கடன் தொல்லையால் 10 வயது மகனைக் கொன்று கணவன், மனைவி தற்கொலை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சோகம்
கடன் தொல்லையால் 10 வயது மகனைக் கொன்று கணவன், மனைவி தற்கொலை
சிவாஜி, வனிதா

சென்னையில் கடன் தொல்லையால் மகனைக் கொன்று விட்டு, கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் டெய்லர் சிவாஜி(43). இவருக்கு திருமணமாகி வனிதா(32) என்ற மனைவியும், வெற்றிவேல்(10) என்ற மகனும் உள்ளனர். மனைவி வனிதா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மகன் வெற்றிவேல் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிவாஜி. தனது டெய்லர் தொழிலை மேம்படுத்த நண்பர்களிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடங்கியதால், வறுமையில் வாடிய சிவாஜி தனது குடும்பத்தை வழிநடத்த வசதி இன்றி சிரமப்பட்டார்.

இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்ததால், என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் சிவாஜி வீட்டு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது சிவாஜி, வனிதா இருவரும் தூக்கிலும் மகன் வெற்றிவேல் தரையில் பிணமாக இருப்பதைக் கண்டனர்.

மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், சிவாஜி வீட்டில் இருந்து கடிதம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அதில், கடன் சுமை காரணமாக தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கடன்தொல்லையால் நேற்று(டிச.14) இரவு மகன் வெற்றிவேலை கொலை செய்து விட்டு, சிவாஜியும் அவரது மனைவி வனிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.