திருப்பூரில் தீண்டாமைச் சுவர்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய கனிமொழி எம்.பி!

இடிக்கப்படும் தீண்டாமை சுவர்
இடிக்கப்படும் தீண்டாமை சுவர்

சேவூர் பகுதியில் தீண்டாமைச் சுவர் இருப்பதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆட்சியர் மூலம் அந்த சுவரை இடிக்க நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்.பியின் செயல் பாராட்டுக்குள்ளாகி இருக்கிறது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

திருப்பூர் மாவட்டம், சேவூர் கைகாட்டிபுதூர் பகுதியில் உள்ள தேவேந்திரன்  நகர்ப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதற்கு அருகில் உள்ள விஐபி நகர் பகுதியில் மற்றொரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரு குடியிருப்புப் பகுதிகளிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரு குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே சுவர் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.

இந்தச் சுவரால் தேவேந்திரன் நகர்ப் பகுதி மக்கள், சில கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சுவரை அகற்றக் கோரி தேவேந்திரன் நகர்ப் பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப் பிரிவு தொடங்கி, மாவட்ட ஆட்சியர் வரைக்கும் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது..

இடித்து தள்ளப்பட்ட சுவர்
இடித்து தள்ளப்பட்ட சுவர்

இந்த நிலையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும் எம்.பி கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கைகாட்டிபுதூர் பகுதி பெண்கள்,  தீண்டாமை சுவர் தொடர்பாக கனிமொழியிடம் மனு அளித்தனர். அதையடுத்து  உடனடியாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை செல்போன் மூலம் தொடர்புகொண்ட கனிமொழி, தேவேந்திரன் நகர்ப் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டார்.

இதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக தேவேந்திரன் நகர்- விஐபி நகரைப் பிரிக்கும் வகையில் எழுப்பப்பட்ட சுவர், ஜே.சி.பி வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதையடுத்து மீண்டும் கனிமொழியை சந்தித்து நன்றி கூறிய தேவேந்திரன் நகர் பெண்கள், இன்னும் ஒரு சுவர் இடிக்கப்படாதது குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றனர். 

திங்கள்கிழமைக்குள் மீதமுள்ள சுவர்களும் இடிக்கப்படாவிட்டால் எனது கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் என கனிமொழி அவர்களிடம் தெரிவித்தார். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீண்டாமை சுவர் குறித்து கேள்விப்பட்ட அடுத்த நிமிடமே அதை அகற்ற உத்தரவிட்ட கனிமொழி எம்.பியின் செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in