ஆறரை மாதம் ஆஸ்பிட்டல் வாசம்!

கரோனா காரணமாக 9 முறை செத்துப் பிழைத்த பெண்மணி
ஆறரை மாதம் ஆஸ்பிட்டல் வாசம்!
வீடு திரும்பும் கீதா

கரோனாவுக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் மிகவும் நெடியது. இன்னும் சிலருக்கு கொடியதும் கூட. இந்த இரண்டுமாய் சேர, குஜராத் பெண்மணி ஒருவர் சுமார் ஆறரை மாதம் பெருந்தொற்று தொடர்பான உபாதைகளுடன் போராடி, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார்.

குஜராத் தாவோத் பகுதியைச் சேர்ந்தவர் கீதா தார்மிக். இவரது கணவர் ரயில்வேயில் பொறியாளராக இருக்கிறார். இந்தியாவில் கரோனா 2-ம் அலை உச்சத்திலிருந்தபோது, கீதாவின் குடும்பமும் அச்சத்தில் ஆழ்ந்தது. அப்படியும் கடந்த ஏப்ரலில் கீதா கோவிட் தொற்றுக்கு ஆளானார். தொடர்ந்து மே 1 அன்று, அப்பகுதியின் ரயில்வே மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து இவரது கரோனா உடனான போராட்டம் தொடங்கியது. கரோனா தீவிரமாக தாக்கியதில் கீதாவின் நுரையீரல் வெகுவாய் பாதிக்கப்பட்டது. வென்டிலேட்டர் வசதியுடன் உயிர் பிழைத்திருந்தார். கீதாவின் உடல்நிலை குறித்துப் பலமுறை மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர். இனி அவ்வளவுதான் என்று உறவினர்களுக்கு எல்லாம் குடும்பத்தினர் சொல்லியிருக்கின்றனர். இப்படி ஒன்று இரண்டல்ல, 9 முறை கீதா செத்துப் பிழைத்தார். கீதாவுக்கு 45 வயதாவதாலும், நுரையீரல் தவிர்த்து பிற உள்ளுறுப்புகள் அனைத்தும் திடமாக இருப்பதாலும் இவரது மருத்துவப் போராட்டம் தொடர்ந்தது.

ஒருகட்டத்தில், கீதாவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். உடல்நிலை மிக மோசமான கட்டத்தை அடையும்போது, இடையிடையே வேறு பல தனியார் மருத்துவமனைகளிலும் கீதாவை அனுமதித்து, பின்னர் ரயில்வே மருத்துவமனைக்கு திரும்பி உள்ளனர்.

ஒருவழியாக 202 நாட்கள் போராட்டத்துக்கு பின்னர், கரோனா தொடர்பான உடல்நல பாதிப்புகளில் இருந்து முழுமையாக குணமடைந்தவராக நேற்று(நவ.19) வீடு திரும்பியிருக்கிறார் கீதா. உறவினர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடும்ப விழாவாக அந்த நிகழ்வைச் சிறப்பிக்க விரும்பினர். கரோனாவின் தாக்கம் இன்னமும் குறையாததால், கீதா பிடிவாதமாக மறுத்துவிட்டார். பட்டவருக்கு மட்டும்தானே தெரியும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in