ஒமைக்ரான் உருவானதன் பின்னணியில் எய்ட்ஸ்?

கரோனா காலத்தில் பாராமுகமாகும் ஹெச்ஐவிபாதிப்பு
ஒமைக்ரான் உருவானதன் பின்னணியில் எய்ட்ஸ்?

பெருந்தொற்று பரவல் காலத்தில் கரோனா பாதிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்ததில் காசநோய், புற்றுநோய், டயாலிசிஸ், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகள் முக்கியத்துவம் இழந்தன. இந்த வரிசையில் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று(டிச.1) உலக எய்ட்ஸ் தினம். இதையொட்டி, எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளான குழந்தைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்புகள் வெளியிட்டுள்ள சில தரவுகள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை.

இதர நோய் பாதிப்புகளை விட, எய்ட்ஸ் என்றதுமே ஏளனப் பார்வையில் அணுகும் போக்கு தொடர்கிறது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் எய்ட்ஸ் பரவுகிறது என்பது உண்மைதான். ஆனால், இரத்தம் செலுத்துதல் உள்ளிட்ட பாலியல் அல்லாத பரவல் காரணமாகவும் எய்ட்ஸுக்கு ஆளாகும் அப்பாவிகள் எண்ணிக்கை அதிகம்.

பெரியவர்களை விட, எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் நிலைமை மோசமாகி வருகிறது. குழந்தைகளை பாதிக்கும் எய்ட்ஸ் நோயை குடும்பத்தினர் அறியாததும், உணர்ந்தவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாததும் விரைவில் அவர்களது உயிரைப் பறிக்க காரணமாகின்றது. கரோனா பரவல் காலத்தில் இந்த பாதிப்பும், பாராமுகமும் உச்சத்திலிருந்தது.

யுனிசெப் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020-ல் மட்டும் சுமார் 3.10 லட்சம் குழந்தைகள் உலகம் முழுக்க எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது, 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறது. மேலும், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 1.20 லட்சம் குழந்தைகள் அதே காலத்தில் இறந்திருக்கிறார்கள். அதாவது, 5 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை இறந்திருக்கிறது.

இவை தவிர்த்து எய்ட்ஸ் தாக்கிய கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் சிசுக்களும் பாராமுகத்துக்கு ஆளாகி உள்ளார்கள். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளில் 5-ல் 2 பேருக்கு, தங்கள் பாதிப்பு இன்னதென்றே அறியாதிருக்கிறார்கள். அப்படித் தெரியவந்ததிலும் பாதி பேருக்கு மட்டுமே எய்ட்ஸுக்கான மருத்துவ சிகிச்சைகள் கிடைத்து வந்தன. தற்போது, கரோனா பரவல் காரணமாக முடங்கிய மருத்துவ கவனிப்புகளில் எய்ட்ஸ் சிகிச்சையும் அடங்கும்.

கரோனா பரவல் உறுதி செய்யப்பட்ட 20 மாதங்களில் அதற்கான தடுப்பூசி உலக மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளன. ஆனால், எய்ட்ஸ் அடையாளம் காணப்பட்டு 40 வருடங்களுக்கு மேலாகியும், தடுப்பூசியை உருவாக்குவதில் அறிவியல் சமூகம் திணறி வருகிறது.

கரோனா தடுப்பூசிகள் உரிய மக்களை சென்று சேர்வதில் பாரபட்சம் நிலவியதே, ஒமைக்ரான் போன்ற புதிய பிறழ்வுகள் உருவாக ஒரு வகையில் காரணமாகி இருக்கிறது. அதே பாரபட்சம் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் நிலவுகிறதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் புதிய திரிபு வைரஸ்களின் தொடர் பரவல் நீடித்தால், எய்ட்ஸ் பாதித்தோர் மற்றும் அதனால் இறப்போர் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கக் கூடும். யுனிசெப் வெளியிட்டுள்ள 2020 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்பு நிலவரம் இதையே சுட்டிக்காட்டுகின்றது.

ஒமைக்ரான் உருவானதன் பின்னணியிலும் எய்ட்ஸ் பாதித்த நோயாளி இருப்பதாக, மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை கிடைக்காத எய்ட்ஸ் நோயாளி ஒருவரை கரோனா தாக்கியதும், நீண்டகாலமாக அவரது உடல் கரோனா வைரஸுடன் போராடியதும், அந்த உடலில் புதிய வைரஸ் பிறழ்வுகள் உருவாகக் காரணமானதாக, தங்களுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே கரோனா பரவலை தடுக்கவும், புதிய பிறழ்வுகள் உருவாகாது தவிர்க்கவும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ பராமரிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in