அதிகரிக்கிறதா பெண்களுக்கான வேலைவாய்ப்பு?

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
அதிகரிக்கிறதா பெண்களுக்கான வேலைவாய்ப்பு?

சில புள்ளிவிவரங்களை மேம்போக்காகப் பார்க்கும்போது அவை சாதகமான விஷயங்களை முன்வைப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால், நடைமுறை சார்ந்து தர்க்கபூர்வமாக அவற்றை அணுகும்போது கிடைக்கும் சித்திரம், அதற்கு முற்றிலும் எதிர்மறையானதாக இருப்பதை உணர முடியும். பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னர் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்களும், அதன் பின்னணியில் இருக்கும் கசப்பான காரணிகளும் இதற்கு ஓர் உதாரணம்.

புள்ளிவிவரமும் கள நிலவரமும்

தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிடும் 2020-21-ம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு (பிஎல்எஃப்எஸ்) புள்ளிவிவரம், கடந்த மாதம் வெளியானது. அதன்படி, இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 53.95 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 2019-20-ல் இருந்ததைவிட 2.62 கோடி தொழிலாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதில் ஆண்கள் 1.08 கோடி. பெண்கள் 1.53 கோடி என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். கிராமப்புறங்களில் 2019-20-ல் இருந்ததைவிட, 2020-21 காலகட்டத்தில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் எனும் நிலையில், இந்தப் புள்ளிவிவரம் மகிழ்ச்சியளிப்பதாகவே நமக்குத் தோன்றும். ஆனால், களநிலவரமும் மும்பையிலிருந்து செயல்படும் ‘இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) போன்ற தனியார் அமைப்புகள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களும் நமக்குக் காட்டும் சித்திரம் வேறு மாதிரியானது.

முக்கியமான ஆய்வு முடிவுகள், புள்ளிவிவரங்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் ‘இந்தியாஸ்பெண்ட்’ இணையதளம், பெருந்தொற்றுக் காலத்தில் பெண் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் சவால்களைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, நிபுணர்களின் கருத்துகளையும் சேகரித்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகள் இவ்விஷயத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்துகின்றன. அவை என்னென்ன?

முடக்கப்பட்ட பெண்கள்

2020 மார்ச் 24-ம் தேதி பொதுமுடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார். கரோனா பரவலைத் தடுப்பதற்காக, கடுமையான அந்த நடவடிக்கை தேவையாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் எனத் தொடங்கி கோடிக்கணக்கானோரைப் பொதுமுடக்கம் பதம் பார்த்தது. வேலையிழப்பு / சம்பளக் குறைப்பு என பல இழப்புகளைச் சந்தித்ததால், கிடைக்கும் வேலைகளைச் செய்ய வேண்டிய நிலையை பல குடும்பங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் பெண்கள்தான் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். 2020 இறுதியில் பணியை இழந்தவர்களில் ஆண்கள் 2 சதவீதம் என்றால், பெண்கள் 13 சதவீதம் என்கிறது சிஎம்ஐஇ வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

அந்தக் காலகட்டத்தில் சமையல், துணி தோய்த்தல் என பிற வீடுகளில் பணிசெய்து சொற்ப சம்பளம் ஈட்டிவந்த பெண்கள் பலர் தொற்று அபாயம், அரசு விதித்த கட்டுப்பாடு என்பன போன்ற காரணிகளால் அந்த வேலையையும் இழக்க நேர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தொற்று குறைந்த பின்னர் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். இதுதான் அடிப்படை முரண்!

அதேசமயம், சமீபகாலமாக நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை எதிர்நோக்கியிருப்பவர்களில் 67 சதவீதம் பேர் ஆண்கள். இதில் பெண்கள் 33 சதவீதம்தான். அதாவது - நல்ல சம்பளம் எனும் எதிர்பார்ப்பையெல்லாம் கடந்து, சொற்ப சம்பளத்திலேனும் வேலை கிடைத்தாலே போதும் எனும் நிலைமைக்குப் பெண்கள் வந்திருக்கிறார்கள்!

