வேண்டாம் விருதுகள்!

அங்கீகாரம் மறுத்த ஆளுமைகள்
வேண்டாம் விருதுகள்!

குடியரசு தினத்தையொட்டி தங்களுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதை, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், வங்க இசைக் கலைஞர் சந்தியா முகர்ஜியும் ஏற்க மறுத்திருக்கிறார்கள். இந்தியக் குடிமக்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகள் ‘பாரத் ரத்னா’வும் ‘பத்ம விருது’களும்தான். இத்தனை உயரிய அங்கீகாரத்தை மறுதலிப்பது அசாதாரண விஷயம். அதேவேளையில், இது புதிதல்ல. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பத்ம விருதுகளை இதற்கு முன்னும் பலர் மறுதலித்திருக்கிறார்கள். விருது மறுத்த வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

கடமைக்கு விருது?

பொதுவாக, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களின் ஒப்புதல் பெற்றே பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். விருது அறிவிக்கப்பட்ட பிறகு மறுப்பது மிக அரிதான நிகழ்வு. பலரும் தாங்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சொன்னபோதே மறுத்திருக்கிறார்கள். பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இதில், பத்ம விபூஷண் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

பி.என்.ஹக்ஸர்
பி.என்.ஹக்ஸர்

இதுவரை மூவர் பத்ம விபூஷண் விருதை மறுத்திருக்கிறார்கள். இந்தோ - சோவியத் நட்புக்கும், சிம்லா ஒப்பந்தத்திலும் முக்கியப் பங்கு வகித்ததற்காகத் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை 1973-ல் மறுத்தார், அரசியல் ஆலோசகர் பி.என்.ஹக்ஸர். தனது கடமையைச் செய்ததற்காக வழங்கப்பட்ட அந்த அங்கீகாரம், தன்னைச் சங்கடத்துக்கு ஆளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும் கேரளத்தின் முதல் முதல்வராகவும் இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பத்ம விபூஷண் விருதை 1992-ல் மறுத்தார். அரசின் விருதுகளை ஏற்கக் கூடாது என்கிற தன் கொள்கைக்கு எதிரானது என்பதால், அந்த விருதை மறுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். ராமகிருஷ்ண மடத்துக்கு அல்லாமல் தனி மனிதனாகத் தனக்குத் தரப்படும் விருதை ஏற்பதற்கில்லை என்று சுவாமி ரங்கநாதானந்தா, 2000-ல் பத்ம விபூஷண் விருதை மறுத்தார்.

அரசின் அக்கறை?

பத்ம பூஷண் விருதை இதுவரை 12 பேர் மறுத்திருக்கிறார்கள். இதிலும் மேற்கு வங்கம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. நாடகக் கலைஞர் சிசிர் குமார் பாதுரி, 1959-ல் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை மறுத்தார். அரசு, தான் விரும்பும் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அதிகாரமாக இதுபோன்ற விருதுகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தவிர, அந்த விருதைத் தான் ஏற்றுக்கொண்டால், நாடகத் துறைக்குத் தேசிய அளவில் உண்மையிலேயே அரசு முக்கியத்துவம் தருவதுபோன்ற தவறான பிம்பம் உருவாகிவிடும் என்றும் சிசிர் குமார் தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான (2000 – 2011) புத்ததேவ் பட்டாச்சார்யா, இந்த ஆண்டு தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை மறுத்திருப்பதை இதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். “எனக்கு இந்த விருது அறிவிப்பு குறித்து எதுவும் தெரியாது. யாரும் இதைப் பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை. எனக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக இருக்கும்பட்சத்தில் அதை நான் மறுக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். புத்ததேவ் சார்பாக அவரது கட்சி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் தகவலில், “இதுபோன்ற விருதுகளை ஏற்கக் கூடாது என்பது எங்கள் கட்சியின் கொள்கை. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம், விருதுகளுக்காக அல்ல” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர் நிகில் சக்கரவர்த்தி 1990-ல் பத்ம பூஷண் விருதை மறுத்தார். பத்திரிகையாளர்கள் எந்தவொரு நிறுவனத்தோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அதற்குக் காரணமும் கூறினார். கிட்டத்தட்ட இப்படியொரு காரணத்தை முன்வைத்து, 1999-ல் பத்ம பூஷண் விருதைப் பத்திரிகையாளர் கே.சுப்பிரமணியம் மறுத்தார்.

தாமதம் அவமானம்

தனது 55 ஆண்டு கால இசை வாழ்க்கைக்கு மிகத் தாமதமாகக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்று கூறி, பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி 2013-ல் பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்தார். தான் அரசுக்கு எதிரானவர் அல்ல என்று குறிப்பிட்ட ஜானகி, அரசின் விருது அறிவிப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தென்னிந்தியக் கலைஞர்கள் மீது அரசு கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பாடகி எஸ்.ஜானகி
பாடகி எஸ்.ஜானகி

வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பருக்கு 1992-ல் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, அதை ஏற்க மறுத்தார். 2005-ம் ஆண்டிலும் அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை மறுத்துவிட்டார். “இதுபோன்ற விருதுகளை வழங்குவது அரசா அல்லது ஆட்சியில் இருக்கிறவர்களா என்பதை முதலில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், அரசுக்கு ஆதரவாக இருக்கிறவர்களுக்குத்தான் விருது வழங்கப்படுகிறது என்கிற பிம்பம் உருவாகிவிடும். தேர்வுக் குழு குறித்த வெளிப்படைத்தன்மையும் அவசியம். தவிர, ஏற்கெனவே போதுமான அங்கீகாரம் பெற்றவர்களுக்கு இந்த விருதை வழங்குவதால் என்ன பலன்?” என்று தன் மறுப்புக்குக் காரணம் சொன்னார் ரொமிலா. கல்வி நிறுவனங்கள் சார்பாகவும், தான் சார்ந்த துறை சார்பாகவும் வழங்கப்படும் அங்கீகாரங்களை மட்டுமே தான் ஏற்பதாக அவர் சொன்ன விளக்கம் சிந்திக்கத்தக்கது.

