இளைஞர்களை அடிமைகளாக்கும் ஸ்மார்ட்போன்கள்!

எப்படி மீட்கப்போகிறோம் எதிர்கால இந்தியாவை?
இளைஞர்களை அடிமைகளாக்கும் ஸ்மார்ட்போன்கள்!

மோகனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டு இருந்ததைப் போல் தோற்றம் அளித்தது. வகுப்பில் மிகவும் பிரகாசமான மாணவர் அவர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார். ஆனால், அதற்குப் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை, மதிப்பெண்கள் வெகுவாகக் குறையத் தொடங்கின. 12-ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்தது. நன்கு பிரசித்திபெற்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தும், அவரால் ஜேஈஈ தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை; ஐஐடி-யிலும் சேர முடியவில்லை. அதன் பின்னர், வீட்டுக்கு அருகிலிருக்கும் கல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கச் சேர்ந்தார். கடமையே என அதை வேண்டா வெறுப்பாகப் படித்து பார்டரில் தேர்ச்சி பெற்றார். இன்று தன்னால் ஒரு கணிதத்தைக்கூட தீர்க்க முடியவில்லை என்று அவர் விரக்தியுடன் கூறுகிறார்.

தன்னுடைய இந்த நிலைக்குத் தோல்வியில் முடிந்த தனது காதலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம் என புலம்பினார் மோகன். அவரது பெற்றோரும், அவரின் இந்த நிலைக்குக் கூடா சேர்க்கை, கவனக்குறைவு, உணர்ச்சிச் சிக்கல்கள் போன்றவற்றையே காரணங்களாகச் சொன்னார்கள். ஆனால், அனைவரும் ஒன்றை மட்டும் மறந்துவிட்டனர், அது மோகனுக்கு மிகவும் நெருக்கமான, அவருடன் எப்போதும் இருக்கும் ஸ்மார்ட்போன். ஆம், மோகனைப் போன்ற பல இளைஞர்களின் வாழ்க்கைச் சிக்கலுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு முதன்மைக் காரணியாக இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு அடிமையாதலே, இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை.

அடிமைகளின் உலகம்

ஏதோ ஒரு நடத்தைக்கு அல்லது செயல்பாட்டுக்கு அடிமையாதல் (பிஹேவியரல் அடிக்ட்ஸ்) என்று அழைக்கப்படுவதை வல்லுநர்கள் நீண்ட காலமாக அங்கீகரித்து வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் எப்படி ஒரு பொருளைச் சார்ந்து இருக்கிறார்களோ அதே போன்று நடத்தைக்கு அடிமையானவர்கள் – சூதாட்டக்காரர்கள், கிளெப்டோமேனியாக்கள் போன்றவர்கள், ஒரு செயலைச் செய்வதிலிருந்து ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள்.

இந்தியாவில் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாதல் குறித்த மருத்துவ ஆய்வறிக்கைகள் மிகவும் குறைந்த அளவே வெளிவந்திருக்கின்றன. எனினும், இதுவரை நடத்தப்பட்ட சொற்ப ஆய்வுகளும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் பதிவுசெய்திருக்கின்றன. ஓர் ஆய்வு, இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களை அதிக அளவு சார்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. 2014-ல் வெளிவந்த மற்றொரு ஆய்வறிக்கை, இளைஞர்களிடையே ஸ்மார்ட்போன் சார்ந்து பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டியது.

பலரைப் போன்று, சாதாரண ஸ்மார்ட்போனிலிருந்து தொடுதிரை ஸ்மார்ட்போனுக்கு மாறியவுடன் போனுடன் செலவிடும் நேரம் மோகனுக்கும் அதிகரித்தது. தினமும் 12 மணிநேரத்துக்கு மேல் ஸ்மார்ட்போனுடன் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறுகிறார். தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் - அப், இரண்டு ஃபேஸ்புக் கணக்குகள், யூடியூப் போன்றவை அவருடைய நேரம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டன. ஒரு நாளைக்கு 400 முறைக்கு மேல் ஃபேஸ்புக் கணக்கில் மாறி மாறி நுழைந்து வெளிவரும் அளவுக்கு மோகன் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகி இருந்துள்ளார். சில நாட்கள், வேறு எந்தச் செயலிலும் ஈடுபடாமல், ஸ்மார்ட்போனுடன் மட்டும் முழுநேரத்தையும் செலவிட்டதாக மோகன் கூறுகிறார்.

