உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்!

உயிர்ப் பலிகளைத் தடுக்குமா அவசரச் சட்டம்?
உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்!

கௌரவர்களுடன் சூதாடி நாட்டையும் தன்னையும் தொலைத்த தருமர், அத்துடன் விடாமல் விட்டதைப் பிடிக்கிறேன் என மனைவி திரௌபதியையும் வைத்து சூதாடி தோற்றதாக இதிகாசம் சொல்கிறது. இப்போதும் அப்படித்தான் விட்டதைப் பிடிக்கிறேன் என ஆன்லைன் சூதாட்டத்தில் சொத்து, சுகம், குழந்தைகள், மனைவி என அத்தனையும் இழந்து கடைசியில் தங்கள் இன்னுயிரையும் இழக்கும் பரிதாப நிலைக்கு பலர் ஆளாகிவருகிறார்கள்.

மணிகண்டன்
மணிகண்டன்

எத்தனை மரணங்கள்?

சென்னையை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). தனியார் வங்கி அதிகாரி. மனைவி, இரண்டு மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் திடீரென கிரிக்கெட் மட்டையால் தனது அன்பு மனைவி பிரியாவை மணிகண்டன் அடித்துக் கொல்கிறார். தனது பாசமிகு இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அழுத்திக் கொலை செய்கிறார். கடைசியில் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விசாரணையில், பலரிடம் கடன் வாங்கி 75 லட்ச ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மணிகண்டன் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்தது தெரியவந்தது.

பிரகாஷ்
பிரகாஷ்

கோத்தகிரி அருகிலுள்ள கைகாட்டி கூடஹல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் (24). இவரது மனைவி கீதா. 2 வயது குழந்தைக்கும் தகப்பனான இவர், கோடநாடு செல்லும் சாலையோரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இந்த முடிவுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டம் என்கிறது காவல்துறை.

பவானி
பவானி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எல்வின் பிரட்ரிக். 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் மனம் வெறுத்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விளாத்திகுளம் அருகிலுள்ள வேப்பலோடை பிரகாஷ், சென்னை போரூர் விக்னேஸ்வரா நகர் பிரபு, கோயம்பேடு தினேஷ், பென்னாகரம் அடுத்த ஏரியூரைச் சேர்ந்த வினித், புதுச்சேரி விஜயகுமார், சென்னை மணலிபுதுநகர் பவானி என ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்று உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் பட்டியில் நீண்டு கொண்டே போகிறது.

லாட்டரிக்குத் தடை


தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே இதுபோல அன்றாடம் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிப்படையாகச் சூதாடினால் சூதாட்ட பொதுச்சட்டம் 1867-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறி லாட்டரி விற்பனையை தமிழக அரசு தடை செய்தது. இதனால் எண்ணற்ற குடும்பங்கள் லாட்டரியின் பிடியில் இருந்துவிடுபட்டன. ஆனால், தற்போது ஆன்லைன் சூதாட்டம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.


132 செயலிகள்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் தோன்றும் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு பல கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேபோல ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடச் சொல்லி பல நடிகர், நடிகைகள் விளம்பரங்களில் ஆசையைத் தூண்டு கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தோ சமூக அக்கறையென்பது துளியும் இல்லை.

இந்தியாவில் ஏஸ் 2 த்ரீ, போக்கர் டங்கல், பாக்கெட் 52, கேஸ்டோ க்ளப், போக்கர், ஷூட்டிங் ஃபைட்டர்ஸ் என 132 சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளன. இவற்றைச் சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் கோடிக்கு லாபம் ஈட்டுகின்றன.

திறமை சார்ந்த விளையாட்டாம்!

தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, " 'ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல' என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்யமுடியாது. முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்" என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே ஜூன் 10-ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுக்களால் ஏற்படக்கூடியப் பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுக்களை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் அரசுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைப்பது எனவும், 2 வாரத்தில் இக்குழுவிடம் அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க அவசரச் சட்டம் இயற்றுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இனியாவது இந்த விஷயத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து உயிர் காவுகளை தடுக்கும் என நம்புவோம்!

பெரியார் லெனின்
பெரியார் லெனின்

பெட்டிச் செய்தி:

தடை தான் தீர்வு!

"அதிக கற்பனை உலகத்தில் உள்ளவர்களும், எதையும் உணர்ச்சி வசத்தில் முடிவெடுக்கக்கூடிய நபர்களும் இதுபோன்ற விளையாட்டுகளிலோ, சமூக வலைதளங்களிலோ முதலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதில் மூழ்கி அதில் இருந்து வெளியேற முடியாத அடிமைத்தனத்தில் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு அதன் எல்லை தெரியாது. அடுத்தடுத்து அவர்கள் இன்னும் ஆழமாக உள்ளே போகப் போக ஒரு கட்டத்தில் நெருக்கடி என வரும்போது முடிவெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். விளையாட்டை எப்படி பார்க்கிறார்களோ, வாழ்க்கையையும் அவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள்.
ஆன்லைன் விளையாட்டுகள் உள் இழுக்கும் உத்திகளைக் கொண்டவை. அப்படித்தான் விளையாட்டு முறை தயார் செய்யப்பட்டுள்ளது. முதலில் எளிதாக வெற்றி பெறுவது போல இருக்கும். ஆனால், உள்ளே செல்லச் செல்ல விளையாடுபவர்கள் அடிமையாகி விடுகிறார்கள். எனவே, இந்த அடிமை மனோபாவத்தில் இருந்து மனிதர்களை விடுவிக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தான் தீர்வாக இருக்கமுடியும்" என்கிறார் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவர் பெரியார் லெனின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in