136-வது ஆண்டில் ஏ.வி. மேம்பாலம்!

கேக் வெட்டி கொண்டாடிய மதுரை மக்கள்
136-வது ஆண்டில் ஏ.வி. மேம்பாலம்!
ஏ.வி. மேம்பாலம்

வைகை நதியின் தென்கரையில் இருந்த நகரான மதுரை, 170 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பிரம்மாண்ட கோட்டைச்சுவருக்கு நடுவே மட்டும் சுருங்கியிருந்தது. மதுரை கலெக்டராக இருந்த ஆங்கிலேயரான பிளாக் பர்ன், 1857-ல் இந்தக் கோட்டைச்சுவரை இடித்து மதுரை நகரை விரிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து வைகையின் வடகரையிலும் மதுரை நகர் விரிந்தது.

எனவே, வைகை வடகரை, தென்கரைப் பகுதிகளை இணைப்பதற்காக 1885-ல் ஆங்கிலேய அரசாங்கத்தால், மதுரையின் முதல் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத் திறப்பு விழாவுக்கு வருவதாக இருந்த இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் விக்டர், அன்று இந்தியாவில் பரவிய பிளேக் நோய் காரணமாக அந்தப் பயணத்தைத் தவிர்த்தார். இருப்பினும் இந்தப் பாலத்துக்கு அவரது பெயரையே சூட்டினார்கள் ஆங்கிலேய அதிகாரிகள்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்

8.12.1886 அன்று திறக்கப்பட்ட இந்த ஏ.வி. மேம்பாலம் இன்று 136-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மக்களுக்காக நூற்றாண்டு தாண்டியும் உழைத்துக்கொண்டிருக்கிற இந்தப் பாலத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘வைகை நதி மக்கள் இயக்கம்’ சார்பில் இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த அமைப்பினரும், பொதுமக்களும் கேக் வெட்டி நிகழ்ச்சியைக் கொண்டாடினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியபோது, “ஏ.வி.மேம்பாலத்தைக் கட்டுவதற்கு அந்தக் காலத்தில் வெறும் 2.85 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. இதற்குப் பிறகு கட்டப்பட்ட பல பாலங்கள் இடிந்துவிட்டன. ஆனால், இந்தப் பாலத்தில் இப்போதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விரைகின்றன. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, கம்பீரமாக நிற்கும் இந்தப் பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு சான்றாகவும், ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று நம்முடைய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொல்லித்தருவதாகவும் திகழ்கிறது. இந்தப் பாலத்தை முறையாகப் பராமரித்து சீரமைக்க வேண்டும். அதேபோல மதுரையின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகவும் இதனை அறிவிக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.