கடந்த சில ஆண்டுகளாக, விவசாயத் துறையிலிருந்து பெண்கள் வெளியேறும் போக்கு அதிகரித்துவந்தது. விவசாயத் துறையில் இயந்திரப் பயன்பாடுகள் அதிகரித்ததும் அதில் பணிபுரிந்த பெண்களின் வேலைவாய்ப்பைக் கணிசமாகக் குறைத்தது. ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு, குறிப்பாக 2021மற்றும் 2022-ல் அது மாறியது. பெண்கள் பிற துறைகளில் பணி செய்வதைக்காட்டிலும் விவசாயத் துறைக்கே முக்கியத்துவம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், வேலையாள், உதவியாளர் என யாரையும் பணியமர்த்தாமல் வீட்டிலேயே அப்பளம் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் பெண்கள் முன்பைவிட அதிக அளவில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கும் பொருட்டு தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலேயே வேலை தேடத் தொடங்கிவிட்டனர் பெண்கள். இன்னும் சிலர், வீடுகளிலேயே சிறிய அளவில் கேட்டரிங் தொழிலைய்யும் தொடங்கிவிட்டார்கள்.

ஆம்! பொருளாதார ரீதியாக அதிகரிக்கும் அழுத்தம், பணியிடங்களில் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக, வேறு வழியின்றி, கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்ள பெண்கள் தலைப்பட்டுவிட்டார்கள். அதனால்தான் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு எனும் பதத்தால் அத்தனை திருப்தியடைய முடியாது என சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதிகரிக்கும் அழுத்தம்

குடும்பத்தைப் பராமரித்தபடி, பெரும் போராட்டத்துக்கு நடுவில்தான் பணியிடங்களுக்குச் சென்று பெண்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாலையில் துயிலெழுந்து கணவர், குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது அவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அன்றாடம் தொடருபவை. அதில் ஏற்படும் பிசகுகள், தாமதங்கள் வெவ்வேறு மட்டங்களில் எதிர்மறையாக எதிரொலிக்கும் என்பதால் அவர்கள் அதில் முழுமையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டியிருக்கிறது. இந்த அழுத்தத்துக்கு இடையே பணியிடங்களில் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

பாலின பாரபட்சம்

இன்னொரு புறம், ஒரு நிறுவனத்தில் சேர்வது, பின்னர் பல்வேறு காரணிகளை முன்னிட்டு விலகுவது எனப் பெண்கள் தடுமாறுகிறார்கள். அவர்கள் விட்டுச்செல்லும் காலியிடத்தை ஆண்கள் நிரப்பிவிடுகிறார்கள். பெண்களுக்காக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பல நிறுவனங்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள் உருவாக்கித்தர முன்வருவதில்லை. இதுவும் பெண்கள் விரைவில் பணியிலிருந்து விலகுவதற்கான முக்கியக் காரணம். வேலைகளுக்கான சிறப்புப் பயிற்சி பெண்களுக்கு அதிகம் கிடைப்பதும் இல்லை. இதனால், ஒரு காலிப் பணியிடத்துக்கு ஆண்களுடன் போட்டியிடும் பெண்கள் அந்த வாய்ப்பைப் பெற முடியாமல் போகிறது.

