எனது பிள்ளைகள் இந்திய ராணுவத்தில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்!

‘வீரத்தாய்’ விருதுபெற்ற சந்திரிகா தேவி பெருமிதம்
எனது பிள்ளைகள் இந்திய ராணுவத்தில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்!
சந்திரிகா தேவி

“கணவரைத் தொடர்ந்து எனது 2 மகன்களும் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என பெருமிதம் கொள்கிறார், இந்திய ராணுவத்தின் ‘வீரத்தாய்’ விருதுபெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரிகா தேவி.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான மீனச்சலைச் சேர்ந்தவர் சந்திரிகாதேவி (71). சமீபத்தில் வீடு தேடி வந்து, சந்திரிகாதேவிக்கு ‘வீரத்தாய்’ விருதை வழங்கி கவுரவித்தார் இந்திய ராணுவ அதிகாரி தனிஸ்லாஸ். நாட்டுக்காக ராணுவத்தில் உளப்பூர்வமாக சேவை செய்யும் குடும்பத்தினரை டெல்லிக்கு வரவழைத்து, இதுபோன்ற விருது வழங்குவதுதான் வழக்கம். தற்போது, கரோனா காலம் என்பதால் சந்திரிகா தேவியை டெல்லிக்கு அழைக்காமல், இந்திய ராணுவ அதிகாரியே நேரடியாக வந்து அவருக்கு இந்த விருதை வழங்கினார்.

விருது வழங்கப்பட்ட போது...
விருது வழங்கப்பட்ட போது...

சந்திரிகாதேவியின் கணவர் தனஜெயன் நாயர் (83) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். கடந்த டிசம்பர் மாதம் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இவர்களுக்கு 5 மகன்கள். இவர்களில் 3-வது மகன் வனஜெயன், 4-வது மகன் தவுகித்திரி ஜெயன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் பணியில் உள்ளனர். தனஜெயன் நாயரும், சந்திரிகா தேவியும் தங்களது மகன்களுக்கு ஊக்கமளித்து, ராணுவப் பணிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் என 3 பேர் நாட்டைக் காக்கும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதைக் கவுரவிக்கும் வகையிலும், அதன் பின்புலத்தில் ஒரு பெண்ணின் தேசப்பற்று இருப்பதையும் பாராட்டி, இந்த விருது சந்திரிகா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய சந்திரிகாதேவி, “பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்காக எனது கணவர் பங்கேற்ற காலகட்டம் அது. மிலிட்டரிக்காரருக்கு பெண் கொடுக்க எனது பெற்றோர் தயக்கம் காட்டியபோதும், நாட்டுக்காக சேவை செய்பவரையே மணக்க முடிவு செய்து, அவரையே திருமணம் செய்துகொண்டேன். அவர் இறந்த பிறகும் அவரது இடத்திலிருந்து எங்களின் 2 மகன்களும் ராணுவ சேவையைத் தொடர்கிறார்கள்.

எனது கணவரின் நினைவாக, எனது 2 பிள்ளைகளும் இந்திய நாட்டை காக்கும் பணியில் சிறிய பங்களிப்பாவது ஆற்றுகிறார்கள் என்பது, என்னை பெருமை அடையச் செய்கிறது. எங்கள் பிள்ளைகளைப் போலவே, நாட்டைக்காக்கும் பணிக்காக இளைஞர்கள் ஆர்வத்துடன் ராணுவத்தில் சேரவேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in