
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கூலித் தொழிலாளியான கணவன் உயிரிழந்த நிலையில், ஐந்து குழந்தைகளுடன் ஆதரவற்று நின்ற பெண்ணுக்கு காவல் துறையினர் ஒன்று சேர்ந்து வீடுகட்டிக் கொடுத்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (34). இவர்களுக்கு 16 வயது முதல் 5 வயது வரையிலான ஐந்து குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச்சில் சாலை விபத்தில் சக்திவேல் உயிரிழந்து விட்டார். அதனால் ஆதரவற்ற முத்துலட்சுமி மிகவும் சிரமத்துக்கு உள்ளானார். ஏழ்மை நிலையில் இருந்த அவர், ஒழுகும் கூரை வீட்டில் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு துயரப்பட்டார்.
இதையறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸார் தங்களுக்குள் ஒரு 'வாட்ஸ்அப்' குழுவை உருவாக்கி அதன் மூலமாக முத்துலட்சுமிக்கு உதவ முன்வந்தனர். தங்களுக்குள் நிதி திரட்டிய நிலையில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் சேர்ந்தது. அதை வைத்து முத்துலட்சுமியின் இடத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.
இந்த வீட்டை கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேற்று திறந்து வைத்தார். வீட்டிற்கு தேவையான பொருட்களை விருத்தாசலம் உட்கோட்ட போலீஸார் வாங்கி கொடுத்துள்ளனர். இதை பலரும் பாராட்டினர். மேலும், கணவரை இழந்த முத்துலட்சுமியால், குழந்தைகளை படிக்க வைக்க வசதி இல்லாததை உணர்ந்த டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், குழந்தைகள் படிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறையினரின் இந்த செயல் பொதுமக்கள் அனைவரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.