இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

கரோனா பொதுமுடக்க காலத்தில், இணையத்தில் குழந்தைகள் மீதான குற்றங்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. 2019-ம் ஆண்டை ஒப்பிட, 2020-ல் குழந்தைகள் மீதான இணையக் குற்றங்கள் 400 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கூறியிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில், வறுமை முதல் பள்ளிகள் திறக்கப்படாதது வரை பல்வேறு சமூகக் காரணிகளும் இதன் பின்னணியில் இருக்கின்றன. இணையத்தின் பரவலாக்கலும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது.

2020 மார்ச் 24-ல் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அடுத்த 2 நாட்களில், ‘போர்ன்ஹப்’ பாலியல் இணையதளத்தில், ‘செக்ஸி சைல்டு’ எனும் வார்த்தையுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2020 ஏப்ரல் மாதம் குழந்தைகள் மீதான வல்லுறவுக் காட்சிகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தத் தகவல்களை, இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் எனும் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆட்கடத்தல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ப்ரீத்தி பத்கர் ப்ரேர்னா எனும் அமைப்பு கூறும் தகவல், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. கடந்த 6 வாரங்களில் மீட்கப்பட்ட சிறுமிகளில் பலர், தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், குற்றவாளிகள் அதைக் காணொலியாகவும் பதிவுசெய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான நிலை இல்லை. இப்படி எடுக்கப்படும் காணொலிகள் இணையத்தில் பரப்பப்படுகின்றன.

2015-ல், இணையத்தில் 90 கூட்டு வல்லுறவுக் காணொலிகள் இணையதளங்களுக்கு விற்கப்பட்டதாக வெளியான செய்திகளால் வேதனையடைந்த உச்ச நீதிமன்றம், இப்படியான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தியது. எனினும், இந்தக் கொடுமைகள் இன்னும் அதிகரித்திருப்பதுதான் நிதர்சனம். பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வழியே சிறார்களைக் குறிவைத்து பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதுதொடர்பாக, குழந்தைகள் முதல் விசாரணை அமைப்புகள் வரை அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம் என இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆறுதல் தரும்விதமாக, குழந்தைகள் மீதான இணையக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. நவ.14-ல் மட்டும், நாடு முழுதும் டெல்லி, பாட்னா, திருப்பதி உட்பட 76 நகரங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் 83 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற காணொலிகளைப் பகிரும் சமூக வலைதளக் குழுமங்களை நடத்துபவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா தொடங்கி அமெரிக்கா, பிரிட்டன் வரை பல நாடுகளில் இயங்கிவருகிறார்கள்.

பொதுமுடக்கக் காலத்தில் இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, சமூக விழிப்புணர்வுடன், தொழில்நுட்ப விழிப்புணர்வும் அவசியம். பள்ளிகள் முதல் அண்டை வீடுகள் வரை பல்வேறு இடங்களில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடக்கும் சூழலில் இதுதொடர்பான கூடுதல் கண்காணிப்பும் முக்கியம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in