போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை?

போர்க்குற்றவாளிகளின் நாடாகிறதா இலங்கை?

நேர்மையையும் அறத்தையும் மக்கள் நேயத்தையும் கொண்டவர்களைத் தலைவர்கள் ஆக்கினால் ஒரு நாடு வளர்ச்சியைப் பெறும். உலகில் சிறந்த தனித்துவமான அடையாளத்தையும் பெறும். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைப் புரிவதுதான் ஆட்சியைப் பெறவும் உயர் பதவிகளைப் பெறவும் ஒற்றை வழியாக இருக்கிறது போலும். அல்லது தொடர்ந்தும் தமிழ் இனத்தை ஒடுக்கி அழிக்க வேண்டும் என்ற ஊக்கப்படுத்தல் இதன் வழியாக மேற்கொள்ளப்படுகிறதா என்றும் மக்களுக்குச் சந்தேகம் வலுக்கிறது.

இன்றைய இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கடந்த காலத்தில், அதாவது முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் நடந்த சமயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச முன்னாள் ராணுவ அதிகாரியும்கூட. இதனால் முள்ளிவாய்க்கால் போரில் அவர் அறிவிக்கப்படாத ஒரு ராணுவத் தளபதியாகவே செயற்பட்டார். அன்றைக்கு போரில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் அவருடையதே.

ஈழ யுத்தம் என்பது இந்த நூற்றாண்டின் பெருந்துயரம். மனிதர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று பலியெடுக்கப்பட்ட வன்முறை. உணவும் மருந்தும் கிடைக்கவிடாமல் தடை செய்து நிகழ்த்தப்பட்ட போர். மனிதர்கள் சுவாசிக்கும் காற்றிலும் விஷத்தைப் பரப்பி செய்யப்பட்ட படுகொலை. எங்கள் சனங்கள் உணவுக்கு மாத்திரமல்ல, காற்றுக்கும் தவித்தே கரைந்து போயினர். மருத்துவமனைகள்மீது மட்டும் கொட்டப்பட்ட குண்டுகள் ஏராளம். ‘பாதுகாப்பு வலயங்கள்’ என அறிவிக்கப்பட்ட இடங்கள்மீதே கடும் தாக்குதல்கள்.

போர்க்களத்தில் சரணடைந்த குழந்தைகள் முதல் காயம்பட்டவர்கள், முதியவர்கள் எனப் பலர் சிதைக்கப்பட்டனர். நிர்வாணமாக இருத்தப்பட்டு கூட்டம் கூட்டமாகக் கிடங்குகளில் புதைக்கப்பட்டார்கள். பாலகன் பாலச்சந்திரன் படுகொலையும் போராளி ஊடகவியலாளர் இசைப்பிரியா சிதைத்து கொல்லப்பட்டதும் மனிதர்களால் சகித்தே கொள்ள முடியாத பெருந்துயரம். இப்படி ஈழ இனப்படுகொலையில் சில பக்கங்களே வெளியாகி இருக்கின்றன. இன்னும் வெளிச்சத்திற்கு வராத பக்கம் நிறைய நிறைய உண்டு.

பின்னர் இலங்கையின் பெரும்பான்மையின மக்களின் ஆதரவுடன் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பதவி ஏற்றார். ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை வீரமாகச் சித்திரிக்கும் பேச்சைத்தான் கோத்தபய இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். “நந்திக்கடலில் நாயைப் போல இழுத்து வந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்றேன்..” என்று பேசுகின்ற ஒருவர்தான் இலங்கை ஜனாதிபதி. அவர்தான் தமிழர்களுக்கும் ஜனாதிபதி என்றும் காட்டிக்கொள்கிறார்.

முள்ளிவாய்க்கால் என்பதும் நந்திக்கடல் என்பதும் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத காயத்தின் நிலமும் கடலும். ‘தமிழர்களின் குருதி இனப்படுகொலையினால் சிந்தி உறைந்த அந்த நிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை வீரமாகச் சித்தரிக்கும் ஒருவர் ஒருபோதும் தமிழர்களின் அதிபராக இருக்க முடியாது. கோத்தபய ராஜபக்சவை இனப்படுகொலையாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழி நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் போராடி வருகிறார்கள்.

இலங்கை தன்னைத் தானே விசாரிக்கும் உள்ளக விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்திருப்பதும், மீண்டும் ஸ்ரீலங்காவுக்குக் கால அவகாசம் அளித்திருப்பதும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா மீது பெரும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் என்கிற மாதிரி, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கையில் தாமதிக்கப்பட்ட நீதி எதற்கு? நீதியும் தாமதிப்பும்கூட எம் இனத்தை அழிக்கிறதே!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

இன்னொரு புறத்தில் தன்னைப் போன்ற இனப்படுகொலையாளிகளாலும் போர்க்குற்றவாளிகளாலும் இலங்கையை நிரப்பிக்கொண்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்ச. இலங்கையைச் சேர்ந்த 58 இராணுவ அதிகாரிகளுக்கு மேற்குலகம் பயணத்தடை வித்திருத்திருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சவேந்திர சில்வா. போரில் களத்தில் நின்று இனப்படுகொலையை வழி நடத்திய இவரை ராணுவத் தளபதியாக நியமித்தார் கோத்தபய. பின்னர் இவரை கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புத் தலைவராகவும் நியமனம் செய்தார்.

இதன் வாயிலாக ஜெனரல் சவேந்திர சில்வாவைப் புனிதப்படுத்த முனைவதுடன் இனப்படுகொலைக்கு வெள்ளையடிக்கவும் ஜனாதிபதி முயற்சிக்கிறார். அத்துடன் தற்போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் கமால் குணரத்தின நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் அடுத்த கட்டமாக, தற்போது ஆட்கடத்தல் குற்றம்சுமத்தப்பட்ட வசந்த கரன்னகொட வடமேல் மாகாண ஆளுநராக அதிபர் கோத்தபாய ராஜபக்சேவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேரைக் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்த நிகழ்வின் குற்றவாளியாக இவர் கருதப்படுகிறார்.

இனப்படுகொலையாளிகளை உயர்பதவிகளில் இருத்துவதன் வாயிலாகப் போர்க்குற்றச்சாட்டுக்களை மூடி மறைத்துவிடலாம் என்றும் அவர்களைத் தண்டிக்க முடியாது என்றும் நினைத்தே ஜனாதிபதி இவ்வாறு செய்கிறார் என்று உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. மருத்துவம், கல்வி, நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் ராணுவ மயமாக்கலை ஏற்படுத்தும் வகையில் அவர் மேற்கொள்ளும் நியமனங்கள் இருக்கின்றன. இவை குறிப்பாக தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் நோக்கில் இடம்பெறுகின்றனவா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ராணுவ நியமனங்களால் தமிழர்கள் சுற்றிவளைக்கப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறார்கள்.

இன்றும் தமிழர்கள் பலர் சிறையில் காரணமின்றி வாடுகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் அடங்கலாக 8 அப்பாவித் தமிழர்களை கழுத்தறுத்துப் படுகொலை செய்து இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்காவுக்குப் பொதுமன்னிப்பு கொடுத்தார் கோத்தபய ராஜபக்ச. இப்படியாக தமிழர்களைப் படுகொலை செய்பவர்களுக்குப் பொதுமன்னிப்பும் ஆட்சி அதிகாரம் கொண்ட உயர் பதவிகளும் வழங்குவதன் வாயிலாக, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஊக்குவிக்கப்படுகிறதா என்பதுதான் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி!

தீபச்செல்வன், ஈழக் கவிஞர், எழுத்தாளர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in