குழந்தைகளை குறிவைக்கும் சைபர் குற்றங்கள் 400% எகிறல்

குழந்தைகள் தினத்தில் கவனம் கோரும் விபரங்கள்
குழந்தைகளை குறிவைக்கும் சைபர் குற்றங்கள் 400% எகிறல்

குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், முந்தைய ஆண்டைவிட 2020-ல் 400 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய குழந்தைகள் சைபர் உலகில் அதிகம் ஆழ்ந்திருக்கிறார்கள். அதிலும் பல குழந்தைகள் அடிமையாவதற்கு நிகராக கட்டுண்டு கிடக்கிறார்கள். ஓடியாடி விளையாடும் வயதில், வீடியோ கேம்ஸ், சமூக வலைதளம், மென்திறன் மேம்பாடு, ஆன்லைன் கல்வி என சதா மெய்நிகர் உலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். அதற்கேற்ப கையில் இணைய இணைப்பிலான செல்ஃபோன், லேப்டாப் உள்ளிட்டவற்றின் நேர்மறை தேவைகளும் அவர்களுக்கு அதிகரித்திருக்கின்றன.

குழந்தைகள் தங்கள் வயதுக்கே உரிய துறுதுறுப்பு, புதியனவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆகியவற்றால், இணையத்தில் அவர்களுக்காக விரிக்கப்படும் வலையில் எளிதில் சிக்கிக் கொள்கிறார்கள். வளரும் பிள்ளைகளின் பலவீனங்களை நோட்டமிடும் சைபர் கிரிமினல்கள், அதை பணயமாக வைத்து அவர்களை மடக்குகிறார்கள். டிஜிட்டல் தேட்டையில் பணம் பறிப்பது முதல் பாலியல் சுரண்டல் வரை பலதையும் சாதித்துக்கொள்கிறார்கள். உள்ளங்கை செல்ஃபோனுக்குள் எல்லாமே முடிந்துவிடுவதால், காரியம் கைமீறிய பிறகே பெற்றோர்களுக்கு உறைக்கிறது.

குழந்தைகளை குறிவைக்கும் இந்த சைபர் குற்றங்களில் பெரும்பாலானவை பாலியல் சார்ந்தவை. டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் பறிபோவது பெரியவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். ஆனால் படங்கள், வீடியோக்கள், ஆன்லைன் சந்திப்புகள் என கேமராவுடன் கூடிய இணைய உபகரணங்கள், சைபர் கிரிமினல்களுக்கு தோதானதாக அமைந்துவிடுகின்றன. தவறிழைத்த விவகாரம் வெளித்தெரிந்தால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்று குழந்தைகள் அஞ்சுவது, கிரிமினல்களுக்கு மேலும் வசதியாகிறது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில், உத்தர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. முதல் வரிசையில் தமிழகம் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான மெய்யான குற்றங்களால், மெய்நிகர் குற்றங்கள் இங்கே குறைந்திருக்கலாம்.

நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளின் அழுத்தங்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியரின் நெருக்கடிகள், அதிகம் தனிமைக்கு தள்ளப்படுவது, பெற்றோர் கண்காணிப்பு குறைவது, எப்போதும் இணையத்திலே உலாத்துவது போன்ற காரணங்கள், சைபர் குற்றங்களுக்கு குழந்தைகள் இலக்காவதை அதிகரிக்கின்றன.

அறிவியலும், தொழில்நுட்பமும் அவற்றின் உன்னதப் பலன்களும் குழந்தைகளுக்கு அவசியமே. ஆனால் அவற்றை அளந்து கொடுப்பதும், கண்காணிப்பைத் தொடர்வதும், அவ்வப்போது மெய் உலகு சார்ந்த விளையாட்டு மற்றும் இதரச் செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுவத்துவதும் நல்லது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in