சமூக நாய்களுக்காக ஓர் கருணை இல்லம்!

வாயில்லா ஜீவன்களைக் காக்கும் ஜீவகாருண்யா ஷோபா
சமூக நாய்களுக்காக ஓர் கருணை இல்லம்!

சாலையோரத்தில் பசியால் தவிக்கும் சமூக (தெரு) நாய்களுக்கு தினசரி உணவிடுவதோடு, ஆதரவின்றி சாலைகளில் அடிபட்டுத் தவிக்கும் சமூக நாய்களை மீட்டு அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக ஒரு இல்லம் நடத்துகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஷோபா!

நாய்களுக்கு உணவிடும் ஷோபா...
நாய்களுக்கு உணவிடும் ஷோபா...

சமூக சேவையில் ஆதீத ஈடுபாடுகொண்ட ஷோபா, தன் வாழ்வையும் அதை மையப்படுத்தியே தகவமைத்துக் கொண்டவர். பைரவி ஃபவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்களின் மேம்பாட்டுக்கு உதவிவந்தவர், சமூக நாய்களை மீட்பதில் ஆர்வம் வந்தது குறித்து முகமலர்ச்சியுடன் சொல்லத் துவங்கினார்.

“இருபது வயதிலேயே சமூகப் பணிக்கு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் நேரு யுவகேந்திராவில் தொடங்கிய என் பயணத்தில், பைரவி ஃபவுண்டேசன் என்னும் அமைப்பை பெண்களை மேம்படுத்தும்வகையில் துவங்கினேன். ஒரு பெண்ணாக என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும், சோகங்களையும் சந்தித்ததால் தான் பெண்கள் மேம்பாட்டை நோக்கி பணிசெய்தேன். சிறு வயதிலிருந்தே நாய்கள் மீதும் எனக்கு சிநேகம் உண்டு. அதனால் தான் பிரத்யேகமாக நாய்களுக்கென்றே ஜீவகாருண்யா என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

எங்கள் வீட்டில் அப்போது ஆடு, மாடு, கோழி எல்லாம் இருந்தது. அதனால் செல்லப்பிராணிகளின் மீது எனக்கு எப்போதுமே கிரேஸ் உண்டு. அதுவும் நாய்களின் மீது தனிப்பட்ட பாசம் உண்டு. வீட்டிலேயே சாப்பாடு சமைத்து எடுத்துக் கொண்டுபோய் சமூக (தெரு) நாய்களுக்குக் கொடுப்பேன். சாலையில் எங்காவது நாய் அடிபட்டுக் கிடந்தால் மருத்துவரை அழைத்துவந்து சிகிச்சை கொடுப்பேன். சிகிச்சை முடிந்ததும் அந்த நாய்களுக்கு ஓய்வுதேவை. அப்படி அவற்றுக்கு ஓய்வளிக்கத் தேவையான இட வசதி அப்போது எங்களிடம் இல்லாமல் இருந்தது.

ஒருமுறை, சாலையில் அடிபட்ட நாய் ஒன்றை மீட்டு சிகிச்சையும் கொடுத்துவிட்டோம். அதற்கு காலில் பிளேட் வைத்திருந்தோம். ஆனால், அதற்கு ஓய்வு கொடுக்க இட வசதி இல்லை. என் வீட்டிலும், தோழிகளின் வீட்டிலுமாக மாறி மாறி வைத்து பராமரித்தோம். இன்னொருமுறை, விபத்தில் அடிபட்டு பலத்த காயம்பட்ட ஒரு நாயை சிகிச்சைக்கு எடுத்துச் சென்றேன். ஆனால், காலதாமதம் ஆனதால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. இது என் மனதை ரொம்பவே பாதித்தது.

அதன் பின்பு தான் நாம் இரக்கப்பட்டு சேவை செய்தாலும் முறைபடுத்தப்பட்ட அமைப்புத்தேவை எனத் தோன்றியது. அதற்காகவே, நாய்களை வைத்துப் பராமரிக்க ஓர் இடம், 24 மணிநேரமும் சிகிச்சையளிக்க ஒரு கால்நடை மருத்துவர் என்ற இலக்கோடு ஜீவகாருண்யா அமைப்பைத் தொடங்கினேன். இது மத்திய அரசின் பங்களிப்போடு நடைபெறும் திட்டம்.” என்று சொன்னார் ஷோபா.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் குத்தகைக்கு இடம் எடுத்து அங்கே ஆதரவற்ற சமூக நாய்களை வைத்துப் பராமரிக்கும் ஷோபாவுக்கு நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைப்புகள் வருகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நாயை மீட்கக் கோரும் அழைப்பு, தாய் இறந்துவிட்டதால் தவிக்கும் குட்டி நாய்களை மீட்கக் கோரும் அழைப்பு என தினமும் நான்கைந்து அழைப்புகளாவது வந்துவிடுகிறதாம். இப்போது ஜீவகாருண்யா அமைப்பானது தனது இல்லத்திலேயே கால்நடை மருத்துவ மனையையும் நிர்வகிக்கிறது. இங்கு கால்நடை மருத்துவர் பணியில் இருப்பார். சமூக நாய்களுக்கு இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடந்து நம்மிடம் பேசிய ஷோபா, “எங்களிடம் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் இருக்கும் நாய்களுக்கு மட்டும் ஒரு வேளைக்கு 7 கிலோ சாப்பாடு தயார் செய்வோம். கோழிக் கழிவுகளைப் போடுவதற்குப் பதிலாக பரோட்டாக் கடைகளில் மீதமாகும் கோழி கிரேவி, பீஸ்களை மொத்தமாக கலெக்ட் செய்து கொள்வோம். நாகர்கோவில் மாநகராட்சியின் உதவியோடு மீன் சந்தைகளில் இருந்து மீன் கழிவுகளும் எங்களுக்கு வரும். தினமும் இதையெல்லாம் சேகரித்து வருவதே எங்களுக்கு பெரிய வேலைதான். இருந்தாலும் தொய்வின்றி தொடர்கிறோம்

சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்க்கொண்டு இரண்டு பிள்ளைகளோடு நின்றபோது எனக்கு இளைப்பாறுதலாக இருந்தது நான் வளர்த்த செல்லப்பிராணிகள் தான். அதனால்தான் ஆதரவற்ற நாய்களுக்காக இத்தனை அக்கறைப்படுகிறேன். நாய்களோடு அதிக நேரம் செலவிடும் எனக்கு இப்போது அவர்களின் உணர்வுகள்கூட புரியும். வலித்து அழுகிறதா, பசித்து அழுகிறதா என குரைக்கும் சத்தத்தை வைத்தே கண்டுபிடித்து விடுவேன். மனிதர்களிடம் கிடைக்காத பேரன்பை நான் இந்த நாய்களிடம் உணர்ந்திருக்கிறேன்” என்றார்.

சமூக நாய்களுக்கு சிகிச்சை ...
சமூக நாய்களுக்கு சிகிச்சை ...

சாலையில் தாயின்றி தவிக்கும் நாய்க் குட்டிகளை எடுத்து வளர்த்து, அதை வீட்டில் வளர்க்க விரும்புவோருக்கு கொடுத்தும் வருகிறார் ஷோபா. அதுகுறித்து பேசிய அவர், “தாய் நாய்கள் இறந்து போவது குறைவாகவே நடக்கும். பெரும்பாலான நேரங்களில் குட்டி நாய்கள் தாயைவிட்டு எங்காவது வழிதவறிச் சென்றுவிடும். முடிந்தவரை அவற்றை தாயோடு சேர்த்துவைக்க முயற்சிப்போம். முடியாத பட்சத்தில் குட்டிகளை நாங்களே எடுத்து வளர்ப்போம். குட்டிகள் வளர்ந்ததும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அவற்றின் போட்டோவைப் பதிவிடுவோம். எங்களிடம் இருக்கும் நாய்ப் பிரியர்களின் எண்களுக்கும் தகவல் அனுப்புவோம்.

ஆர்வம் உள்ளவர்கள் வந்து வாங்கிச் சென்று வளர்ப்பார்கள். அவை எப்படி வளர்கின்றன என்பதை நாங்களே அவ்வப்போது நேரில் சென்று பார்த்தும் வருவோம். அந்த நாய்களுக்கு ஜீவகாருண்யா இல்லத்தில் எந்த நேரத்திலும் இலவச சிகிச்சை உண்டு” என்றார்.

கரோனா பொதுமுடக்க சமயத்தில் அனைத்துக் கடைகளும் பூட்டிக் கிடந்ததால் சமூக நாய்கள் அன்றாட உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டன. அந்த சமயத்தில் தினமும் 500 நாய்களுக்கு உணவு தயாரித்து அவற்றின் இருப்பிடங்களுக்கே போய் தந்திருக்கிறார் ஷோபா.

ஷோபாவின் ஜீவகாருண்யா இல்லத்தில் இப்போது 22 வளர்ந்த நாய்களும் 18 குட்டி நாய்களும் இருக்கின்றன. வளர்ந்த நாய்கள் அனைத்துமே சிகிச்சைக்காகவும் சிகிச்சை முடிந்து ஓய்வுக்காகவும் இங்கே இருப்பவை. அவற்றின் மத்தியில் அமர்ந்தபடியே நம்மிடம் நிறைவாகப் பேசிய ஷோபா, “வீடுகளில் உயர் ரக நாய் வளர்ப்பையே இப்போது பலரும் விரும்புகிறார்கள். நம் பாரம்பரிய நாட்டு நாய்களின் பெருமை அவர்களுக்குத் தெரியவில்லை. நாட்டு நாய்கள் உயர் ரக நாய்களைவிட ஒருபடி உயர்ந்தது தான். நாய்களுக்கான எனது இந்த சேவைக்குள் நாட்டு நாய்களைப் பாதுகாக்கும் அக்கறையும் இருக்கிறது” என்று முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in