அரசியல் உள்நோக்கம்?

பத்மஸ்ரீ விருதை இதுவரை 18 பேர் மறுத்துள்ளனர். எழுத்தாளர் கீதா மேத்தா, 2019-ல் இந்த விருதை மறுத்தார். விருதுக்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டவர், மக்களவைத் தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் இந்த விருது வழங்கப்படுவது தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்று தெரிவித்தார். தனக்கும் அரசுக்கும் இது சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக அறிஞர் சித்தேஸ்வர சுவாமி, 2018-ல் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். சந்நியாசிக்கு எந்தவொரு அங்கீகாரமும் கவுரவமும் தேவையில்லை என்றும் இதற்கு முன், தான் எந்தவொரு விருதையும் ஏற்றதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிதார் கலைஞர் உஸ்தாத் இம்ரத் கான், 82 வயதில் தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை 2017-ல் மறுத்தார். தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் தன் இசைப் பயணத்தை அரசு அங்கீகரித்ததை நினைத்துக் கலவையான எண்ணங்கள் தோன்றுவதாகக் கூறிய இம்ரத் கான், தன்னைவிட இளைய கலைஞர்கள் பத்ம பூஷண் விருது பெற்றிருக்கும் நிலையில் இந்த விருதை ஏற்பதற்கில்லை என்று சற்று கசப்புடனேயே குறிப்பிட்டார்.

நெருக்கடி காலகட்டத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் விரேந்திர கபூர், 2016-ல் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். தான் அரசுக்கு எந்த வகையிலும் எதிரானவர் அல்ல என்பதைச் சொன்னதோடு, 40 ஆண்டுகளாக அரசிடமிருந்து எதையும் பெறாத நிலையில், இந்த விருதையும் ஏற்க மறுப்பதாகத் தெரிவித்தார். அசாமிய பத்திரிகையாளர் கனக் சென் தேகா, தான் அதுவரை எழுத்துப் பணி - பத்திரிகைப் பணி சார்ந்து பெற்ற விருதுகளின் ஒளியின் முன்னால் பத்மஸ்ரீ மங்கித் தெரியும் என்பதற்காக, விருதை ஏற்க மறுப்பதாக 2005-ல் தெரிவித்தார்.

மூத்த பாலிவுட் நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான், 2015-ல் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். இந்தி நடிகர் சல்மான் கானின் தந்தையான இவர், தன்னைவிட இளையவர்கள் இந்த விருதை ஏற்கெனவே பெற்றிருந்த நிலையில் தனக்குத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால், மறுப்பதாகத் தெரிவித்தார். இந்தித் திரையுலகில் இதைவிடப் பெரிய அங்கீகாரத்தைத் தான் அடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாரபட்சமான செயல்

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான சுகுமார் அழிக்கோடு, 2007-ல் இந்த விருதை மறுத்தார். இந்தியத் தத்துவம், வேதங்கள், உபநிடதங்கள் குறித்து ‘தத்வமஸி’ என்கிற நூலை எழுதிய இவர், தன் இலக்கியப் பங்களிப்புக்காகப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். ஆனால், ஒன்றிய அரசால் வழங்கப்படும் இதுபோன்ற விருதுகள், இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று மறுத்தார். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்று சொல்லும் அரசு, இப்படிப் பல்வேறு படிநிலைகளில் விருதுகளை வழங்குவதன்மூலம் பாரபட்சம் காட்டுவதாகவும் அரசின் இந்தச் செயல்பாட்டைச் சுட்டிக்காட்ட இந்த விருது தனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததாகவும் சுகுமார் தெரிவித்தார்.

இளையோர் விருது

மமோனி ராய்சன் கோஸ்வாமி என்கிற பெயரில் இயங்கிய அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி, 2002-ல் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற பிறகு, தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதைத் தன் வாசகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லியிருந்தார் இந்திரா கோஸ்வாமி.

இந்திரா கோஸ்வாமி
இந்திரா கோஸ்வாமி

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வுசெய்யப்படவுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டதுமே, அது இளையோருக்கு வழங்கப்படும் விருது என்று மறுத்தார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழம்பெரும் பாடகி சந்தியா முகர்ஜி. இதுகுறித்த தகவல் அரசு தரப்பில் சொல்லப்பட்டபோது, தன் அம்மா அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக சந்தியாவின் மகள் சௌமி சென்குப்தா தெரிவித்துள்ளார். ‘பத்மஸ்ரீ’ பெயர்ப் பட்டியலில் தன் பெயர் இடம்பெறுவதில் தன் அம்மாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறிய சௌமி, 80 ஆண்டுகளாகக் கலைத் துறையில் ஈடுபட்டுவரும் தன் அம்மாவைப் போன்ற ‘கீதாஸ்ரீ’க்கு பத்மஸ்ரீ விருது ஈடில்லை என்றும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

உயரிய விருதுகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் என்பதையும் தாண்டி, தங்கள் கொள்கைகள், மதிப்பீடுகள், ஆதங்கம், சமூகப் பார்வை எனப் பலவற்றுக்கும் ஆளுமைகள் முக்கியத்துவம் தருவதையே, இந்த விருது மறுப்புகள் உணர்த்துகின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in