அமெரிக்காவில் வீசிய சூறைப் புயலுக்குப் பருவநிலை மாற்றம் காரணமா?

அமெரிக்காவில் வீசிய சூறைப் புயலுக்குப் பருவநிலை மாற்றம் காரணமா?

ஆர்கன்சாஸ் தொடங்கி கென்டகி வரை, அமெரிக்காவின் பல மாநிலங்களைப் புரட்டிப்போட்டிருக்கிறது சூறைப் புயல் (tornado). டிச.10 இரவில் ஏற்பட்ட இந்தச் சூறைப் புயலில், இதுவரை 90 பேர் உயிரிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது. கென்டகியில் 80 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இல்லினாய்ஸ், டென்னஸி, ஆர்கன்சாஸ், மிசெளரி எனப் பல மாநிலங்களில் இந்தச் சூறைப் புயலால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த முழுமையான விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

வீடுகள், தொழிற்சாலைகள் என ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன. கென்டகியின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத பேரழிவு இது எனக் கருதப்படுகிறது. அம்மாநில ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று, இதை ஒரு முக்கியப் பேரழிவாக அறிவித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

இந்தச் சூறைப் புயல் உருவானதில், பருவநிலை மாற்றத்தின் பங்கு என்ன என்பதை ஆராயுமாறு அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திடம் கேட்கப்போவதாக பைடன் அறிவித்திருக்கிறார். பருவநிலை மாற்றத்தின் விளைவாகவே இந்தச் சூறைப் புயல் ஏற்பட்டிருப்பதாகப் பல ஊடகங்கள் பொதுவாகக் குறிப்பிட்டுவரும் நிலையில், இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

இடியுடன்கூடிய புயல்களிலிருந்து (thunderstorms) சூறைப் புயல்கள் உருவாகின்றன. அவை புயல்களைப் போல் அல்லாமல் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் சுழன்றடிக்கக்கூடியவை. செங்குத்தான காற்று சுழற்சியாகவே அவை முன்னேறிச் செல்லும். அதிவேகத்தில் சுழன்றடிக்கும் சூறைப் புயல்கள் சில நேரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்த நேரத்திலும் சூறைப் புயல்கள் வீசும். எனினும், கோடைகாலத்திலும், இளவேனிற் காலத்திலும் வீசும் சூறைப் புயல்கள்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் வீசும் சூறைப் புயல்கள் கடும் சேதத்தை ஏற்படுத்துவது என்பது அரிதானது. 1999-க்குப் பிறகுதான், கடும் சேதத்தை விளைவிக்கும் சூறைப் புயல்களை அமெரிக்கா சந்தித்துவருகிறது.

கென்டகி மாநிலத்தில் சூறைப் புயலால் உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்கள்
கென்டகி மாநிலத்தில் சூறைப் புயலால் உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்கள்

இந்த ஆண்டில் வட அமெரிக்காவில் நிலவிய கடும் வெப்பம், ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்றே கருதப்படுகின்றன. இந்தச் சூழலில்தான் அமெரிக்கச் சூறைப் புயல்களுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

ஆனால், இப்போதைக்கு இரண்டுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அத்தனை எளிதாகச் சொல்லிவிட முடியாது என்றே நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சூறாவளிகள் (hurricanes), அதீத மழைப்பொழிவு, வெள்ளம் போன்றவற்றைப் பருவநிலை மாற்றத்துடன் பொருத்திப் பார்ப்பதுபோல, சூறைப் புயல்களைப் பொருத்திப் பார்ப்பது கடினம் என்றே நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுதொடர்பாக நடக்கும் ஆய்வுகள், பல புதிய உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என நம்பலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in