அதிரடியாகச் செயல்படும் ஆட்சியர்கள்!

அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்களா?
பள்ளியில் ஆய்வு செய்யும் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்
பள்ளியில் ஆய்வு செய்யும் கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்

சமீபத்தில் நடந்த சம்பவம் இது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளிப்பதற்காக, அம்மாவட்டத்தின் 10 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மனுவை வழங்க, ஆட்சியரோ அமர்ந்துகொண்டே அதை வாங்கினார். இதனால் கொதிப்படைந்த பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மற்ற எம்எல்ஏ-க்கள் ஆட்சியரிடம் ஏகத்துக்கும் சண்டைக்குப் போனார்கள். மக்கள் பிரதிநிதிகளை ஆட்சியர் அவமதிக்கிறார் என்றும் குமுறல்கள் எழுந்தன. மறுபுறம், ஆட்சியர் தன் கடமையை சரியாகத்தானே செய்கிறார் என்றும் ஆதரவுக் குரல்கள் எழுந்தன.

இந்த ஒரு சம்பவம் மட்டும் அல்ல... அண்மைக்காலமாக, குறிப்பாக திமுக அரசு அமைந்த பின்னால், தமிழகத்தின் சில மாவட்டங்களின் ஆட்சியர்கள் அதிரடியாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதைப் பல சம்பவங்கள் உணர்த்துகின்றன. அவர்கள் தங்கள் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்களோ என்றும் பரவலாகப் பேச்சு எழுந்திருக்கிறது.

திருவண்ணாமலை  ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்

தலைமைச் செயலாளரின் பாராட்டு

சில நாட்களுக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 100 நாள் வேலை என்றாலே சும்மா உட்கார்ந்திருந்துவிட்டு வந்தாலே போதும் என்ற மனப்பான்மை பலரிடம் இருக்கும்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், சரியாக வேலைகள் நடப்பதை உறுதிசெய்ததுதான் ஆட்சியர் முருகேஷுக்கு அந்தப் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது. அத்திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்குள் 1,121 குளங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி, ‘இது ஒரு உலக சாதனை’ என்று தலைமைச்செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆட்சியரின் அதிரடியான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். கண்டிப்போடும், கறாராகவும் அதிகாரிகளிடம் அவர் நடந்துகொள்வதால் அதிகாரிகளும் தங்கள் வேலைகளைச் செவ்வனே செய்கிறார்கள். தற்போது தலைமைச் செயலாளரே அவரைப் பாராட்டியிருப்பது, மற்ற மாவட்ட ஆட்சியர்களும் இப்படி சுதந்திரமாகச் செயல்பட ஊக்கம் தரும் என்கிறார்கள்.

கோவை ஆட்சியர் சமீரன்
கோவை ஆட்சியர் சமீரன்

அடுத்தடுத்து அசத்தும் ஆட்சியர்கள்

கோவையில் சமீரனுக்கு முன்பு ஆட்சியராக இருந்த நாகராஜனின் அதிரடி முயற்சியால், அம்மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1050.2 ஹெக்டேர் வனப்பகுதி மீட்கப்பட்டது. அதற்குப் பரிசாக ஆட்சியர் நாகராஜனுக்கு நில நிர்வாக ஆணையர் பதவியை வழங்கி அழகு பார்த்தது தமிழக அரசு.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் பொதுமக்கள் தங்கள் குறைகளை, விண்ணப்பங்களைக் கொடுக்க இனி ஆட்சியர் அலுவலகம் செல்லத் தேவையில்லை, அருகிலுள்ள அந்தந்த துறைசார்ந்த அலுலவலர்களிடமே கொடுத்து தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்.

கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அரசால் தடை செய்யப்பட்ட வலைகளையும், அதிகத் திறன் கொண்ட இன்ஜின்களையும் சில மீனவர்கள் பயன்படுத்துவதாக ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. பல ஊர்களில் மீனவர்கள் போராட்டங்களில் இறங்கியிருந்தனர். இந்நிலையில், கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் அதிரடி ஆய்வில் இறங்கினார்.

கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம்
கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம்

கடலூர் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் அதில் உள்ள வலைகளை நேரடியாக ஆய்வு செய்ததோடு, படகில் ஏறி நடுக்கடலுக்குச் சென்று மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு நடத்தினார். ஓர் ஆட்சியர் இப்படி நடுக்கடல்வரை வந்து ஆய்வு செய்வார் என்பதை, மீனவர்கள் யாரும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு சமாதானமடைந்தனர்.

இன்னும் ஒருபடி கூடுதலாக அதிரடி காட்டினார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. மாவட்டத்தில் பெரும்பாலான மது குடிப்போர், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவி்ல்லை என்ற தகவலையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் மது வாங்குபவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது இவரது இன்னொரு சாதனை.

