மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி: கல்லூரி பேராசிரியர் கைது
பேராசிரியர் தமிழ்ச்செல்வன்

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி: கல்லூரி பேராசிரியர் கைது

சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன்(36) என்பவர், ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். தொடர்ந்து, இதேபோல் பல மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளோடு, 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று(நவ.30) மதியம் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சிஎம்பிடி போலீஸார் மற்றும் கல்லூரி முதல்வர் தங்கவேல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகளிடம் சமாதானமாகப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று(டிச.1) காலை கல்லூரி முதல்வர் தங்கவேல் அளித்த புகாரின் பேரில், சிஎம்பிடி போலீஸார் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து பேராசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.