குடிபோதையில் மாடியிலிருந்து நாயை வீசிக் கொன்றவர் கைது

கைது செய்யப்பட்ட ஸ்டெல்லின்
கைது செய்யப்பட்ட ஸ்டெல்லின்

சென்னை, திருவல்லிக்கேணி, அயோத்தி நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசிப்பவர் செந்தில்(38). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை வண்டி ஓட்டும் வேலை செய்து வருகின்றார்.

நேற்று(டிச.8) இரவு செந்தில், சேப்பாக்கம் லாக் நகரைச் சேர்ந்த நண்பர் ஸ்டெல்லினுடன் தன் வீட்டு மொட்டை மாடியில் ஒன்றாக மது அருந்தியுள்ளார். போதை அதிகமானதால் செந்தில் அங்கேயே உறங்கிவிட்டார்.

குடிபோதையில் இருந்த ஸ்டெல்லின், மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த நாய் ஒன்றைத் தூக்கி 5-வது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். தரையில் விழுந்த நாய் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நாயின் உரிமையாளர் பிரவீன் குமார்(31), நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து விசாரித்தபோது ஸ்டெல்லின் போதையில் நாயை வீசிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமார் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் ஸ்டெல்லினை கைது செய்தனர்.

உயிரிழந்த நாய் டெமி
உயிரிழந்த நாய் டெமி

இதுகுறித்து நாயின் உரிமையாளர் பிரிவீன் கூறும்போது, “நாயை வீசிக் கொன்ற நபர் மீது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததேன். காவல் துறையினர் அலட்சியமாக நாளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூறினர். என் 5 வயது மகளுக்காக ரூ.20 ஆயிரம் கொடுத்து சிப்பிப்பாறை ரக நாயை வாங்கிக் கொடுத்து, டெமின்னு பேர் வச்சு செல்லமா வளர்த்தோம். இப்போ நாய் இறந்ததால் என் மகள் சோகம் தாங்காமல் அழுது கொண்டிருக்கிறாள்.

அதனால் நாயைக் கொன்றவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்னு, ப்ளூ க்ராஸ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை தேடிக் கண்டுபிடிச்சு உயரதிகாரிகளுக்கு தகவல் சொன்னேன். அதற்கப்புறம்தான் மெரினா காவல் நிலையத்தில் ஸ்டெல்லின் மீது விலங்குகளை தவறாகக் கையாண்டு துன்புறுத்துதல், விலங்குகளைக் கொலை செய்தல் மற்றும் விலங்கு வதை தடுப்புச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்” என்றார்.

உயிருடன் டெமி(பழைய படம்)
உயிருடன் டெமி(பழைய படம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in