
டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டவரை, கறுப்பு பூஞ்சை தாக்குவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுமிடமாக டெல்லி மாறி வருகிறது. கரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், டெங்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே டெல்லி தனியார் மருத்துவமனையில், டெங்கு தாக்கி குணமான ஆண் ஒருவருக்கு கறுப்பு பூஞ்சை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. 49 வயதான அவர் ஓர் இணைநோயர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இணைநோயர்களின் கண்களில், கறுப்பு பூஞ்சை பாதிப்பு கணிசமாக அடையாளம் காணப்பட்டது. 2-ம் அலை பரவலின்போது, இந்தக் கறுப்பு பூஞ்சை பரவலை மருத்துவர்கள் பெரும் சவாலாக எதிர்கொண்டனர். சிகிச்சை அளிக்கத் தவறினாலோ, தாமதமானாலோ பார்வை பறிப்பு முதல் மூளைக்கு தொற்று பரவல் வரையிலான ஆபத்துகள் அதில் அடங்கி இருந்தன.
தற்போது கரோனா வழியில், டெங்கு பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கும் கறுப்பு பூஞ்சை பாதித்திருப்பது குறித்து கவலை தெரிவித்திருக்கும் மருத்துவர்கள், அவை தொடர்பாக மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.