ஒமைக்ரான் அபாயம்: தடுப்பூசி மட்டுமல்ல... தற்காப்பும் அவசியம்!

ஒமைக்ரான் அபாயம்: தடுப்பூசி மட்டுமல்ல... தற்காப்பும் அவசியம்!

“ஒமைக்ரானை எளிதான விஷயமாக மக்கள் எடுத்துக்கொள்வது குறித்து கவலையடைந்திருக்கிறோம். நமக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் அளவுக்கு இந்த வைரஸைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதை நாம் இப்போது உணர்ந்திருக்கிறோம். ஒமைக்ரான் தீவிரமான நோய்த் தாக்குதலை ஏற்படுத்துவதில்லை என்றாலும், இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது, சுகாதார அமைப்புகள் சுதாரிக்காமல் இருக்கும் சூழலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் எச்சரித்திருக்கிறார்.

“தடுப்பூசி மட்டும் எந்த நாட்டையும் ஒமைக்ரானிலிருந்து காப்பாற்றாது. ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உலக நாடுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளின் திறனைக் குறைக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துவரும் நிலையில், அந்த வைரஸ் திரிபுக்கு எதிராக பைசர் தடுப்பூசி வெற்றிகரமாகச் செயல்படும் என அதன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.

இதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத்தில் 4 பேர், ராஜஸ்தானில் 9 பேர், டெல்லியில் 6 பேர், கர்நாடகத்தில் 3 பேர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். கேரளம், ஆந்திரம், சண்டிகர் (ஒன்றியப் பிரதேசம்) ஆகியவற்றில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

நேற்று மட்டும் மகாராஷ்டிரத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 7 பேர். இதையடுத்து, அம்மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.

டெல்லியில் தொற்றுக்குள்ளான 6 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். மற்ற அனைவருக்கும் லேசான அறிகுறிகளே இருப்பதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.

அதேவேளையில், பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பதால், உலக நாடுகள் இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். டெல்டா வைரஸைவிடவும் ஒமைக்ரான் வேகமாகப் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.