பொதுவாக விஷப்பாம்புகளான கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நல்ல பாம்பு போன்றவை இரவில்தான் அதிகம் வெளியேவரும். ரொம்ப அபூர்வமாக இரவில் சாப்பிட்ட இடத்திலேயே தங்கிவிட்டு, பகலில் தன் வசிப்பிடத்துக்குத் திரும்பும் வழியில் நம் கண்ணில்படலாம். நான் பிடித்த பெரும்பாலான விஷப்பாம்புகள் இரவு 8 மணிக்கு மேல் தகவல் கிடைத்துப் போய்ப்பிடித்தவைதான்.

பொதுவாக புத்தகம், புகைப்படம் வாயிலாக பாம்புகள் குறித்து அறிந்திருந்தாலும், வேகமாக நகர்கிற பாம்பைப் பார்த்ததும் அது விஷப்பாம்புதான் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு. எனவே, பாம்புகளை இனம் காண்பதில் சிரமம் இருந்தால், அதன் அருகே செல்லாமல் இருப்பது நல்லது. எப்படி ஆம்புலன்ஸ் மற்றும் அவசர போலீஸ் எண்களை நினைவில் வைத்திருக்கிறோமோ அதைப்போல வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை எண்களை மனதில் வைத்துக்கொள்வது நல்லது. கூடவே, பாம்பு பிடிக்கிற ஆர்வலர்களின் எண்களையும் பதிவு செய்துவைத்துக்கொண்டால், இதுபோன்ற நேரங்களில் பயன்படும். அவர்கள் வரும்வரையில், பாம்பைக் கொல்லாமல், தூரத்தில் இருந்தே கண்காணித்தால் மட்டும்போதும். தயவு செய்து எல்லாப் பாம்புகளையும் கொல்ல நினைக்காதீர்கள். அது எலிகளின் பெருக்கத்துக்குக் காரணமாகி, விவசாயத்துக்கும், நமக்கும் பெரிய தொல்லையைக்கொடுத்துவிடும். நீங்கள் காப்பாற்றுகிற ஒவ்வொரு பாம்பும் சுற்றுச்சூழலுக்கு நீங்கள் செய்கிற பேருதவிக்குச் சமம். மரம் நடுவதைவிட முக்கியமான பணி இது.

இதுவரையில் ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்திருக்கிறேன். அதில் விஷப்பாம்புகளும் உண்டு. ஓரிரு முறை கடியும் வாங்கியிருக்கிறேன். பாம்பு விஷத்தைவிட, பயத்தில் இறந்தவர்கள்தான் அதிகம். ’கண்டது பாம்பு, கடித்தது கருக்கு, தின்றது மருந்து, கொன்றது வைத்தியன்’ என்றொரு பழமொழியே உண்டு. எனவே, பதற்றமில்லாமல் இருங்கள். பாம்புக்கும் இந்தப் பூமியில் வாழ உரிமையுண்டு என்பதை மறக்காதீர்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in