21 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற கார்த்திக்

புதுக்கோட்டை காளையும் காரை வென்றது
அமைச்சர்களிடம் கார் பரிசு பெறும் கார்த்திக்
அமைச்சர்களிடம் கார் பரிசு பெறும் கார்த்திக்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 1,020 காளைகள் வாடி வாசல் வழியே திறந்துவிடப்பட்டன. அந்தக் காளைகளை அடக்குவதற்காக முன்பதிவும், உடல் தகுதியும் பெற்ற 300 வீரர்கள் களமிறங்கினார்கள். மிகச்சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி, கடந்த ஆண்டை மிஞ்சும் வகையில் நடைபெற்றது.

போட்டியில், மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் மொத்தம் 21 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்றார். அவருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் 7 பேர் பயணிக்கும் பெரிய ரக காரான 'ரெனால்ட் ட்ரிபர்' (Renault Triber) காரை பரிசாக வழங்கினார்கள். 8 லட்சம் மதிப்புள்ள இந்தக் கார் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சார்பில், வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கார்த்திக் காளையை அடக்கிய காட்சி
கார்த்திக் காளையை அடக்கிய காட்சி

கார் பரிசுபெற்ற கார்த்திக் பேசுகையில், "இந்தப் போட்டியில் பங்கேற்க ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கச் சொன்னார்கள். நானும் விண்ணப்பித்தேன். ஆனால், டோக்கன் கிடைக்கவில்லை. எங்கள் மாவட்ட அமைச்சரும், எங்களின் அப்பாவைப் போன்றவருமான வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியிடம் முறையிட்டேன். அவன் நல்ல வீரன்பா என்று சொல்லி, எனக்கு டோக்கன் கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த போட்டியில் நான் வெற்றிபெறக் காரணம் எனக்கும் பயிற்சியும் ஊக்கமும் அளித்த மேட்டுப்பட்டு மல்லாத்து அண்ணன், கார்த்தி அண்ணன், அஜாய் அண்ணன், சக்தி அண்ணன், புதுப்பட்டி யோகேஷ் அண்ணன் ஆகியோருக்கும் நன்றி" என்றார்.

அடுத்து 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் 2-ம் பரிசு பெற்றார். அவருக்கு மோட்டார் பைக் பரிசளிக்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி 3-வது பரிசை சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் பெற்றார். அவருக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் தனது காளை சார்பில் கார் பரிசு பெற்ற காட்சி
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் தனது காளை சார்பில் கார் பரிசு பெற்ற காட்சி

இதேபோல களத்தில் நின்று விளையாடி, வீரர்களைப் பந்தாடிய காளைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவரது காளைக்கு கார் பரிசளிக்கப்பட்டது. திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராமலிங்கத்தின் காளை 2-வது பரிசாக மோட்டார் சைக்கிளை வென்றது. மதுரை குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதியின் காளை மூன்றாவது பரிசாக, ஒரு நாட்டுப் பசுவையும், கன்றையும் பெற்றது.

பரிசுபெற்ற மாடு பிடி வீரர்கள் வயதில் மிக இளையவர்களாகவும் தோற்றத்தில் ஏழை வீட்டுப் பிள்ளைகள் போலவும் இருந்தார்கள். மேடையில் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். ஆனால், காளை சார்பில் பரிசு வாங்கியவர்களோ பணக்காரர்களாக இருந்ததுடன், மேடையில் ஆர்ப்பாட்டமாகவும் நடந்துகொண்டார்கள்.

நேரமாகிவிட்டதால், கடைசியில் சில காளைகளை அவிழ்த்துவிட முடியவில்லை. அவற்றின் உரிமையாளர்கள் மாட்டை களமிறக்க அனுமதிக்குமாறு வற்புறுத்தினர். எனவே, அவர்களுக்கெல்லாம் தங்கக்காசை பரிசாக அறிவித்து விளையாட்டை முடித்து வைத்தார்கள் கிராமக் கமிட்டியினர். சில வீரர்கள் காயமடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in