வெள்ளம் வந்தாலும் வரவேற்போம்!

இயற்கையை சமாளிக்கவே ஒரு இல்லம் கட்டிய கேரள தம்பதி
வெள்ளம் வந்தாலும் வரவேற்போம்!
குடும்பத்தினருடன் புருஷன்...

சொந்தமாக நல்லதொரு வீடுகட்டிக் குடியேறுவது பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், வீட்டுமனை மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பலரும் வாங்கிக் கட்டி குடியேறும் பகுதிகளின் லட்சணம் பெருமழையிலும், அதனால் ஏற்படும் வெள்ளத்திலும் பல் இளித்துவருகிறது!

நீர் தன் வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கும்போது, வழியில் புதிதாக முளைத்த குடியிருப்புகளில் வசிப்போரை வீட்டைவிட்டே வெளியே வரமுடியாமல் முடக்கிப் போடுகிறது. ஆனால், இப்படியான சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கேரளத்தில் பெருமழை, வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாகவே ஒரு வீடு பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய வீட்டை அக்கம் பக்கத்தினர் வந்து ஆச்சரியம் விலகாமல் பார்த்துச் செல்கின்றனர்

வீட்டின் முகப்புத் தோற்றம்...
வீட்டின் முகப்புத் தோற்றம்...

கேரளத்தின் எர்ணாகுளம், எலூர் பகுதியைச் சேர்ந்த புருஷன் (பெயரே அதுதான்!) தான் இந்த அதிசய வீட்டின் சொந்தக்காரர். வீட்டுக்குள் நுழைந்ததுமே அந்த வீட்டின் கீழ்தளம் கட்டப்படாமல் காலியாகக் கிடக்கிறது. முதல் தளத்தில் இருந்து தான் வீடே ஆரம்பிக்கிறது. கீழ்தளத்தில் கட்டப்படாவிட்டாலும் முழுக்க திறந்த வெளியாகவே இருக்கிறது. அது கார் ஷெட்டோ, பைக் நிறுத்தும் பகுதியாகவோகூட கட்டமைக்கப்படவில்லை. அந்த காலி இடத்துக்குப் பின்னால் வலிகள் நிறைந்த ஒரு கதை இருக்கிறது.

கடந்த 2018-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த வீட்டில் 8 அடிக்கு தண்ணீர் நின்றது. அதனால் அப்போது பட்ட வேதனைகளை எல்லாம் மனதில் வைத்து, இப்போது பத்தரை அடி பரப்பை இரு பக்கமும் திறந்ததுபோல் காலியாகவே விட்டுவிட்டு உயரத்தைக் கூட்டி மேல்தளத்திலிருந்து வீட்டைக் கட்டியெழுப்பியிருக்கிறார் புருஷன்.

இதை நம்மிடம் காட்டிக்கொண்டே பேசத் தொடங்கிய அவர், “மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தாலும் அதனால் வீடு மூழ்காது. ஒருபக்கத்தில் இருந்து ஓடிவரும் தண்ணீர், வீட்டில் காலியாக திறந்தவெளியில் இருக்கும் பகுதி வழியாக வீட்டைத் தாண்டி ஓடிவிடும்’’ என்றார்.

மேல்பகுதியிலும் மரம்...
மேல்பகுதியிலும் மரம்...

“வீட்டோட தரையில் பலரும் டைல்ஸ், கிரானைட் எனப் போடுவார்கள். ஆனால், என் வீட்டில் முதல் தளத்தில் பச்சை, மஞ்சள் நிறங்களோடு, ஆக்ஸைடையும் சேர்த்து பெயின்டிங் பிரஷ்ஷில் அதை நனைத்து வெறுமனே கையால் உதறினேன். இது அழகான டிசைனாகிவிட்டது. இதனால் செலவு மிச்சமானது. இதேபோல் வீட்டுக்குள் பணம் கொடுத்து பர்னிச்சர் வாங்கிப் போடாமல் வாகை மரத்தில் மீட்டிங் ஹால் போல் அமைத்துவிட்டேன். வீட்டின் மேல்பகுதியில் கான்கிரீட் எல்லாம் போடவில்லை. அதற்குப் பதிலாக மரத்தடிகளைக் கொண்டே மேல்பகுதியை அமைத்துள்ளேன். அதற்கு மேலே மூன்றரை அடி உயரத்தில் கான்கிரீட் அமைத்துள்ளேன். வீட்டில் தூண்களுக்குப் பதிலாக பனை மரத் தடிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். இது பார்க்கவே அலங்காரமாகவும் இருக்கும்.

வீட்டின் 2-வது மாடியில் பார்வையாளர் அறை மற்றும் சமையலறையில் தரைப்பகுதி முழுவதும் மரம் தான். நான் வீடுகட்டிக் கொடுக்கும் கான்ட்ராக்டராக இருக்கிறேன். நான் வேலைசெய்த சைட்களில் மிச்சம் கழிவாகத் தேங்கிய மரத்துண்டுகளை வைத்தே இதைக் கட்டினேன். இதனால் மரச் செலவும் குறைந்துபோனது. வாஷ்பேஷின் பகுதியை வழக்கமாக டைல்ஸில் அமைப்பார்கள். ஆனால் நான் அதையும் மிச்சம் இருந்த மரத்துண்டுகளைக் கொண்டே செய்தேன்” என்று புருஷன் சொல்லச் சொல்ல, நமக்கும் ஆச்சரியம் மேலிடுகிறது.

காற்றுக்காக...
காற்றுக்காக...

