திராவிட மாடல் என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்!

- மன்னார்குடி ஜீயர் அதிரடி பேட்டி
மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

சுமார் 200 ஆண்டுகளாக ஜீயர் யாரும் இல்லாமல்தான் இருந்தது ராஜமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் மடம். 2015-ல் தான் மடத்தின் பீடத்திற்கு சம்பத்குமார் என்ற தற்போதைய ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல் இந்து மதம் குறித்த விஷயங்களில் தீவிரத்தன்மை காட்டி வருகிறார். அனைத்து விஷயத்திலுமே இவரது கருத்துகள் அழுத்தமாக அதேநேரத்தில் எச்சரிக்கும் விதத்தில்தான் அமைந்திருக்கும். “அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் சாலையில் நடமாட முடியாது” என்று ஜீயர் ஆர்ப்பரித்தது அதற்கான அண்மை உதாரணம். இப்படி அதிரடி கிளப்பும் ஜீயர் காமதேனுவுக்கு அளித்த பேட்டி இது.

இருநூறு ஆண்டுகளாக ஜீயர் இல்லாமல் இருந்த இந்த மடத்துக்கு நீங்கள் எப்படி ஜீயராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?

இங்கு ஜீயர் இல்லாமல் இருந்ததைக் கண்ட கிருஷ்ணமாச்சாரி போன்றவர்கள் இதற்கு சரியான நபரைத் தேர்ந்தெடுக்க தேடிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போது காஷாயம் வாங்கியிருந்தேன். எனது சொந்த ஊர் இதே மன்னார்குடிதான். அதனால் உங்கள் ஊரில் இருக்கிற இந்த கோயிலை நிர்வகிக்கக்கூடிய இந்த மடம் இப்படி இருக்கக்கூடாது அதை நீங்கள்தான் ஜீயர் பொறுப்பேற்று நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

ஜீயர் ஆவதற்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள்?

நான் பெங்களூருவில் இருந்தேன். வழக்கறிஞராக பணியாற்றினேன். இதெல்லாம் காஷாயம் வாங்குவதற்கு முன்பு. இப்போது அதைப்பற்றிய விவரம் எல்லாம் சொல்லக்கூடாது. இது போதும்.

உங்களுக்குக் காஷாயம் கொடுத்தது யார்?

ஸ்ரீரங்கம் ஜீயர்தான் எனக்குக் காஷாயம் கொடுத்தார். அப்போது அவர், “ஜாதி மதங்களைக் கடந்தவராக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், இந்து மதத்திற்காக பணியாற்ற வேண்டும்” என்று போதித்தார். அதனையேற்று செயல்பட்டு வருகிறேன்.

இந்து மதம் சார்ந்த விஷயங்களில் நான் எந்த எல்லைக்கும் போவேன் என்பது போல் இருக்கிறது உங்களது பேச்சும் கருத்தும். இது உங்களின் சுபாவமா அல்லது உங்கள் இருக்கைக்கான பொறுப்பா?

எனக்கு இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இந்து மதத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் அதனைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமை இருப்பதாக நான் கருதுகிறேன். அதிமுக ஆட்சியில் ஆண்டாள் பிரச்சினை வந்தது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருவுடன் இணைந்து நானும் கண்டித்தேன். அடுத்து வேல் யாத்திரைக்கு தடை. அதைக் கண்டித்தோம். இப்பொழுது தருமபுர ஆதீனம் விவகாரம். இதையும் நாங்கள் கண்டிக்கிறோம். யார் ஒருவராவது இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு முன்னெடுப்பு செய்ய வேண்டும். இந்து மதத்தினுடைய சிறப்புகள் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அதற்காக யாராவது ஒருவர் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும்.

அந்த தைரியம் என்பது எல்லை மீறும் அளவுக்கு போவது சரிதானா?

எல்லைமீறிய அளவுக்கு எதுவும் போகவில்லையே!

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சாலைகளில் நடமாட முடியாது என்ற பேச்சை எப்படி எடுத்துக்கொள்வது?

அதற்கு அர்த்தம், அடிப்பேன் குத்துவேன் வெட்டுவேன் என்பதல்ல. அமைச்சர்களோ, எம்எல்ஏ-க்களோ சாலையில் செல்லும்போது, அவர்களிடம் மக்கள், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று நிறுத்திக் கேள்வி கேட்பார்கள், அதனால் எளிதாக அவர்கள் நடமாட முடியாது என்பதுதான் அதற்கான அர்த்தம்.

டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்தார். வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தினார். அதற்கு முன்புவரை வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அவ்வளவாக இல்லை. அதுபோலத்தான் இந்து மதத்தினுடைய கடமைகள், சம்பிரதாயங்கள் அவ்வளவு இருக்கின்றன. அதை பின்பற்றும்போது அதைக் காப்பாற்றப்படும் போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். யாராவது அதனை வெளிக் கொண்டுவர வேண்டும். இந்து என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டும். அதற்கு இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவைப்படுகிறது. அப்போதுதான் அது மக்களிடம் போய் சேரும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கட்சியின் தொண்டராக செயல்படக்கூடாது அவர் முதல்வராக செயல்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே... அவர் அனைவருக்கும் பொதுவான முதல்வராக செயல்படவில்லை என்பதற்கு உதாரணம் சொல்லமுடியுமா?

நிறையச் சொல்லலாம். வேல்யாத்திரைக்கு தடை, பட்டினப்பிரவேசத்துக்கு தடை இதெல்லாம் என்ன? தற்போது பழனியில் கோயிலில் ஒரு முக்கிய பொறுப்பு ஒரு இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதுவும் திமுககாரருக்கு. இதைப்போல பல முக்கிய கோயில்களில் கட்சிக்காரர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கோயிலை நிர்வகிப்பதற்கு கட்சிக்காரராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தகுதியானவர்கள் இருக்கிறார்கள். மதம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு என்ன வேலை இருக்கிறது?

அது மட்டுமில்லாமல் அரசு நிர்வாகத்தில்கூட நிர்வாகப் பொறுப்புகளில் கட்சிக்காரர்களாக பார்த்து அல்லது திமுக ஆதரவாளர்களாக பார்த்து பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அப்படி பார்க்கக்கூடாது. நல்லவரா, திறமையானவரா என்று பார்த்துத்தான் நியமனம் செய்ய வேண்டும்.

அதேபோல, பள்ளிவாசலுக்குச் சென்றால் குல்லாவும், சர்ச்சுக்கு சென்றால் அவர்கள் மத அடையாளத்தையும் அணிகிறார் முதல்வர். ஆனால், கோயிலுக்குச் செல்லும்போது விபூதி பூசுவதில்லை. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? நீங்கள் இப்போது கட்சித் தலைவர் இல்லை. அனைவருக்குமான முதல்வர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து கோயில்களுக்கு செல்லும்போது அங்கே வழங்கப்படும் திருநீரை அணிந்து கொள்கிறார். அங்கே அவர் கிறிஸ்தவராக இல்லாமல் முதல்வராக நடந்துகொள்கிறார். அப்படித்தான் இவரையும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறோம்.

முதல்வரேதான் கோயில்களுக்குச் செல்ல வேண்டுமா என்ன? அதுதான் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் கோயிலாய்ச் சொல்கிறாரே?

அவர் செல்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. திமுகவிற்கு வருவதற்கு முன்பே அவர் ஒரு ஆன்மிகவாதி. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அனைத்துக் கோயில்களுக்கும் செல்கிறார். அது அவரின் சொந்த விஷயம். முதல்வர் ஸ்டாலின்தானே தவிர அவரில்லையே? அப்படி அவர் கோயில்களுக்குச் செல்வதை நான் வரவேற்கிறேன். சமீபத்தில் அவர் திருக்கோஷ்டியூர் சென்றிருந்தபோது தேரில் ஏறினார். மழை வந்து தேர் நின்றுவிட்டது. அவர் ஏறியதால் தான் அப்படி ஆனது என்று சொல்லும்போது அதையும் கூட நான் மறுக்கிறேன். அப்படி சொல்வதும் தவறு.

பசு பாதுகாப்பு படை எப்படி இருக்கிறது?

நான் படிக்கும் காலத்திலிருந்து பசுவதைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறேன். தற்போது பசு பாதுகாப்பு படை சிறப்பாக இயங்கி வருகிறது. அறுப்புக்கு செல்லும் பசுமாடுகளை கண்டால் எங்களுக்குத் தகவல் கொடுக்கலாம். அல்லது அவர்களே அதைக் கொண்டு வந்து எங்களிடம் ஒப்படைக்கலாம்.

குஜராத்தில் உள்ளதுபோல பசு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றீர்களே..?

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது குஜராத்தில் முதல்வரே துணைவேந்தர்கள் நியமிக்கலாம் என்கிற சட்டம் இருப்பதாக தெரிவித்தார்கள். நான் அதைச் சுட்டிக்காட்டித்தான் அங்கிருப்பதைப்போல பசு பாதுகாப்பு சட்டத்தையும் இங்கு கொண்டு வரவேண்டும் என்று சொன்னேன்.

