வேலூரில் ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
வேலூரில் ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்படம் வீ.எம்.மணிநாதன்

அவர்கள் நினைப்பது நடக்காதிருக்கட்டும்! : சுகாதாரத் துறை செயலாளர் ஏன் எச்சரிக்கிறார்?

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. கோயில்களில் பக்தர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. கடைகள், உணவகங்கள் இரவு 11 மணிவரை திறந்திருக்கவும் அனுமதிக்கப்பட்டு விட்டது. நவ-1 முதல் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லலாம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சிதான். ஆனால், ‘இனிவரும் நாட்களில் தமிழக மக்கள் இன்னும் கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்‘ என்கிறார், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். அவர் அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை 2-வது அலை கிட்டத்தட்ட கட்டுக்குள் இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், கட்டுப்பாடுகள் முற்றாகத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மழைக்காலம் மற்றும் பண்டிகைக்காலம் 3-வது அலைக்கு வித்திட்டுவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அதற்கு உதாரணமாகக் கடந்த 14-ம் தேதியன்று, ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க கடைத்தெருக்களில் மக்கள் கூடியதைச் சொல்லலாம்.

மதுரையில் பூ வாங்க வந்த கூட்டம்
மதுரையில் பூ வாங்க வந்த கூட்டம்படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

முதல் மற்றும் 2-ம் அலைகளில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தவர்களும், தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்களை இழந்தவர்களும், பொதுமுடக்கத்தால் தொழில், வருவாயையும் இழந்தவர்களும் ”இறைவா! 3-வது அலை மட்டுமல்ல இனி அப்படி எந்த ஒரு அலையும் வரவே கூடாது” என்று இறைஞ்சுகிறார்கள்.

ஆனால், மருத்துவத் துறை சார்ந்த சில வணிகர்கள், ஒருசில பதுக்கல்காரர்கள், அதிகவிலைக்கு ஆசைப்படுகிறவர்கள் உள்ளிட்ட ஒருசாரார் 3-வது அலை வரவேண்டும் என்று மனசுக்குள் ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரர், தற்போதைய நிலையில் கரோனா குறித்த தனது கவலைகளை பகிர்ந்து கொண்டார். “மருந்து வணிகத் துறையில் எனக்கு நிறைய தொடர்புகள் இருக்கிறது. அதன்மூலம் அத்துறை சார்ந்த சில விஷயங்கள் எனக்கு தெரியவந்தது. அதனை மக்களிடம் பகிர்ந்து கொள்வது மக்களுக்கு நல்லது என்பதால் சொல்கிறேன். நாமெல்லாம் 3-வது அலை வரவேகூடாது என்ற கவலையோடும், அக்கறையோடும் இருக்கிறோம். ஆனால் மருந்து வணிகர்களில் ஒருசிலர் மட்டும் எப்படியாவது 3-வது அலை வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசை நிறைவேற நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது” என்றார்.

அப்பர்சுந்தரம்
அப்பர்சுந்தரம்

மேலும் அவர் கூறும்போது, ’’விஞ்ஞானிகள் செப்டம்பரில் 3-வது அலை வரும் என்று கணித்தார்கள். ஆனால், அது வரவில்லை. அதனால் 2-வது அலையின் வேகம் குறைந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், ’கிளியரன்ஸ் சேல்ஸ்’, ’கிரேட் சேல்ஸ்’ என்ற அடைமொழி வைத்து தங்களிடம் இருந்த மாஸ்க், சானிடைசர், கிளவுஸ், பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்றவற்றை மொத்த விற்பனையாளர்களின் தலையில் கட்டிவிட்டார்கள். அதனால் இங்கேயிருக்கும் ஒரு சாதாரண சர்ஜிகல் டிரேடர்கூட 3-வது அலையை எதிர்பார்த்து, கிட்டத்தட்ட 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி கிடங்குகளில் குவித்து வைத்துள்ளார்கள்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி 2-வது அலையின் தீவிரம் அதிகமாகவில்லை. 3-வது அலையும் வரவில்லை. அதனால் ஜூன் மாதம் ரூ.560 விற்ற எக்ஸாமினேஷன் கிளவுஸ் பாக்ஸ் தற்போது ரூ.270-க்கு கிடைக்கிறது. (2019-ல் இதன் விலை ரூ.130 மட்டுமே). தற்போது மிகத்தரமான மூன்றடுக்கு மாஸ்க் எல்லாம் ரூ.1.30 க்கு கிடைக்கிறது. இதை கடந்த ஜூன் - ஜூலையில் ரூ.2 கொடுத்து வாங்கினார்கள். அதற்கு முன்பு அது 5 ரூபாய்க்கும், கரோனா ஆரம்பகாலத்தில் 10 முதல் 20 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது.

இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்டு N.95 எல்லாம் 10 ரூபாய்க்கும் கீழே போய்விட்டது. வெறும் 5 ரூபாய்க்கெல்லாம் ஓரளவு ஒத்துக்கொள்ளக்கூடிய தரத்திலே N.95 கிடைக்கிறது. தற்போது பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வெறும் 250 ரூபாய்க்கும் கீழே சென்று, 2 மாதங்களுக்கு முன்பு 350 ரூபாய் கொடுத்து வாங்கியவர்களை பரிகாசம் செய்கிறது.

எல்லா சர்ஜிகல்ஸும் குறைந்தது ஒரு ஆக்ஸிசன் சிலிண்டராவது கையிருப்பாக வைத்திருக்கிறார்கள். அதில் மொத்தமாக ரூ. 50,000 முதல் 75,000 வரை முதலீடு செய்திருக்கிறார்கள். 47 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் ரூ.13,000 லிருந்து தற்போது வெறும் ரூ. 9,000க்கு கீழே போய்விட்டது.

2-வது அலையின் வேகம் கட்டுக்குள் வந்ததிலிருந்து, தற்போது வரையில் இவ்வளவு விலை குறைவு நடந்திருக்கிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அதிகமாகி விட்டார்கள். 3-வது அலை மட்டும் வரவில்லையெனில், எங்கள் கதை கந்தலாகிவிடும் என்று அவர்கள் வெளிப்படையாகவே புலம்புகிறார்கள். இப்படி, எல்லோரும் ஸ்டாக் மெயிண்டனஸ் என்கிற பெயரில் பெரும்பணத்தை பொருட்களின் மீது முடக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் மற்ற மருத்துவப்பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு பேமென்ட் என்பது வருவதே அபூர்வமாகிவிட்டது. லிக்விட் கேஷ் என்பதே துடைத்துப்போட்ட மாதிரி இருக்கிறது.

அனைத்து வர்த்தகர்களும் மிகவும் நம்பியிருப்பது தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளைத்தான். எல்லோரும் கும்பலாக ஒன்றாய் கூடுவார்கள், குறுக்கும், நெடுக்குமாய் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். நம் ஊர் பண்டிகைகளால் மட்டுமே கரோனாவை மீண்டும் கொண்டு வந்து, நம்மை வாழவைக்க முடியும் என்று அவர்கள் தீவிரமாய் நம்புகிறார்கள். அதற்கு நாம் கண்டிப்பாக இடம் கொடுத்துவிடக்கூடாது. தயவுசெய்து முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்லாதீர்கள், கூட்டமாக இருக்கும் இடத்திற்கு போகவே போகாதீர்கள். பண்டிகைக்கு வெகுநாட்களுக்கு முன்னரே தெளிவாக திட்டமிட்டு அனைத்து பர்ச்சேஸையும் முடித்து விடுங்கள். பண்டிகையைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சுற்றுலாவுக்குச் சென்று வம்பை விலைக்கு வாங்காதீர்கள்” என்று அப்பர்சுந்தரம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறார்.

இதுகுறித்து மருந்து வணிகர்கள் தரப்பில், ‘’முதல் அலையின்போது மாஸ்க், பி.பி.டி. கிட், மருந்துப்பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா எவ்வளவு துயரப்பட்டது, எத்தனை உயிர்களை பறிகொடுத்தோம் என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம். தற்போது உற்பத்தி பெருக்கப்பட்டு, அவை எல்லாமும் சுலபமாக கிடைப்பதால்தான் கரோனா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்படுகிறது.

3-வது அலை வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து, மக்களுக்கு தடையில்லாமல் இந்தப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவற்றை தேவையான அளவுக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளோம். மற்றபடி நாங்கள் கரோனா வரவேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்வதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. அதையெல்லாம் பொருட்படுத்தினால் மக்கள் உயிரை காப்பாற்றும் வணிகத்தில் யாரும் ஈடுபட முடியாது” என்று விளக்குகிறார்கள்.

அதனால் மக்களே! சுதந்திரம் என்ற பெயரில் கூட்டமான இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பாதுகாப்பாய் இருங்கள், பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in