மாவீரன் பிரபாகரனுக்கு கார் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கினார்
மாவீரன் பிரபாகரனுக்கு கார் பரிசு

விளையாடக் களமிறங்கிவிட்டாலே வீரன் என்ற பெயர் கிடைத்துவிடுகிறது. மற்ற விளையாட்டுகள் எப்படியோ, ஜல்லிக்கட்டில் களமிறங்குபவர்கள் நிச்சயம் வீரர்கள்தான். தமிழக அளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றான பாலமேடு ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு உறுதிமொழியேற்புடன் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தன.

முடிந்தால் தொட்டுப் பார் என்று வாடிவாலில் இருந்து மிரட்டலாக சீறிக்கொண்டு பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்கா காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டில், பீரோ, தங்கக் காசு, ரொக்கப் பரிசு என்று திறமையைப் பொருத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கண்திருஷ்டி போல சில குளறுபடிகளும் நடந்தன. காலை 11.30 மணியளவில் வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை விதிகளை மீறி சிலர் அவிழ்த்துவிட முயன்றார்கள். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். முறையாக வாடிவாசல் வழியே விடாமல், வெளியே அவிழ்த்துவிடப்படும் காளைகளால்தான் அதிக அளவில் மனித உயிரிழப்பும், காளைகள் காயமடையும் நிகழ்வும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிடித்த காளைகளின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டுவதற்காக, தாங்கள் அணிந்திருந்த குறிப்பிட்ட எண் கொண்ட டி.சர்ட்டை இன்னொரு வீரருக்கு கொடுத்து ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 2 வீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

படம்: எஸ்.கிருஷ்ணன்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 729 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதில், 21 காளைகளை அடக்கி, பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த வீரர் பிரபாகரன் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு 'டட்ஸன் ரெடி கோ கார்' பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு என்றால் தான்தான் கதாநாயகன் என்று தொடர்ந்து நிரூபித்துவருபவர் பிரபாரகன். கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் முதல் பரிசு பெற்ற இவர், இந்த ஆண்டும் முதல் பரிசை வென்றதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார். ”தொடர் பயிற்சி, தன்னம்பிக்கை, உடலைப் பேணுதல், மனக்கட்டுப்பாடு இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்று கூறிய மாவீரன் பிரபாகரன், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு அரசு வேலை என்று அறிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in