குமரி பெருவெள்ளம் காட்டிய நம்பிக்கை முகங்கள்!

கவனம் குவித்த இளைஞர் படை
குமரி பெருவெள்ளம் காட்டிய நம்பிக்கை முகங்கள்!
டிராக்டரில் செல்லும் மருத்துவர் காயத்ரி பிரியதர்ஷினி

கன்னியாகுமரி மாவட்டத்தையே வரலாறு காணாத பெருமழை புரட்டி எடுத்திருந்தது. அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும், மழைநீருமாக நீராதாரங்களை நிரப்பி, ஒருகட்டத்தில் ஊர்களுக்குள்ளும் புகுந்தது. இப்போதுதான் வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ளது. ஆனாலும் பெருமழையும், வெள்ளமும் ஏற்படுத்தியிருக்கும் சேதங்கள் கணக்கில் அடங்காதவை. பெருமழையும், வெள்ளமும் புரட்டிப்போட குமரியின் மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக குமரிக்கு வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையைக் கேட்டறிந்தார். இந்தப் பெருமழை, அரசியல் களத்தைக் கடந்தும் சில இளைஞர்களையும் உன்னிப்பாக கவனிக்கவைத்துள்ளது.

ஆய்வக மெஸ்ஸில் உணவு பார்சல் செய்யும் பணியாளர்கள்
ஆய்வக மெஸ்ஸில் உணவு பார்சல் செய்யும் பணியாளர்கள்

மருத்துவர் காயத்ரி பிரியதர்ஷினி, நாகர்கோவிலில் இயங்கிவரும் விவேக் லேபின் நிர்வாக இயக்குநர். கரோனா பரிசோதனை தொடங்கி, நாகர்கோவிலில் அனைத்து வசதிகளும் கொண்ட லேப் இது என்பதால், எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்த லேபிலேயே பணியாளர்களுக்கான மெஸ்ஸும், தங்கும் வசதியும் உள்ளது. பெருமழையில் இந்த மெஸ்ஸை தன் பணியாளர்களுக்கானதாக மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்டோருக்கான உணவு தயாரிக்கும் கூடமாக மாற்றிவிட்டார். கூடவே பைக்கோ, காரோ செல்லமுடியாத பகுதிகளில் டிராக்டரில் சென்று உணவுப்பொருட்களை விநியோகம் செய்தார் மருத்துவர் காயத்ரி பிரியதர்ஷினி. இதுகுறித்து அவர் கூறும்போது, "எங்கள் ஆய்வகத்தில் வேலை செய்பவர்களுக்கான மெஸ்ஸில் எப்போதும் பணியாளர்களுக்கு உணவு தயாராகிவரும். பெருமழையினால் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் பணியாளர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. அவர் போன் செய்து, அங்குள்ள சூழலையும் விளக்கினார். உடனே, லேப் மெஸ்ஸில் சமைத்து சுசீந்திரம் பகுதிவாசிகளுக்கு வழங்கினோம்.

முகாமில் இருப்பவர்களுக்கு உணவு கிடைத்துவந்தது. அதனால் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமலும், வீட்டுக்குள் சமைக்க முடியாமல் முடங்கிப் போனவர்களுக்கும் உணவினைக் கொண்டுபோய் சேர்த்தோம். மறுநாளில் இருந்தே பூதப்பாண்டி, ஆஸ்ராமம், அரிய பெருமாள்காலனி என கடுமையாக மழையால் பாதிக்கப்பட்ட பலபகுதிகளுக்கும் மூன்று வேளை சாப்பாடு விநியோகம் செய்தோம். இன்றுதான் மக்கள் முற்றாக இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர். அதனால் உணவு விநியோகத்தையும் நிறுத்தியிருக்கிறேன்" எனச் சொல்லும் மருத்துவர் காயத்ரி பிரியதர்ஷினி, தூய்மை பாரத இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

மீட்புப் பணியில் டைசன்
மீட்புப் பணியில் டைசன்

நாகர்கோவில் வேதநகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, டைசன். சுசீந்திரம்_தேரூர் சாலையில் தண்ணீர் புகுந்து 40-க்கும் அதிகமானோர் தவிப்பதாகத் தகவல் கிடைத்ததும், மார்பு அளவு தண்ணீரில் போய் உணவைச் சேர்த்திருக்கிறார். கூடவே மீட்புப்பணியிலும் ஈடுபட்ட டைசன் இதுகுறித்து காமதேனுவிடம் கூறும்போது, “ஒக்கி புயலின் போதும் களத்தில் இருந்தேன். அப்போது ஏராளமான மின்கம்பங்கள் விழுந்து குமரியின் முகமே மாறிப்போய் இருந்தது. ஆனால் இந்தப் பெருமழையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டதே பிரதான பிரச்சினையாக இருந்தது. முகாம்களில் இருந்தவர்களுக்கு அரசே பெட்சீட், பாய், உணவு என அனைத்தும் கொடுத்துவிட்டது. இதனால் தீயணைப்புத் துறையினரோடு சேர்ந்து குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தோரை மீட்கும் பணியில் நானும், நண்பர்களுமாக ஈடுபட்டோம். மீட்புப் படகு நுழைய முடியாத பகுதிகளில் கயிறுகட்டி மக்களை மீட்க துணைபுரிந்தோம். நான் மட்டுமல்ல ஒவ்வொரு பகுதியிலும் இப்படி தன்னார்வமாக இளைஞர்கள்கூடி இந்தப் பணியைச் செய்தார்கள்’’ என்கிறார்.

தீயணைப்புத் துறையினரோடு டைசனும் அவரது நண்பர்களும்...
தீயணைப்புத் துறையினரோடு டைசனும் அவரது நண்பர்களும்...

இதேபோல் சர்ஜின், நாஞ்சில் ராகுல், பிரிஸ்டோ உள்ளிட்ட பல இளைஞர்களும் முகாம்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகளிலும் தீவிர களப்பணியாற்றினர். எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட, இதுபோன்ற இளைஞர் படையின் உழைப்பு இந்த பெருமழை, வெள்ளத்தில் கவனம் குவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in