வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கோர் நற்செய்தி!

வரவேற்புக்குரிய மாற்றங்கள் செய்யும் மெசேஜிங் செயலி
வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கோர் நற்செய்தி!

“அந்தரங்க உரையாடலுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் வாட்ஸ்-அப் தான் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் அந்நிறுவனத்தின் தலைமைப் பதவியில் (ஹெட் ஆஃப் ப்ராடக்ட்) இருக்கும் ஆமி வோரா.

“நேருக்கு நேராகப் பார்த்துப் பேசும் அந்தரங்கமான, பாதுகாப்பான உரையாடல் அனுபவத்தை வாட்ஸ்-அப் வழங்கும்” என்று வாட்ஸ்-அப் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான மார்க் ஸக்கர்பெர்க்கும் அடித்துச் சொல்கிறார். ஆகஸ்ட் 9-ம் தேதி வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள் இந்த ஆரூடங்கள் நம்பத் தகுந்தவைதான் எனும் நம்பிக்கையைத் தருகின்றன. என்ன மாற்றம் நடந்திருக்கிறது, வாட்ஸ்-அப்பில்?

வரமும் சாபமும்

‘மெசேஜிங்’ செயலியான வாட்ஸ்-அப் பயன்படுத்துபவர்கள் அதை ஒரேநேரத்தில் வரமாகவும் சாபமாகவும் பார்க்கிறார்கள். காரணம், அதில் இருக்கும் பல சாதகமான அம்சங்களுடன், அந்தரங்க உரிமையைப் பாதிக்கும் வகையிலான தன்மையும் அதிகம் என்பதுதான். உதாரணத்துக்கு, வாட்ஸ்-அப்பில் முக்கியமான தகவல்களை உடனடியாக அனுப்ப முடியும். படங்களை அனுப்ப முடியும். போனில் பிடிக்க முடியாதவர்களுக்குத் தகவலைத் தெரிவிக்க வாய்ஸ்-மெசேஜ் அனுப்ப முடியும். நெட்வொர்க் பிரச்சினை இருக்கும் தருணங்களில் வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் மற்றவர்களிடம் பேசிவிட முடியும்.

அதேபோல், குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி அலுவலக சகாக்கள் வரை வெவ்வேறு தரப்பினருக்கான வாட்ஸ்-அப் குழுக்களில் இடம்பெற்று பிரத்யேகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

மறுபுறம், ‘வணக்கம்’, ‘குட்மார்னிங்’ என்று சம்பிரதாய செய்திகள் தொடங்கி, வன்முறையைத் தூண்டும் வதந்திகள் வரை அநாவசியமான பல தொந்தரவுகளும் வாட்ஸ்-அப் மூலம் வந்துசேரும். அவற்றையெல்லாம்விட முக்கியப் பிரச்சினை, நம்மிடம் அனுமதி கேட்காமலேயே நம் நண்பர்கள் அல்லது உறவினர்கள் என யார் வேண்டுமானாலும் நம்மை வாட்ஸ்-அப் குழுக்களில் இணைத்துவிடுவதுதான். தொல்லை பொறுக்காமல் அதிலிருந்து வெளியேறினால், ‘கூட்டத்துல பச்சை சட்டைக்காரன் எஸ்கேப்பாகிறான்’ எனும் வடிவேலு காமெடி போல குழுவில் இருக்கும் அனைவருக்கும் நோட்டிஃபிகேஷன் (அறிவிப்பு) சென்றுவிடும். அப்புறம், “இதற்கெல்லாமா கோபித்துக்கொண்டு வெளியேறுவது. மீண்டும் சேர்ந்துவிடுங்கள். நானே சேர்த்துவிடுகிறேன்” என நண்பர்கள் யாரெனும் இம்சை கொடுப்பார்கள்.

அதுமட்டுமல்ல, தூக்கம் வராமல் நள்ளிரவில் வாட்ஸ்-அப் நோண்டிக்கொண்டிருந்தால் நம்மைப் போலவே அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர், “என்னங்க... இந்த நேரத்துல வாட்ஸ்-அப்ல இருக்கீங்க. ஏதும் பிரச்சினையா?” என்று விகல்பம் இல்லாமல் கேட்பார்கள். அல்லது ‘இந்த ஆள் நள்ளிரவு நேரம் வரை வாட்ஸ்-அப் பார்க்கிறார்’ என ஊரெல்லாம் செய்தி பரப்புவார்கள். அந்தரங்க உரிமை சார்ந்த இந்தப் பிரச்சினைகளுக்கு வாட்ஸ்-அப் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

என்னென்ன சேவைகள்?

வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. 2021 ஜூன் நிலவரப்படி நம் நாட்டில் மட்டும் 48.7 கோடி பேர் வாட்ஸ்-அப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 11.8 கோடி பேர்தான் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் பிற நாட்டினரைவிட இந்தியர்கள்தான் இந்த மாற்றங்களை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இனி வாட்ஸ்-அப் குழுக்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிடலாம். அதேசமயம், குழுவின் அட்மினுக்கு மட்டும் தகவல் செல்லும். அவர் உங்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் சேர்க்க முயற்சிப்பதோ அதற்கு நீங்கள் சம்மதிப்பதோ உங்கள் பாடு.

