
‘மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’ என்று மத்திய மாநில அரசுகளை பி.ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை குழந்தைகள் தவிர்த்து மனிதர்கள், விலங்குகள் உட்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு வரைவுத் திட்ட அறிக்கையை இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இதுகுறித்து இன்று தெரிவித்ததாவது:
“இந்தியா உட்பட உலகத்தில் பல்வேறு நாடுகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், உணவு வகைகளை பயிரிடவும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. இதற்கு அடிப்படை காரணம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் நஞ்சாகிவிட்டன. இதனால் நோய் தாக்குதல்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மருந்து வகைகளைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா போன்ற பெரும் ஆட்கொல்லி நோய் வகைகள் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன. இதை எதிர்கொள்வதற்கு பாரம்பரிய விவசாய முறைகளில் உற்பத்தி செய்யக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது அவசியம் என்பதை, தற்போது கண்டுணர்ந்து அதைப் பின்பற்றி வருகிறோம்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மரபணு மாற்று விதைகள் பயிரிடுவதையும், உணவு வகைகள் பயன்பாட்டுக்கும் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மாநில அரசுகளின் கருத்தறியாமல் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை குழந்தைகள் தவிர்த்து மனிதர்கள், விலங்குகள் உட்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து கருத்து கேட்பு வரைவுத் திட்ட அறிக்கையை இந்திய உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆணையத்துக்கு எங்களது கடுமையான எதிர்ப்பை கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். ஒன்றிய அரசு இதைத் திரும்பப்பெற வேண்டும். மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இந்தியாவில் அனுமதிக்க நிரந்தரத் தடை விதித்து கொள்கை முடிவு எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தமிழக அரசு இதற்கு எதிரான தனது முழு எதிர்ப்பை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்” என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.