2011-12 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 9 சதவீதம் பெண்கள்தான் வேலைப் பயிற்சி பெற்றனர் என ஐ.டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜி.இ (பொருளாதாரத்தில் மகளிரை முன்னேற்ற தேவையான விஷயங்கள் குறித்து ஆய்வுநடத்தும் அமைப்பு) மற்றும் க்ரியா பல்கலைக்கழகத்தின் லீட் அமைப்பு ஆகியவை இணைந்து 2021 ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையே வேறு சில காரணிகளும் பெண்கள் வேலையைவிட்டு விலக வழிவகுக்கின்றன. அதிகபட்சமான கல்வித் தகுதி கொண்ட பெண்களில் பலர், தாங்கள் பார்க்கும் வேலை தங்கள் தகுதிக்குக் குறைவானது எனக் கருதி வேலையைவிட்டு விலகுவதாக இந்தியாஸ்பெண்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்தியாவின் குடும்ப அமைப்பில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ‘கடமை’கள் எதிர்காலம் சார்ந்த அவர்களது கனவுகளைக் காவு வாங்குகிறது. படித்த பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வராததும் இதற்கு முக்கியக் காரணம்.

இதனால் வேறு வழியின்றி கடும் வேலைப்பளு நிறைந்த, குறைந்த சம்பளம் கிடைக்கின்ற வேலைகளைக் கூட செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டனர். அதனால்தான் விவசாயத் துறையில் பெண்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். கிராமப்புறப் பெண்கள் மீண்டும் அதிக அளவில் வேலை பார்க்கத் தொடங்கியிருப்பதற்கும் இதுதான் காரணம்.

பின்தங்கிய இந்தியா

இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுவந்தாலும், பாலினச் சமத்துவத்தில் இன்னும் பல படிகளைத் தாண்டியாக வேண்டியிருக்கிறது. உலக அளவில், பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும் நாடாக இந்தியா இருப்பதே அதற்கு சாட்சி. இவ்விஷயத்தில் நம்மைவிட பாகிஸ்தான் கூட நல்ல நிலையில் இருக்கிறது. இந்தியாவில் வேலை செய்யும் பெண்களில் 90 சதவீதம் பேர் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களுக்குச் சம்பளமும் மிகக் குறைவு என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. கூடவே, அங்கு குழந்தைகளைப் பராமரிக்கும் வசதிகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதால் பெண்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். 2021-ம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டெண் பட்டியலில், 156 நாடுகளில் இந்தியா 140-வது இடத்தைப் பிடித்தது. 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் உள்ள 146 நாடுகளில் இந்தியா 135-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டுப் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருக்கிறது. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததுடன், பணியிடத்தில் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்ததன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது சீனா. 1982-ம் ஆண்டுவாக்கில் அந்நாட்டின் மேலாண்மைத் துறையில் பணியாற்றியவர்களில் 10 சதவீதம் பேரே பெண்கள். 2010-ல் அது 25 சதவீதமாக உயர்ந்தது.

இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பணியில் இல்லாத காரணத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக 2017-ல் மெக்கின்ஸி நிறுவனம் நடத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் பங்களிப்பும் இருந்தால், 2025-ல் இந்தியாவின் ஜிடிபி 60 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு கணித்திருக்கிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தால் இந்தியாவின் ஜிடிபி ஆண்டுதோறும் சராசரியாக 4.2 சதவீதம் அதிகரிக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறுகிறது.

இந்தச் சூழலில் அரசும், தொழில் நிறுவனங்களும் அக்கறை காட்ட வேண்டிய விஷயங்கள் ஏராளம். பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் அமைப்பது, வீடுகளுக்குக் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது என நாடு முழுமைக்குமாக பல ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதன் மூலம் பெண்கள் நல்ல சம்பளத்துடனான வேலையில் சேரவும், கவனச் சிதறல்களின்றி பணிபுரியவும் வழிவகை செய்ய முடியும்.

ஊழியர்களும் நுகர்வோரில் ஒரு பகுதி. ஊதியம் என்பது செலவல்ல. அதுவும் ஒரு முதலீடுதான். அதன் மூலம்தான் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து பணப்புழக்கமும் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். குறிப்பாக, பெண்களுக்குக் கணிசமான ஊதியம் வழங்குவது மிகவும் அவசியம். இதையெல்லாம் தொழில் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும். மகளிர் மேம்பாடு அடைய ஆக்கபூர்வ மாற்றம் நிகழட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in