உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிச்சயதார்த்தம்... அதிர வைத்த தன்பாலின தம்பதி!

அனன்யா கோட்டியா, உத்கர்ஷ் சக்சேனா
அனன்யா கோட்டியா, உத்கர்ஷ் சக்சேனா

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த  தன்பாலின  ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே மோதிரம் மாற்றி தங்கள் நிச்சயதார்த்தத்தை செய்து முடித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கியது. 

அப்போது இவ்வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சட்டம் இயற்றும் அதிகாரம் தங்களுக்கு கிடையாது என்பதை சுட்டி காட்டிய நீதிபதிகள்,  மத்திய அரசின் முடிவிற்கு இதனை விட்டுவிட்டனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் அரசு பாகுபாடு காட்டக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து டெல்லியைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களும் வழக்கறிஞர்களுமான அனன்யா கோட்டியாவும், உத்கர்ஷ் சக்சேனாவும் உச்சநீதிமன்றத்தின் முன்பு மோதிரம் மாற்றி நேற்று தாங்கள் நிச்சயம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான படங்களை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனன்யா கோடியா வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று வருத்தத்திற்கு உள்ளானோம். இன்று உத்கர்ஷ் சக்சேனாவும் நானும் நீதிமன்றம் சென்றோம். எங்கள் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில், நாங்கள் மோதிரம் மாற்றிக்கொண்டோம். அதனால், இந்த வாரம் சட்ட இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிச்சயதார்த்தமும் நடந்த வாரம். நாங்கள் மீண்டும் போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் உச்ச நீதிமன்றம் முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in