‘கிளைமேட் கிரிமினல்’: அமெரிக்க அழகிக்கு குவியும் கண்டனங்கள்

3 நிமிட விமான பயணத்தால் சூடுபடும் கெய்லி ஜென்னர்
‘கிளைமேட் கிரிமினல்’: அமெரிக்க அழகிக்கு குவியும் கண்டனங்கள்

பருவநிலை மாற்றம் குறித்த கவலைகளில் உலகம் ஆழ்ந்திருக்கையில், அமெரிக்க கோடீஸ்வர அழகியான கெய்லி ஜென்னரின் செயல் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அண்மையில் அம்மணி 17 நிமிட கார் பயணத்தை தவிர்க்க, 3 நிமிட ஜெட் விமானத்தை தெரிவு செய்ததே இதற்குக் காரணம்.

வரலாற்றில் இதுவரை அனுபவித்திராத வெப்ப அலையை ஐரோப்பிய நாடுகள் பதிவு செய்து வருகின்றன. பிரிட்டன் தேசம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு எகிறியுள்ளது. உக்கிர வெப்பத்திலிருந்து தப்பிக்க கடற்கரைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 2 தினங்களில் மட்டும் ஆறு மற்றும் ஏரிகளில் மூழ்கியதில் குறைந்தது 6 பேர் பலியானதாக கவலை தெரிவிக்கிறார்கள்.

விமான நிலையங்களின் ஓடு பாதைகள் உச்ச வெப்பத்தால் பாதிக்கப்பட்டதில் சில மணி நேரங்களுக்கு விமானங்கள் தரையிறங்கலை ஒத்திப்போடும் விநோதம் நடந்தது. தகிக்கும் அனல் காரணமாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பயணத்துக்கான மின்தடங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக பிரிட்டனை பெரும் கவலை சூழ்ந்திருக்கிறது.

பிரான்ஸ் தேசத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தங்களது உயிரை துச்சமென மதித்து காட்டுத் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இதனையொட்டி சுமார் அரை லட்சம் மக்கள் தென்மேற்கு பிரான்சில் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750 பேர் வெப்ப அலைக்கு பலியாகி உள்ளார்கள்.

இந்தியாவில் நடைமுறை உதாரணமாக டெல்லியை முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலை படுத்தி எடுக்கிறது. பனிமலைகளின் உருகல் அதிகரித்து ஹவாய் உள்ளிட்ட தீவுகளின் கரைகள் கடலுக்குள் ஆழ்வது அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாய் பருவநிலை மாற்றத்தின் மோசமான அனுபவத்துக்கு உலகம் ஆளாகத் தொடங்கி இருக்கிறது. இந்த வெப்ப அலையின் தாக்கம் 2060-ம் ஆண்டு வரை தொடரும் என்ற ஐநா விடுத்துள்ள எச்சரிக்கையும் உலகத்தின் கவலையை மேலும் உயர்த்தி உள்ளது.

இந்த அங்கலாய்ப்புகளுக்கு நடுவே அமெரிக்க இளம் மாடலும் கோடீஸ்வரியுமான கெய்லி ஜென்னர் சில தினங்களுக்கு முன்னர் செய்த காரியம், உலகம் நெடுகிலுமிருந்து கண்டனங்களை பெற்று வருகிறது. உலகின் மிகவும் இளம் வயது பில்லியனராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் தனது 21 வயதில் பட்டியலானவர் கெய்லி ஜென்னர். அமெரிக்க இளசுகளை தனது அழகால் பித்தாக்கி வரும் கெய்லி, அதனையே முதலீடாக்கி தனது பெயரிலான அழகு சாதனப் பொருட்களால் கோடிகளை குவித்து வருகிறார்.

இது தவிர மாடல் உலகிலும் தடம் பதித்து வருகிறார். கார் பார்க்கிங்கில் நிற்பது போன்று குடும்பத்தினரின் பிரத்யேக தேவைக்காக தனி ஜெட் விமானங்களை கெய்லி குடும்பம் வைத்திருக்கிறது. அண்மையில் தனது காதலருடன் இணைந்து தத்தம் ஜெட் விமானங்கள் மத்தியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் கெய்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் முன்நிற்கிறது.

இந்த புகைப்பட பகிர்வையொட்டி கெய்லி மேற்கொண்ட இன்னொரு காரியமும் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் அது தொடர்பான காத்திருப்பை தவிர்ப்பதற்காக அடிக்கடி விமானங்களை பயன்படுத்துவது கெய்லியின் வழக்கம். அதிலும் அண்மையில் அவர் 3 நிமிட பயண தூரத்தை கடப்பதற்காக ஜெட் விமானத்தை பயன்படுத்தி பறந்த விவகாரம் மக்கள் மத்தியில் இப்போது கொதிப்பை உருவாக்கி உள்ளது.

சாலை மார்க்கமாக சென்றிருப்பின் அதிகபட்சம் 17 நிமிடங்களில் கடந்திருக்க வேண்டிய தொலைவினை ஆகாய மார்க்கமாக 3 நிமிட பயணத்துக்கு உட்படுத்தியிருக்கிறார். ஜெட் விமானங்கள் வெளியிடும் பசுமைக்குடில் வாயுக்கள் பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சொந்தமாக ஜெட் விமானங்களை பயன்படுத்தும் கொழுத்த பணக்காரர்கள் என்பதற்காக, கெய்லி போன்றவர்களின் சில நிமிட ஆகாய பயணத்தால் சக சாமானிய மக்களின் இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.

கெய்லியின் போக்கினை முன்னிறுத்தி உலக கோடீஸ்வரர்களின் பொறுப்பற்ற போக்கு பொதுவெளியில் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. பொதுப்பயணத்துக்கான விமானங்களைவிட இந்த பணக்காரர்களின் விமானங்கள் உலக வெப்பமயமாக்கலை துரிதமாக்குவதாக கண்டனங்கள் குவிகின்றன. ’கிளைமேட் கிரிமினல்’ என்ற அடைமொழியின் கீழ் ஜென்னரை சாடி வருகிறார்கள். ஆனால், விளம்பர விரும்பியான கெய்லி ஜென்னர் இந்த அதிருப்தி அலையை சாதகமாக்கி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பின்தொடர்வோர் எண்ணிக்கையை மேலும் கூட்டி வருகிறார். தனிப்பட்ட விமானப் பயணம் குறித்து வாய் திறக்காத கெய்லி, குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்கள் அறிமுகத்துக்கு இந்த கவன ஈர்ப்பை சமயோசிதமாய் பயன்படுத்தி வருகிறார்.

கெய்லி ஜென்னர்
கெய்லி ஜென்னர்

ஆனால், அவர் எதிர்பாரா வகையில், இணையவாசிகள் தரப்பிலிருந்து எதிர் தாக்குதலும் எழுந்துள்ளது. சொச்ச நிமிட பயணங்களுக்கு இனியும் கெய்லி ஜெட் விமானங்களை பயன்படுத்தினால், அவரது பிரத்யேக அழகு சாதன பொருட்களை புறக்கணிக்கப் போவதாக எதிர்ப்பு பிரச்சாரத்தை இணையவாசிகள் கையில் எடுத்துள்ளார்கள். இது கெய்லி மட்டுமறி சொந்தமாக விமானங்களை வைத்திருக்கும் இதர பில்லியனர்களையும் பதம் பார்த்துள்ளது.

அந்த பயம் இருக்கட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in