‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனை

‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனை
சேவியர் பிரிட்டோதி இந்து

'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில், வருமானவரித் துறையினர் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் நேற்றுமுதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பல வெளிநாட்டு நிறுவனங்கள், வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஓப்போ மொபைல்ஸ் தலைமையிடம், காஞ்சிபுரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. மேலும், சீன நிறுவனமான ஷாவ்மி (xiaomi) நிறுவனத்துக்குச் சொந்தமான 25 இடங்களில், சென்னையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் உதிரிபாகங்களின் ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களைக் கையாள்வதில், மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வருமானவரித் துறை சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதால், இந்நிறுவனங்களும் வருமானத்தை மறைத்து முதலீடு செய்துள்ளனவா என்பதைக் கண்டறிய வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.