கடைசியாக எப்போது வாட்ஸ்-அப் பார்த்தீர்கள் என்பதை யாருமே தெரிந்துகொள்ள முடியாத வகையில் ஏற்கெனவே வசதி தரப்பட்டிருக்கிறது. மேலும், உங்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டும் என்பதையும் உங்களால் தீர்மானிக்க முடியும். இதையெல்லாம் தாண்டி நீங்கள் வாட்ஸ்-அப்பில் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்பதையும் இனி எல்லோரும் அறிந்துகொள்ள முடியாது. உங்களுக்கு விருப்பமானவர்கள் மட்டுமே அதைத் தெரிந்துகொள்ளும்படி செட்டிங்ஸில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

அதேபோல், இன்னொரு புதிய அம்சமும் முக்கியமானது. வாட்ஸ்-அப் மூலம், ஒருமுறை மட்டும் பார்க்க முடியும் வகையில் (view once) படங்களை அனுப்பும் வசதி ஏற்கெனவே வாட்ஸ்-அப்பில் இருக்கிறது. ஸ்னேப்சேட் பாணியில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வாய்ப்பு இருப்பதால் அதனால் என்ன பயன் எனும் கேள்வி இருந்துவந்தது. தற்போது ஒரே முறை பார்க்கக்கூடிய படத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதைத் தடுக்கும் வகையில் வசதி செய்து தரப்படவிருக்கிறது. இதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்கிறது வாட்ஸ்-அப்.

இந்த வசதியைப் பொறுத்தவரை சில நடைமுறைச் சிக்கல்கள் தொடரவே செய்கின்றன. இன்னொரு செல்போனிலிருந்தோ அல்லது கேமராவிலிருந்தோ அதைப் படமெடுத்துவிட முடியும். இருந்தாலும் ஓரிரு விநாடிகளே அப்படம் பார்வைக்குப் படும் என்பதால் பெரிதாகப் பிரச்சினைகள் நேராது என்கிறது வாட்ஸ்-அப்.

விழிப்புணர்வு அவசியம்

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், வாட்ஸ்-அப்பில் இந்த மாற்றங்கள் தாமாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடாது. நாம்தான் செட்டிங்ஸ் மூலம் இந்த வசதிகளுக்கு மாறிக்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் இவற்றைப் பயன்படுத்தாமலேயே விடக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள். இந்த மாற்றங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் உலகமெங்கும் விழிப்புணர்வு விளம்பரங்களைச் செய்யவிருக்கிறது வாட்ஸ்-அப். முதல் கட்டமாக பிரிட்டனிலும் இந்தியாவிலும் இதைத் தொடங்கவிருக்கிறது.

பொதுவாகவே சமூகவலைதளங்கள், செயலிகள் போன்றவற்றில் பயனாளர்களின் அந்தரங்க உரிமை என்பது இரண்டாம்பட்சமாகவே இருந்து வருகிறது. மேலோட்டமாக அவற்றைப் புரிந்துவைத்திருப்பவர்கள், அப்பாவித்தனமாகச் செய்துவைக்கும் சில காரியங்கள் அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்வினையாகிவிடுவதுண்டு. தங்களைப் பற்றிய சுயவிவரங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கின்றவர்களில் பலர் ஏதேனும் ஒரு வகையில் அந்நியர்களின் தொந்தரவுக்குள்ளாகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பம், சமூகவலைதளம் போன்றவற்றில் நல்ல பரிச்சயமும், அந்தரங்க உரிமை குறித்த புரிதலும் கொண்ட வல்லுநர்கள் வாய் திறந்தால்தான் இதில் இருக்கும் பிரச்சினைகள் வெளியில் தெரியும்.

அதிருப்தியின் விளைவு

சில சமயம், சமூகவலைதள நிறுவனங்கள் தங்கள் சேவையில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து பயனாளர்களிடம் கருத்துகளைத் திரட்டும்போதுதான், பல நுட்பமான பிரச்சினைகள் அவற்றின் பார்வைக்குச் செல்கின்றன. தற்போது வாட்ஸ்-அப் இந்தப் புதிய வசதிகளைக் கொண்டுவருவதுகூட பயனாளர்களிடமிருந்து கிடைத்த எதிர்மறைக் கருத்துகளின் அடிப்படையில்தான். ஆம்! பயனாளர்களின் தனியுரிமை குறித்து வாட்ஸ்-அப் நடத்திய ஆய்வின் முடிவுகள்தான் இந்த மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

இந்த ஆய்வின்படி, உரையாடலுக்கு வாட்ஸ்-அப்பைப் பயன்படுத்துவது நேர்மையான, கட்டுப்பாடற்ற வழி என 72 சதவீதம் பேர் கருதுகிறார்கள். ஆனால், 47 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இதை அந்தரங்கமான வகையில் பாதுகாப்பாக மேற்கொள்வதே வசதியானது எனக் கருதுகிறார்கள். தாங்கள் வாட்ஸ்-அப்பில் ஆன்லைனில் இருக்கும்போது, பிற பயனாளர்கள் அறியாவண்ணம் மறைவாக இருக்க வேண்டும் என்றும், தாங்கள் யாருடன் பேச விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்றும் 51 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். ப்ளாக் (block) செய்வது மிக முக்கியமானது என 91 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியில் செய்யப்படும் இந்த மாற்றம் விரைவில் பிற சமூகவலைதளங்களிலும் எதிரொலிக்கும் என நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in