ஒமைக்ரான்: டெல்டாவைவிட வேகமாகப் பரவினாலும் ஆபத்தானதல்ல!

ஆன்டனி ஃபவுசி சொல்லும் முக்கியத் தகவல்கள்
ஒமைக்ரான்: டெல்டாவைவிட வேகமாகப் பரவினாலும் ஆபத்தானதல்ல!

முந்தைய உருமாறிய கரோனா வைரஸ்களை ஒப்பிட ஒமைக்ரான் அப்படி ஒன்றும் ஆபத்தானதல்ல என அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆன் டனி ஃபவுசி கூறியிருக்கிறார். அதேவேளையில், இது ஆபத்தானதா இல்லையா என்பதை அறிய பல வாரங்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று (டிச.7) ஏ.எஃப்.பி ஊடக நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஃபவுசி, ஒமைக்ரான் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டார். இந்த வைரஸ் பரவும் விதம், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும்; முன்பே தொற்றுக்குள்ளாகி மீண்டவர்களையும் தாக்கும் விதம், இந்த வைரஸ் ஏற்படுத்தும் உடல் பாதிப்பின் வீரியம் என மூன்று முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டார்.

“டெல்டா வைரஸைவிட நிச்சயம் இது வேகமாகப் பரவக்கூடியது. பல்வேறு நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தொற்றிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாவது அதிகம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தாக்கும். எனினும், டெல்டா வைரஸை ஒப்பிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவில், டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை ஒப்பிடும்போது, ஒமைக்ரான் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு” என ஃபவுசி குறிப்பிட்டார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர வேண்டிய அளவுக்கு மிக மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது அல்ல ஒமைக்ரான் என்பது இதுவரையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஃபவுசி போன்றோர் வந்திருக்கும் முடிவு.

“ஒருவேளை தீவிரமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையை ஒமைக்ரான் அடையும் என்றால், மீண்டும் நிலைமை மோசமாகலாம். அப்படி ஒரு நிலை வரும் என நான் நினைக்கவில்லை. ஆனால், எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான எதிர்ப்புசக்தி இல்லாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தவரின் (உதாரணத்துக்கு: எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்) உடலில் ஒமைக்ரான் உருவாகியிருக்கலாம். அல்லது கரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவி, மீண்டும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும்போது உருமாற்றம் அடைந்திருக்கலாம். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது என வழக்கமாகக் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்” எனக் கூறியிருக்கும் ஃபவுசி, “இரண்டு தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் பூஸ்டர் டோஸ்கள் குறித்து மருத்துவ நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்த நாட்டிலும் இதுவரை ஒமைக்ரானால் உயிரிழப்பு ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை. அத்துடன், ஃபவுசி தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்களும் பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் உள்ளன.

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் (என்.ஐ.ஏ.ஐ.டி) இயக்குநராக நீண்ட காலம் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஃபவுசி போன்றோராலேயே, ஒமைக்ரான் உள்ளிட்ட கரோனா பிறழ்வு வைரஸ்களின் தன்மையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த வழியும் தற்சமயம் நம்மிடம் இல்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in