வீட்டின் கதவுகளை தனது பழைய வீட்டின் கதவு, ஜன்னலின் கூல்களோடு உமி, வைக்கோல் உள்ளிட்டவைகளைச் சேர்த்து செய்துள்ளார். “ஒருவேளை, மழை வெள்ளம் வந்தால் சமாளிக்க வேண்டும் அல்லவா... அதற்கு ஏற்ற வகையில் கதவுகளையும் செய்தேன்” என்கிறார் புருஷன்.

வீடு முழுவதும் வழக்கமான கட்டுமானப் பொருட்கள் குறைக்கப்பட்டு, மர வேலைப்பாடுகளே மிதமிஞ்சி இருக்கின்றன. சமையலறையிலும்கூட மர வேலைகளுக்குப் பஞ்சமில்லை. இதேபோல் தரைப்பகுதியிலும் டைல்ஸுக்குப் பதிலாக ரெட் ஆக்ஸைடே பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்து 2-வது தளம்வரை வீட்டின் இரு ஓரங்களிலும் 2 காற்று வெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. இது காற்றுச் சுழற்சிக்கு வழிவகுக்கும் என்பதால், இப்படிச் செய்துள்ளாராம் புருஷன்.

வீட்டின் கீழ்ப்பகுதியை மழை வெள்ளம் தடங்கலின்றி செல்லும் பாதைக்காக ஒதுக்கிவிட்டதை பெருமிதத்துடன் சொன்ன புருஷன், “இப்போது 10 அடி வரைக்கும் தண்ணீர் வந்தால்கூட எங்களுக்குச் சிக்கல் இல்லை. அதற்குமேல் வந்தாலும் பெரிதாக சிக்கல் இல்லை. ஏனென்றால், இந்த வீட்டில் சராசரி வீட்டைப் போல் எதுவும் கொண்டு நிர்மாணிக்கவில்லை. அத்தனையும் மரத்தாலேயே கட்டியெழுப்பியிருக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் அடர்ந்த வனத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கு சதா சர்வகாலமும் பேய் எனப் பெருமழை பெய்துகொண்டே தானே இருக்கிறது. அதைத்தாங்கித் தானே மரங்கள் வளர்கின்றன? இயற்கையை எதிர்த்துப் போராடித் தாக்குப்பிடிக்கும் வல்லமை இன்னொரு இயற்கைக்குத்தான் இருக்கிறதே ஒழிய மனிதக் கண்டுபிடிப்புகளுக்கு இல்லை. அதனால்தான் எனது இந்த வீட்டில் மரவேலைப்பாடுகளைப் பிரதானம் ஆக்கிவிட்டேன்.

தரைப்பகுதியிலும் மர வேலை....
தரைப்பகுதியிலும் மர வேலை....

இந்த எலூர் பகுதியில்தான் பல தலைமுறைகளாக வசிக்கிறோம். 2018 பெருவெள்ளத்தில் எங்கள் வீடே தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது. இருந்தாலும் நம் பாரம்பரியமான இடத்தை விட்டு விட்டு வெள்ளத்திற்கு பயந்து நாடோடியாக ஓட முடியாது என தீர்மானித்தேன். இன்னும் சொல்லப்போனால், கேரளத்தில் இப்போதெல்லாம் ஆண்டுதோறும் வெள்ளம் வருகிறது. அதை எதிர்கொள்ளப் பழகிக்கொள்ள முடிவெடுத்துதான் இப்படியொரு வீட்டைக் கட்டினேன். இப்போது வெள்ளம் வந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.

கடந்த முறை வெள்ளத்தில் மூழ்கியபோது 8 அடிக்கு என் வீட்டுச் சுவர்களில் களிமண் ஒட்டிக் கிடந்தது. ஆனால், அது சாதாரண களிமண் போல் எனக்குத் தெரியவில்லை. அந்தக் களிமண்ணில் அசாதாரண மணம் இருந்தது. அதை எடுத்து வெள்ளத்தின் நினைவாக வீட்டில் ஒரு பவுலில் சேகரித்து வைத்தேன். வெள்ளம் வடிந்ததும், சுவற்றில் இருந்த எஞ்சிய களிமண்ணையும் சுத்தம் செய்துவிட்டு அதேவீட்டில் தான் இருந்தோம்.

வெள்ளம் வடிந்து ஒருவருடம் ஆன நிலையில், என் வீட்டின் ஒருபகுதி மழை பெய்யாத போதே இடிந்துவிட்டது. நான் சேமித்து வைத்திருந்த களிமண்ணை அப்போதுதான் எடுத்து ஆய்வுக்குக் கொடுத்தேன். அதில், ரப்பர் தோட்டங்களில் அதிகமாகப் பயன்படுத்தும் ஆசிட்களின் தன்மையும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்களும் அதிகமாக இருந்தது. அவைதான் காலப்போக்கில் வீடு இடியவும் காரணமாக இருந்திருக்க வேண்டும் என அனுமானத்துக்கு வந்தேன். எங்கள் வீடு ஒரு காலத்தில் எப்படித் தத்தளித்தது என்பதை தலைமுறைக்கும் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் களிமண்ணை பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னார்.

இந்த வீட்டைக் கட்டமைப்பதில் தனது மனைவி லிட்டியும் பெரும்பங்காற்றி இருக்கிறார் என்பதை, பேச்சின் ஊடே அவ்வப்போது குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார் புருஷன். மலையாள தேசத்து மக்கள் மழை வெள்ளத்தைக் கண்டாலே அஞ்சுகிறார்கள். ஆனால், புருஷனின் குடும்பம், எந்த நேரம் வெள்ளம் வந்தாலும் அதை இன்முகத்துடன் வரவேற்று வழியனுப்பக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in