சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்களில் 4-வது நாளாக சோதனை

சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்களில் 4-வது நாளாக சோதனை
சேவியர் பிரிட்டோதி இந்து

நடிகர் விஜய்யின் உறவினரும், மாஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து ஓப்போ, ரெட்மி மற்றும் பிளாக்பெரி, ஐபோன் போன்ற 9 வகையான செல்போன் நிறுவனங்களுக்கு, செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சீன நிறுவனங்கள் பெரும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும், அந்த வருமானத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 3 நாட்களாக சீன செல்போன் நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாக்ஸ்கான் தொழிற்சாலையிலும், அதற்குள் இருக்கும் சீன நிறுவனங்களின் தொழிற்சாலையிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று(டிச.23) நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கொட்டிவாக்கம் நேரு நகர் ஓப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ள சீன நிறுவனங்களிலும் ஒரேநேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் சீன செல்போன் உதிரி பாகங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வந்த விஜயின் உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ‘கெர்ரி லாஜிஸ்டிக்’ நிறுவனத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள சேவியர் பிரிட்டோவினுடைய பங்களா வீடு, ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முதல் 2 நாட்களிலேயே சோதனை நிறைவடைந்தது.

இந்நிலையில், சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ராயப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் 4-வது நாளாக வருமானவரித் துறையினர் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்போடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சோதனையின் முடிவிலேயே, இதுகுறித்த முழுத் தகவலையும் வருமானவரித் துறை தெரிவிக்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in