எல்லா வயதினரையும் பாதிக்கும்

இது ஒன்றும் விநோதமான நிகழ்வு அல்ல என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் இரு சகோதரர்கள் தேர்வு எழுத மறுத்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஸ்மார்ட்போனைப் பறிக்க அவர்களுடைய பெற்றோர் முயன்றபோது, அந்தச் சகோதரர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மோகனின் நண்பர் ஒருவருக்கும் மோகனின் நிலையே ஏற்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் வசிக்கும் அவர், பப்ஜி கேம் விளையாட வேண்டும் என்கிற காரணத்துக்காக, கல்லூரி செல்ல மறுத்து, தந்தையின் கடையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறி, தொலைதூர கல்வித் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாதல் என்பதை இளைஞர்களை மட்டுமே பாதிக்கும் நிகழ்வு என்று சுருக்கிக்கொள்ள முடியாது. இது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது. முதியவர்களும் இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மோகனின் நண்பர் ஒருவர், அவர் தந்தையின் வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸை இரவு 12 மணிக்குப் பார்த்திருக்கிறார், அடுத்த நொடியே அவருடைய தந்தையிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. தந்தை தன்னை கடிந்துகொள்ளப் போகிறார் என்கிற அச்சத்துடன் போனை எடுத்தவருக்கு அதிர்ச்சி. “என்னுடைய முதல் ஸ்டேட்டஸை பார்த்த முதல் நபர் நீ” என்று மோகனின் நண்பரை அவருடைய தந்தை பாராட்டியிருக்கிறார்.

கிராமப்புறங்களில் விளைநிலங்களில் விவசாயிகளைப் பார்ப்பது எப்படி நமக்கு ஆச்சரியமளிப்பது இல்லையோ, அதே போன்று இன்று நகர்ப்புறங்களில் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கும் இளைஞர்களைப் பார்ப்பது நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இல்லை. ஸ்மார்ட்போனில் மூழ்கியவாறே நடக்கும் இளைஞர்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் அல்லது பள்ளங்களில் தவறி விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு என்றே தனி நபரை நியமிக்க வேண்டும் போலிருக்கிறது. இது பகடி அல்ல; இதுவே இன்றைய எதார்த்த நிலை.

மீட்பு மையங்கள்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாதல் பற்றிய ஆராய்ச்சி வெளிவந்தபோது, அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் மட்டுமே அதில் கவனம் செலுத்தினர். குடும்பம் குடும்பமாக மனநல உதவியை நாடத் தொடங்கிய பின்னரே, மனநல நிபுணர்கள் அதற்குப் பதிலளிக்கத் தொடங்கினர்.

2014 ஜூன் மாதம், இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் அடிமையாதல் மீட்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் டெல்லியிலும் ஒரு மீட்பு மையம் தொடங்கப்பட்டது. 2019-ல் புணே நகரில் ஒரு மீட்பு மையம் அமைக்கப்பட்டது, பின்னர் உத்தர பிரதேச மாநிலத்தில் மூன்று மையங்களும், பஞ்சாபின் அமிர்தசரஸில் ஒரு மையமும் தொடங்கப்பட்டன.

இன்றே செயலில் இறங்க வேண்டும்

இன்றைய இளைஞர்களின் மன-வெளி, ஓய்வு நேரம், படைப்பாற்றல் ஆகியவை மெல்ல மெல்ல நிஜ உலகத்திலிருந்து விலகி, ஸ்மார்ட்போன்களுக்குள் சிறைப்பட்டுக் கொள்கின்றன. இந்தப் போக்கு அபாயகரமான அளவில் வீரியத்துடன் அதிகரித்துப் பரவிவருகிறது. சிகிச்சைகள் இதற்கு உதவும் என்பதே மனநல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மோகன்கூட இன்று சிகிச்சையில்தான் இருக்கிறார். முன்பு 12 மணிநேரத்துக்கு மேல் போனுடன் மட்டும் வாழ்ந்தவர், இன்று அதை 7 மணி நேரமாக குறைத்திருக்கிறார்.

ஆம், இந்தப் பிரச்சினைக்கு முழுவதுமாகத் தீர்வளிக்கும் மந்திர மருந்து என்று எதுவும் கிடையாது. மற்ற அடிமையாதல் மீட்பைப் போன்று, ஸ்மார்ட்போனுக்கு அடிமையானவர்களை மீட்பதும் சவால் மிக்கதே. இதில் முன்னேற்றம் மெதுவாகவே கிட்டும். மீண்டவர்கள் மீண்டும் சறுக்கிவிழும் சாத்தியமும் அதிகம். 2026-ல் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும் என சொல்லப்படும் சூழலில், இந்த ஆபத்தின் வீரியமும் இழப்பும் ஒட்டுமொத்த நாட்டையும் பின்னுக்கு இழுப்பவையாக மாறக்கூடும். இதைக் கருத்தில்கொண்டு இன்றே செயலில் இறங்குவது வரப்போகும் ஆபத்தைச் சற்றே மட்டுப்படுத்த உதவும்!

Related Stories

No stories found.