அலையவேண்டாம்... அருகிலேயே மனு கொடுக்கலாம்!

கடலூர் ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு
அலையவேண்டாம்... அருகிலேயே மனு கொடுக்கலாம்!
ஆட்சியர் பாலசுப்ரமணியம்

‘பொதுமக்கள் தேவையற்ற அலைச்சல், போக்குவரத்து, காலவிரயம் ஆகியவற்றை தவிர்க்க தங்களுக்கு அருகிலேயே இருக்கும் அதிகாரிகளிடம் மனுக்களை அளியுங்கள்’ என அறிவுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம்.

மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கவே பெரும்பாலும் விரும்புவார்கள். அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்கப்படுவது வழக்கம். இதற்காக ஏற்படும் அலைச்சல், போக்குவரத்து செலவு, காலவிரயம் ஆகியவற்றை தவிர்க்க தங்களுக்கு அருகிலேயே இருக்கும் அதிகாரிகள் அலுவலர்களிடம் மனுக்களை கொடுக்கலாம், அவர்கள் அதற்கான தீர்வை அளிப்பார்கள் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக தங்களின் வசிப்பிடங்களுக்கு அருகேயுள்ள தீர்வு காணும் தொடர்புடைய அதிகாரிகளிடம் (கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்/சார் ஆட்சியர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள், மேலாளர் முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோரிடம் இனிமேல் மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காலத்தில் முடிவு செய்திட மேற்காணும் அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போக்குவரத்து செலவு மற்றும் காலம் விரயமாவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகமோ அல்லது தலைமை செயலகமோ சென்று மனு செய்யாமல், தொடர்புடைய தீர்வு காணும் அலுவலர்களிடம் மனுக்களை அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

அறிவிப்பு நல்லாத்தான் இருக்கு. அதிகாரிகள் இதை ஆக்கபூர்வமாகவும், அக்கறையுடனும் செயல்படுத்தி பொதுமக்களின் குறைகளைத் தீர்த்தால் இன்னும் மெச்சலாம்!

Related Stories

No stories found.