பெகாசஸ் போல் பேசுபொருளாகும் ஹெர்மிட்!

வேவு மென்பொருளும் விபரீதப் பின்னணியும்
பெகாசஸ் போல் பேசுபொருளாகும் ஹெர்மிட்!

‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வேவு மென்பொருள் குறித்த பரபரப்புகள் ஏறத்தாழ அடங்கிவிட்ட நிலையில், அதே பாணியிலான இன்னொரு வேவு மென்பொருள் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஐபோனையும், ஆண்ட்ராய்டு போனையும் குறிவைத்து வேவு பார்க்கும் இந்த மென்பொருள் கஜகஸ்தானிலும் இத்தாலியிலும் கைவரிசையைக் காட்டியிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் லுக்-அவுட் எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனமும், கூகுளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழுவும் (டிஏஜி) இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

பின்னணி என்ன?

2022 ஜனவரி மாதம் கஜகஸ்தான் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வு, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் நடத்திய அந்தப் போராட்டத்தைச் சமாளிக்க முடியாத அதிபர் கஸ்ஸிம் ஜோமார்ட் டோகாயேவ் போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையானது. கூடவே, ரஷ்யா தலைமையிலான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) எனும் ராணுவக் கூட்டணியின் சார்பில், கஜகஸ்தானுக்குப் படைகள் அனுப்பப்பட்டன. அந்தப் படையினர், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த அடக்குமுறைகள் போதாது என, பலரது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை வேவுபார்க்கத் தொடங்கியது கஜகஸ்தான் அரசு. ஏப்ரல் மாதம் லுக்-அவுட் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் எண்ட்பாயின்ட் டிடெக்‌ஷன் ரெஸ்பான்ஸ் (இடிஆர்) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஊடுருவலைக் கண்டறிந்தனர்.

இந்த மென்பொருளுக்கு முறையான பெயர் எதுவும் இல்லை. லுக்-அவுட் நிறுவனம்தான் இதற்கு ‘ஹெர்மிட்’ (Hermit) எனப் பெயர் சூட்டியது. இத்தாலியைச் சேர்ந்த வேவு மென்பொருள் நிறுவனமான ‘ஆர்சிஎஸ் லேப் எஸ்.பி.ஏ’ (RCS Lab S.p.A ) எனும் நிறுவனம் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் என லுக்-அவுட் சந்தேகிக்கிறது. கூகுளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழுவும் (டிஏஜி) இதே சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கூடவே, டைகெலாப் எஸ்ஆர்எல் (Tykelab Srl) எனும் போலி நிறுவனம் இதன் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தடுவதாகவும் லுக்-அவுட் ஊகிக்கிறது.

என்னெவெல்லாம் செய்யும் ஹெர்மிட்?

ஒருவரது செல்போனில் ஊடுருவிவிட்டால் உரையாடல்களைப் பதிவுசெய்வதில் தொடங்கி, தானாகவே ஏதாவது ஒரு எண்ணுக்கு அழைப்பது, மின்னஞ்சல், தொடர்பு எண்கள், பிரெளஸரில் சேகரமாகும் தகவல்கள் என எல்லா தரவுகளையும் ஹெர்மிட் சேகரித்துவிடும். செல்போன் என்ன மாடல், ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட செல்போன் குறித்த பிரத்யேகத் தகவல்களையும் அள்ளிவிடும். செல்போன் உரிமையாளருக்குத் தெரியாமல் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது, வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்ற செயலிகளை நீக்குவது (அன்இன்ஸ்டால்), மீண்டும் சத்தமில்லாமல் நிறுவுவது (இன்ஸ்டால்), பயனாளருக்குத் தகவல் அனுப்பி நிறுவச் சொல்வது என எல்லாவற்றையும் செய்ய முடியும் இந்த வேவு மென்பொருளால்.

இந்த வேவு மென்பொருள் ஒருவரது செல்போனில் நுழைவது கண்கட்டு வித்தையாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபரின் செல்போனின் இணைய சேவை வழங்கி (internet service provider) திடீரென செயலிழந்துவிடும். இதன் காரணமாக, இணைய இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அதிகாரபூர்வ நிறுவனத்தின் தோரணையுடன் அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்ய அறிவுறுத்தல் வரும். விவரம் தெரியாமல் க்ளிக் செய்துவிட்டால் போதும். ஹெர்மிட் அதில் நிறுவப்பட்டுவிடும்.

உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் செயலிகளை நீக்கிவிட்டு, குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி அவற்றை மீண்டும் பதிவிறக்கம் செய்யச் சொல்லும். ஆனால், அது பரிந்துரைக்கும் செயலிகளின் வெர்ஷன் வேறாக இருக்கும். தெரியாமல் நிறுவிவிட்டால் ஹெர்மிட் நுழைந்துவிடும்.

மறுப்பும் நிதர்சனமும்

இந்தக் குற்றச்சாட்டுகளை ஆர்சிஎஸ் லேப் நிறுவனம் மறுத்திருக்கிறது. ஐரோப்பிய சட்டங்களின்படியே தாங்கள் செயல்படுவதாகவும், குற்றங்கள் குறித்த விசாரணைக்கு சட்ட நிறுவனங்களுக்கு உதவுவதாகவும் விளக்கமளித்திருக்கிறார்கள் அந்நிறுவனத்தினர். வேவு மென்பொருள் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வழக்கமாகத் தங்கள் செயல்பாடுகள் நியாயமானவை என்றே வாதிடுகின்றன. எனினும், இதுபோன்ற மென்பொருள்கள் பெரும்பாலும் சட்டவிரோதமான கண்காணிப்புக்கே பயன்படுத்தப்படுகின்றன. தேசப் பாதுகாப்பு என்பதை ஒரு நியாயமான காரணியாக முன்வைத்து, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கண்காணிக்கப்படுவதுதான் இதில் இருக்கும் முக்கியப் பிரச்சினை. பெகாசஸ் விவகாரம் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் புயலைக் கிளப்பியதன் பின்னணியில் இந்தப் பிரச்சினைதான் பிரதானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

‘சட்டபூர்வ நடவடிக்கைகளுக்காக, அரசுகள், அதிகார வர்க்கத்தினருக்கு மட்டுமே எங்கள் தயாரிப்புகளை வழங்குகிறோம்’ என்றே இதுபோன்ற வேவு மென்பொருள் நிறுவனங்கள் வழக்கமாகச் சொல்லும். பயங்கரவாதிகள், சமூக விரோதிகளைக் கண்காணிக்க அரசுகளுக்கு விற்பதாகவே பெகாசஸை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ கூறுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் அனுமதியுடன்தான் பெகாசஸ் விற்பனை செய்யப்பட்டது. பெகாசஸ் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். அது வெறுமனே தொலைபேசியை ஒட்டுக்கேட்பது போன்ற சமாச்சாரம் அல்ல. வேவு பார்க்கப்படும் நபருக்குத் தெரியாமலேயே செல்போன் கேமராவை ஆன் செய்து காட்சிகளைக் காணொலிகளாகப் பதிவுசெய்வது வரை எல்லாமே செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரியாமல் பிரச்சினைக்குரிய ஆவணங்களை அவரது செல்போனில் சேமித்துவைத்து அவரைச் சட்டத்தின் முன் குற்றவாளியாகச் சித்தரிக்கவும் முடியும். ஏறத்தாழ அதே வேலையைத்தான் ஹெர்மிட்டும் செய்கிறது.

இந்தியாவில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் பெகாசஸ் தொடர்பான தகவல் வெளியானது அரசியல் ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தேசத்துரோகம் என்றும், தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இது ஊடகச் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பத்திரிகையாளர்கள் நீதிமன்றப் படியேறியதும் அதுதொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டதும் சமகால நிகழ்வுகள்.

வேவு பார்க்கும் தந்திரங்கள்

இதில் நடக்கும் ஏமாற்று வேலைகள் எந்த அளவுக்குத் தந்திரங்கள் நிறைந்தவை என்பதையும் லுக்-அவுட், டிஏஜி போன்ற நிறுவனங்கள் விளக்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு, கஜகஸ்தானில் ‘ஓப்போ’ (Oppo) செல்போன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ உதவி மைய இணையதளத்தின் கஜாக் மொழி பக்கம் எனும் போர்வையில் ஒரு போலியான இணையதளத்தை - ஏறத்தாழ ஓப்போவின் அதிகாரபூர்வ இணையதள முகவரியைப் போல் உருவாக்கப்பட்ட முகவரியுடன் - உருவாக்கி அதன் மூலம் பலரது செல்போன்களில் ஊருவியிருக்கிறது ஹெர்மிட். செல்போனில் அந்தத் தளத்தைப் பயனாளர்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பற்றிய தகவல்களை ஹெர்மிட் சேகரித்தது தெரியவந்திருக்கிறது.

இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலேயே பெகாசஸ் போன்ற வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், மனித உரிமை மீறல்கள் மலிந்த நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சிரியாவில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்குப் பகுதிகளில் ஹெர்மிட் வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக லுக்-அவுட் கூறுகிறது. அங்குள்ள ரோஜாவா எனும் பிராந்தியத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுப் படையான சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்டிஎஃப்) போரிட்டுவந்தன. குர்து இன வீரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தப் படையை எதிர்த்து துருக்கி ராணுவம் சண்டையிட்டுவந்தது. ‘ரோஜாவா நெட்வொர்க்’ எனும் பெயரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இதற்கான குழு ஒன்று இயங்கிவந்தது. அதில் அந்தப் பிராந்தியத்தின் அரசியல், போர் நிலவரங்கள் தொடர்பான செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் வெளியாகிவந்தன. கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு பெயரில் (rojavanetwork[.]info) ஒரு வலைதள முகவரியை உருவாக்கி அதன் மூலம் குர்து வீரர்களை வேவு பார்த்திருக்கிறது ஹெர்மிட்.

ஹெர்மிட் மென்பொருள் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இத்தாலியிலும் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறது லுக்-அவுட். 2021-ல் இத்தாலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம் இதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எனும் பெயரில் அந்நாட்டின் விசாரணை அமைப்புகள் ஹெர்மிட் வேவு மென்பொருளைப் பயன்படுத்தி வேவு பார்த்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்னதான் சமாதானம் சொன்னாலும் ஆர்சிஎஸ் லேபும் அதிகம் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல், திரைமறைவில் செயல்படும் நிறுவனம்தான். 2015-ல் விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த தகவல்களின்படி அந்நிறுவனத்துக்கும் பாகிஸ்தான், சிலே, மங்கோலியா, வங்கதேசம், வியட்நாம், மியான்மர், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டு எனத் தெரியவந்தது. இத்தாலியின் இன்னொரு வேவு மென்பொருள் நிறுவனமான ஹேக்கிங் டீம் (தற்போது மெமென்டோ லேப்ஸ் எனும் பெயரில் இயங்குகிறது) நிறுவனத்துடனான அதன் பரிவர்த்தனைகள் மூலம் இவ்விஷயம் வெளிவந்தது.

அரசுகள் என்னதான் நியாயம் கற்பித்தாலும் இந்த வேவு மென்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுகின்றன. என்எஸ்ஓ, காம்மா க்ரூப் போன்ற வேவு மென்பொருள் நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்த தகவல்களே இதற்குச் சான்று.

விழிப்புணர்வு அவசியம்

நீங்கள் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவராக, சமூகச் செயற்பாட்டாளராக இல்லாமல் சாமானியராகவே இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் விழிப்புணர்வு கொண்டிருப்பதில் தவறில்லை. இதுபோன்ற வேவு மென்பொருள் செயலிகள் உங்களுக்குத் தெரியாமலேயே ரகசியமாக உங்கள் செல்போனில் வந்து அமர்ந்துவிடும் என்பதால், அவ்வப்போது உங்கள் செல்போனில் உள்ள செயலிகளை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

உங்கள் போன் மற்றும் செயலிகளை அப்டேட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். செயலிகள் முழுமையாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கும்போது இதுபோன்ற பாதிப்புகளுக்குள்ளாகும் என்று எச்சரிக்கிறது லுக்-அவுட். அதேபோல பெரிய நிறுவனங்களின் பெயரில் வந்திருந்தாலும் சரியாக உறுதிசெய்துகொள்ளாமல் குறுஞ்செய்திகளில் குறிக்கப்பட்டிருக்கும் இணைப்புகள் மீது க்ளிக் செய்ய வேண்டாம். அதுமட்டுமல்ல, அதிகம் அறியப்படாத, உங்களுக்குப் பெரிதாகப் பரிச்சயம் இல்லாத செயலிகளைத் தரவிறக்கம் செய்து செல்போனில் நிறுவுவது ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கூகுள் ப்ளே ஸ்டோர் ஓரளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதால் அதன் வழியே, செயலிகளைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். அதிலும் கூடுதல் கவனம் தேவை.

ஹெர்மிட் என்றால் சக மனிதர்களிடமிருந்து விலகி தனித்து வாழும் நபர் என்று அர்த்தம். ஆனால், இந்த ஹெர்மிட்டின் பின்னால் உங்களை வேவு பார்க்கும் ஏராளமான நபர்கள் இருப்பார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in