
கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை திராவிடத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் உள்ளூரிலேயே கிடைக்கும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என தமிழக அரசுக்கு மருத்துவர் வீ.புகழேந்தி யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், " மத்திய கால்நடைத்துறை அமைச்சருக்கு, தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒன்றின் மூலம் கடந்த செப்டம்பரில் தமிழகத்திற்கு வர வேண்டிய கால்நடைகளுக்கான 90 லட்சம் கோமாரி தடுப்பூசிகளை விரைந்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசிகள் இதுவரை வராத இந்நிலையில், அதற்கான மாற்றுத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தின் திராவிடத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ உள்ளூரிலேயே கிடைக்கும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஓய்வுபெற்ற கால்நடைத்துறை பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரிலே கிடைக்கும் சீரகம், மஞ்சள், குப்பைமேனி, வேப்பமரம், துளசி போன்ற மூலிகை செடிகளிலிலிருந்து தயாரிக்கப்பட்ட 2 வித மூலிகைக் கலவை மூலம் (ஒன்று வாய்புண்களை குணப்படுத்தவும், மற்றொன்று கால் உள்ளிட்ட பிற இடங்களில் ஏற்படும் புண்களை சரிசெய்யவும்)கோமாரி நோயைச் சீர்படுத்த முடியும் என்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கோமாரி மற்றும் பிற நோய்களை சீர்செய்ய புண்ணியமூர்த்தி தயாரித்த சித்த முலிகை மருந்துகள், தேசிய பால் வள நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டு அவை 80 சதவீதத்திற்கும் மேல் நல்ல பலனைக் கொடுக்கின்றன என உறுதிபடுத்தப்பட்டு அந்நிறுவனத்தால், இந்தியா முழுவதும் இத்தகைய மருந்துகள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று சிற்றேடு தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் துருக்கியில் செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுகள் 2 முதல் 5 தடுப்பூசிகள் வரை கூட கோமாரியை நோயைக் கட்டுக்குள் வைக்க பயன் தராது என்றே தெளிவாக சொல்கின்றன. ஆக, இத்தகைய சூழலில் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ மூலிகை மருந்துகளை, காலம் தாழ்த்தாமல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட செய்திகளை கணக்கில் கொண்டு அவற்றை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றும்படி தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.தமிழக எதிர்கட்சித் தலைவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் " என்று மருத்துவர் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.