`இந்த நடமாடும் தெய்வங்களின் ஆசி கிடைக்கட்டும்'- முதியோர் இல்லத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் முன்னாள் சபாநாயகர்

`இந்த நடமாடும் தெய்வங்களின் ஆசி கிடைக்கட்டும்'- முதியோர் இல்லத்தில் மகளின் திருமணத்தை நடத்தும் முன்னாள் சபாநாயகர்
மகள் நிரஞ்சனாவுடன் கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்

கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் மகள் நிரஞ்சனாவின் திருமணம் முதியோர் இல்லத்தில் வைத்து நடக்க உள்ளது. தன் மகளின் விருப்பப்படி இப்படி திருமண ஏற்பாடு செய்ததாகச் சொல்கிறார் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்.

கேரளத்தில் முந்தைய இடதுசாரி அரசில் சபாநாயகராக இருந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணன். கேரளத்தில் இடதுசாரிகள், இருமுறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு இந்தமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏவாக இருந்ததால் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் 2016 முதல் 2021 வரை கேரள சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்தபோது, சட்டசபையை மிகவும் சிறப்பாகக் கொண்டு சென்றதற்காக பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் ஆவார்.

முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்- திவ்யா தம்பதிக்கு நிரஞ்சனா என்னும் மகள் உள்ளார். இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கீத்திற்கும் வரும் 22-ம் தேதி திருமணம் நடக்கிறது. நிரஞ்சனா எம்.பி.ஏ படித்தபோது, அவரது சீனியரான சங்கீத் மீது காதல் வயப்பட்டார். இவர்களது காதலுக்கு இருகுடும்பமும் பச்சைக்கொடி காட்ட திருமணம் முடிவானது. நிரஞ்சனா தனது திருமணத்தை கேரளத்தின் தவனூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வைத்து நடத்த ஆசைப்படுவதாகச் சொல்ல, அவரது குடும்பமும் சம்மதித்துள்ளது.

கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்
கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறுகையில், ``தவனூர் முதியோர் இல்லத்திற்கு எங்கள் வீட்டின் அனைத்து நல்ல நிகழ்ச்சிகளுக்கும் செல்வது வழக்கம். ஓணம் பண்டிகையையும் அங்கேதான் கொண்டாடுவோம். என் மகள் நிரஞ்சனா தனது திருமணத்தையும், அங்கேயே வைத்தால் என்ன எனக் கேட்டார். அதில் கோயிலில் கிடைக்கும் ஆசியைவிட, சுற்றங்கள் இல்லாத இந்த நடமாடும் தெய்வங்களின் ஆசி கிடைக்கும் என்பதால் அதற்கான ஏற்பாட்டை செய்தோம். வரும் 22-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முதியோர் இல்லத்தில் வைத்து திருமணம் நடக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in