வேதா நிலையத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக்

வேதா நிலையத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக்
கணவர் மாதவனுடன் ஜெ.தீபா...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவரது வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவுச் சின்னமாக மாற்றப்படும்’ என்று முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான அரசாணை வெளியிட்டதோடு, அந்த நிலத்தை கையகப்படுத்த தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690-ஐ நகர உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு செலுத்தியது. இதன் மூலம், ஜெயலலிதாவின் வீடு அரசின் சொத்தாகியது. வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் நகர நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தங்கள் மனுவில், "காலஞ்சென்ற ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்ந்த குடியிருப்பை அரசுடைமையாக்க அரசுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். குடியிருப்பை, நினைவில்லமாக மாற்றவும் தடை விதிக்க வேண்டும்.

வேதாநிலையம்
வேதாநிலையம்

சொத்து தொடர்பான வழக்கில், தங்களை நேரடி வாரிசு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பாணை தொகையான ரூ.67,88,59,690-ஐ நகர நீதிமன்றத்தில் வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு சட்டத்துக்கு எதிரானது" என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது’ என்று தீர்ப்பளித்து, அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்து 3 வாரங்களில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தை ஒப்படைக்க உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் வேதா நிலையத்தின் சாவியை ஆட்சியர் விஜயராணி இன்று ஒப்படைத்தார். சாவி ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, வேதா நிலையத்துக்கு வந்த தீபா, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது தீபா, “என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் அத்தை ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும். அரசு மேல்முறையீடு செய்தாலும் சந்திக்கத் தயார்” என்றார்.

Related Stories

No stories found.