சிபாரிசுக்கு உடன்படவில்லையா? அல்லது சட்டத்துக்கு புறப்பாக ஆளுநர் செயல்படுகிறாரா?

சிபாரிசுக்கு உடன்படவில்லையா? அல்லது சட்டத்துக்கு புறப்பாக ஆளுநர் செயல்படுகிறாரா?

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அதிமுக, பாஜக எதிர்த்தன.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள், மாநில அரசின் பரிந்துரையின் பேரில், ஆளுநரால் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே, துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமனம் செய்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தற்போது, தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிமுகம் செய்துள்ளார். இதற்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்ட மசோதாக்களை முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை, ஆளுநர் நியமனம் செய்வது, இதுவரை மரபாக இருந்து வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது நடைபெறுகிறது. இது மக்களாட்சி தத்துவத்துக்கு விரோதமானதாக உள்ளது. முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், மத்திய – மாநில அரசு உறவுகளை ஆராய அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அளித்த அறிக்கையில், அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவர் மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இதைப் பின்பற்றியே தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் திருத்தம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் பூஞ்சி ஆணைய பரிந்துரையை ஏற்கலாம் என்று அதிமுக ஆட்சியின்போதே தெரிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது இந்த மசோதாவை ஏற்பதில் அதிமுகவுக்கு நெருடல் இருக்காது. மேலும் இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை என்பதால், அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த மசோதாவை நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் பல்கலைக்கழங்களின் வேந்தராக முதல்வர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சட்ட மசோதாக்களை நிறைவேற்றித் தரக் கோரினார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் முதல்வர் பரிந்துரையை ஆளுநர் ஏற்காததால், பல்கலைக்கழக சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, முதல்வரே துணைவேந்தரை நியமித்தார். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பொறுப்பு வகித்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக, கமிஷன் அமைக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அதிகாரம் மருத்துவம், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

அவை முன்னவர் துரைமுருகன் சட்ட மசோதாவை முன்மொழிந்தார். அதன்பிறகு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்ட மசோதாக்கள் பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக மசோதா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உட்பட்டுதான் ஆளுநர் செயல்பட முடியும். அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது. அரசியல் சட்டத்தில் துணைவேந்தர் நியமனம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆளுநர் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்று கருத்தும் உள்ளது. துணைவேந்தரை அரசு நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதுகுறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், நடைபெற்றது. வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் ஆகிய தலைப்புகளில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசியபோது, “சுதந்திரத்துக்கு முந்தைய கல்வி முறை, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டுச் செல்ல பல்கலைக்கழகங்கள் பன்முகத் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய யுஜிசி தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார், “கிராமப் புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் தர உயர்கல்வி கிடைக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் வாழ்வு மாற்றமடைய வேண்டும். மாணவர்கள் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வியை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்க அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேல் பட்டப்படிப்புகளை, மாணவர்கள் பயில, பல்கலைக்கழங்கள் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் புதிய தேசியக் கொள்கையில் உள்ள சிறப்பான அம்சங்கள் மூலம் மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாக மாறலாம். தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படுகிறதா?

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரைத் தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை ஆளுநர் நியமிப்பார். இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், ஆளுநர் சார்பில் ஒருவரும், தமிழக அரசின் சார்பில் ஒருவரும் இடம் பெறுவர். பிறகு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பெற அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அவர்களில் தகுதியானவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்களுள் 3 பெயர்கள், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆளுநர், மூவரில் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்வார். இதுதான் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மரபு. இது ஒருபுறம் இருக்க, தற்போது, தமிழகத்தில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசின் பங்கு முழுமையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

‘ஒரே தேசம் ஒரே கல்வி’ என்ற தொலை நோக்குப் பார்வை வெற்றி பெற வேண்டும் என்றால், கல்வித் திட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசிடம் செல்லும் என்றால் அப்பதவி நியமனத்தில் ஊழல் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. பல்கலைக்கழகங்கள் அப்போது ஆட்சி புரியும் கட்சிகளின் கொள்கைப் பரப்பு கழகங்களாக மாற வாய்ப்புள்ளது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக ஆக்கக் கூடாது என்று கட்டுப்பாடு கொண்டு வரலாம்.

இந்த மசோதாவின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்து, கல்வி மேம்பாட்டுக்கு உதவினால், மாணவர்களுக்கு அது நன்மையாக அமையும். காத்திருப்போம் நல்ல முடிவுக்காக…!

மற்றொரு புறம் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளாக உள்ளவர்களே மாநில ஆளுநர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு எதிர்ப்பு மனநிலையோடு மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பாக இந்திய அரசின் கட்சிப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

துணைவேந்தர் பதவிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற சில சிபாரிசுகளுக்கு ஆளுநர்கள் உடன்படுவதில்லை என்பதாலும் அவர்களின் அதிகாரம் பறிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in