1410 கிலோ எடையுள்ள கார்... தலைமுடியால் கட்டி இழுத்த மாணவி: புதிய சாதனை

தலை முடியால் கட்டி காரை இழுக்கும் மாணவி
தலை முடியால் கட்டி காரை இழுக்கும் மாணவி

1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர்.

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுக்தா( 12). இவர் கராத்தே மாஸ்டர் இளையராஜா என்பவரிடம் கராத்தே கற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாகனங்களை தனது தலைமுடியைக் கொண்டு இழுத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார். அப்போது 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 நொடியில் இழுத்துச் சென்று இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளார்.

சாதனை செய்த மாணவி சம்யுக்தா
சாதனை செய்த மாணவி சம்யுக்தா

தற்போது அடுத்த கட்டமாக 1410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியில் கட்டி இழுக்கும் சாதனையை இன்று படைத்தார். அதற்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவியை ஊக்கப்படுத்தி கொடியசைத்து சாதனையை துவக்கி வைத்தனர்.

1410 கிலோ எடை கொண்ட காரை தனது தலைமுடியில் கட்டிய சம்யுக்தா, மொத்தம் 110 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 10 விநாடி நேரத்தில் இழுத்துச் சென்று சாதனை படைத்தார். அதன்மூலம் யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அதன் நடுவர் சரிதா மேற்பார்வையில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது .

சாதனை முயற்சி துவக்கி வைப்பு
சாதனை முயற்சி துவக்கி வைப்பு

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு மாணவியை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர். பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in