கோட்சே தேசபக்தியால் தான் காந்தியைச் சுட்டார் என்று சொல்லியிருக்கிறீர்களே... அது?

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு பிரதமரை கொன்றவரை விடுதலை செய்திருக்கிறது. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். கோட்சே வழக்கில் அவர் கொலை செய்தார் என்று சொல்லப்பட்டிருந்தாலும் அந்த தீர்ப்பில் எங்காவது அவர் ஒரு தேசவிரோதி, தேசபக்தி இல்லாதவர் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? என்பது தான் என்னுடைய கேள்வி.

அதற்காக காந்தியின் கொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

நியாயப்படுத்தி விட முடியாது. அது தவறு தான். ஆனால், அதே நேரத்தில் கோட்சே தேசபக்தி இல்லாதவர், ஒரு இந்து விரோதி, ஒரு தீவிரவாதி என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள்தான் தீவிரவாதிகளே தவிர கோட்சே அல்ல.

உங்களுடைய தொடர் செயல்பாடுகளை பார்த்தால் நீங்கள் பாஜக ஆதரவாளர் போல் தெரிகிறதே?

நமக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் ஒரு சந்நியாசி; இந்து வாதி. நான் யாரையும் குறிப்பிட்டு யாருக்கும் ஆதரவாகவோ, யாருக்கும் எதிராகவோ இருக்கவில்லை . அண்ணாமலையோ அல்லது பிரதமர் மோடியோகூட இந்து விரோதமாக செயல்பட்டால் அவர்களும் எனக்கு விரோதிதான்.

திமுக சொல்லும் திராவிட மாடல்..?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. திராவிடம் என்பது தென் மாநிலங்களைக் குறிக்கும் ஒரு அடையாளம் அவ்வளவுதான். தென் மாநிலங்களில் இருந்து யார் வடக்கே போனாலும் மதராஸி என்றுதான் அடையாளப்படுத்தப்படுவார்கள். அதேபோல வெளிநாட்டுக்கு யார் போனாலும் இந்திக்காரர் என்று தான் அடையாளப்படுத்தப்படுவார். அப்படித்தான் திராவிடமும். அது சாதிய, மாநில அடையாளம் இல்லை. திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகளிலெல்லாம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு இவர்கள் என்ன மாடல் கொண்டு வர முடியும். அந்த வார்த்தையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

பாஜக தீவிர இந்துத்துவாவை கையில் எடுத்து அரசியல் செய்கிறதே?

ஒரு வீட்டில் நெருப்புப் பிடித்தால் அதை யாராவது ஓடிவந்து அணைக்கத்தான் வேண்டும். மாறாக, அவர் ஏன் அணைக்கிறார் என்று கேட்கக்கூடாது. அணைத்தவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு அணைக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு நன்றி சொல்ல முடியுமா?

இந்து விரோதச் செயல் நடக்கும்போது அவர்களாவது வந்து கேட்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. இந்து விரோதச் செயல் நடக்கும்போது, இந்து கோயில் இடிக்கப்படும் போது அவர்கள் போய் தைரியமாக கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது?

சமீபத்தில் சசிகலாவைச் சந்தித்தீர்களே... அதற்கு என்ன காரணம்?

அவர் ஒரு ஆன்மிகவாதி. அனைத்துக் கோயில்களுக்கும் செல்லக் கூடியவர் என்பதால் அவரைச் சந்தித்து விரைவில் நடக்க இருக்கிற பாலாறு புஷ்கரம் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினேன்; அவ்வளவுதான்.

நீங்களும், மதுரை ஆதீனமும் இந்துமதம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருமித்த குரலாய் ஒலிக்கிறீர்கள். ஆனால், சென்னை வந்த பிரதமர் மதுரை ஆதீனத்தை மட்டும் சந்தித்தார். உங்களைச் சந்திக்கவில்லையே?

மதுரை ஆதீனம் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் அவரைச் சந்தித்தார். நான் அப்படி எதுவும் கேட்கவில்லை. நமக்கு அது தேவையும் இல்லை. நமக்கான வேறு முக்கியப் பணிகள் நிறைய இருக்கின்றன.

திமுகவின் செயல்பாடுகளை எதிர்ப்பதுதான் அந்த முக்கிய பணியா?

அப்படி இல்லை. மதம் சார்ந்த ஆன்மிகப் பணிகள் இருக்கின்றன. யாருக்கும் நாம் எதிரி இல்லை. நாளைக்கே இந்த திமுக அரசு, நாங்கள் இந்து விரோதி இல்லை, இந்துக்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டோம், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது என்று அறிவித்தால் நான் முதல் ஆளாக ஓடிப்போய் நன்றி தெரிவிப்பேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in