தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம்

பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம்

நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதும், அவரது குடும்பத்திலிருந்த மற்ற 6 பேரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டதில் இவர்களுக்கும் எஸ் ஜீன் மாறுபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியிருப்பதாவது: நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் நலமுடனும், தொடர் மருத்துவ கண்காணிப்பிலும் இருக்கிறார். அவரது குடும்பத்தினர் 6 பேருக்கும் பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் எஸ் ஜீன் மாறுபாடு உள்ளதாகத் தெரிகிறது. அனைவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனை மறுஆய்வுக்காக மீண்டும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கோவில் இருந்து வந்து ஆரணிக்குச் சென்றுள்ள ஒரு பெண்ணுக்கு கரோனா பாதிப்புடன் ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவரது மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் மற்றும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in