நாளை நள்ளிரவு முதல் மறுநாள் காலைவரை பொதுப் போக்குவரத்துக்கு தடை

பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார்
நாளை நள்ளிரவு முதல் மறுநாள் காலைவரை பொதுப் போக்குவரத்துக்கு தடை
சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பேரில் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுக்கு கொண்டுவர, சென்னையில் நாளை நள்ளிரவுக்கு மேல் பொது வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை காவல் துறை தடை விதித்துள்ள நிலையில், நாளை (டிச.31) இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகனப் போக்குவரத்தைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிச.31நள்ளிரவு 12.00 மணியிலிருந்து அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்துக்கு நாளை மறுநாள்(ஜன.1) காலை 05.00 மணிவரை அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட காலநேரங்களை கவனத்தில் கொண்டு, தங்களின் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு சென்னை காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், சென்னையில் பாதுகாப்புப் பணிகளுக்காக, 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.