‘முதல்வன்’ பாணி அதிரடிகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா 'முதல்வன்' சினிமா பாணியில், ஆய்வுசெய்த இடத்திலேயே முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து அதிரடி காட்டினார். மல்லிக்குட்டை எனும் கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தை ஆய்வுசெய்த அவர், அதில் இருந்த குளறுபடியைக் கண்டுபிடித்து, வீடுகட்டப் பணி ஆணை வழங்கிய ஊராட்சி செயலாளர் ஆனந்தனை அங்கேயே பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர், ஜோலார்பேட்டை பகுதியில் ஆய்வுசெய்தவர், அங்கு உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஊராட்சி செயலாளரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்.

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ் லஞ்சம் பெற்றுக்கொண்டு புதிய கார்டுகள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

இதெல்லாவற்றையும்விட, இன்னும் அதிரடியாகச் செயல்பட்டுவருகிறார் கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர். கரூரில் கரோனா விதிகளை மீறி பாஜகவினர் பொது இடத்தில் கூடியிருந்ததைப் பார்த்தவர், அங்கு இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளரைக் கடுமையாக எச்சரித்ததை நாடே வியந்து பார்த்தது. கரோனா அச்சம் காரணமாக மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிலும் அதிரடி காட்டினார் பிரபுசங்கர்.

மருத்துவம் படித்துள்ள ஆட்சியர் பிரபுசங்கரின் தனிப்பட்ட அக்கறையால், தடுப்பூசியிலும் தனி இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறது கரூர் மாவட்டம். முகாம் நடக்கும் நாட்களில் மக்கள் வசிப்பிடங்களுக்கு நேரில் செல்லும் ஆட்சியர், அவர்களிடம் தடுப்பூசியின் பயன்குறித்து எடுத்துச்சொல்லி ஊசி போட்டுக்கொள்ள வைக்கிறார்.

கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்
கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் செவ்வனே நடப்பதையும் உறுதிசெய்து வருகிறார் பிரபுசங்கர். அப்படித்தான் பொரணி என்ற ஊருக்கு ஆய்வுக்குச் சென்றவர், ஒரு ஆசிரியைக்குத் தொற்று ஏற்பட்டதைக் காரணம் காட்டி, உரிய அனுமதி பெறாமல் அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததை அறிந்து கோபமடைந்தார். தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களை கண்டித்ததுடன், பள்ளியைத் திறக்கவும் உத்தரவிட்டார்.

முக்கியமான உத்தரவு

எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற மாற்றுத்திறனாளிக்கு, தாட்கோவின் தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக காந்திகிராமம் எஸ்.பி.ஐ வங்கியின் மூலம் உறுதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தாட்கோ மூலம் அரசின் மானிய நிதியுதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வருடம் கடந்தும் அந்த வங்கியின் மூலம் கடனுதவி வழங்கப்படவில்லை. இதனால், தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் அரசுக்குத் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது.

பள்ளி சத்துணவை சாப்பிடும் ஆட்சியர் பிரபுசங்கர்
பள்ளி சத்துணவை சாப்பிடும் ஆட்சியர் பிரபுசங்கர்

இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளை ரத்துசெய்து பிற பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்ற வேண்டும் என்று ஆட்சியர் பிரபுசங்கர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அரசுப் பரிவர்த்தனைகள் என்றாலே, அது பெரும்பாலும் பாரத ஸ்டேட் வங்கியில்தான் நடைபெறும் என்ற அரசின் நடைமுறையையே மாற்றி அமைக்க முன்னோடியாக வழிகோலியிருக்கிறது அவரின் இந்த அதிரடி உத்தரவு.

முதல்வர் காட்டிய வழி

இதுகுறித்தும், பிற மாவட்ட ஆட்சியர்களின் அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் பிரபுசங்கரிடம் பேசினோம். “ஒரு மாற்றுத்திறனாளி தனிப்பட்ட முறையில் வங்கியை அணுகியிருந்தால்கூட அவர்கள் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைத்து, அவருக்கான மானியமும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் கடந்த ஓராண்டாகக் கடன் வழங்காததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்காகவும், மேலும் பலருக்கு உரிய, பொருத்தமான காரணங்கள் இல்லாமல் கடன் விண்ணப்பங்களை அவ்வங்கி காலம் தாழ்த்தியதாலும், நிராகரித்ததாலும்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இப்படிச் செயல்படுவதால் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போகும்நிலை ஏற்பட்டுவிடும்.

அந்த உத்தரவால் வங்கிகளின் அணுகுமுறையில் தற்போது நல்ல மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகள் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க தங்கள் வங்கிகளின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, குறைகளை நிவர்த்திசெய்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். அடுத்தடுத்த மாதக் கூட்டங்களில் இப்படி வேறு வங்கிகள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுமானால், அந்த வங்கிகளில் உள்ள அரசு பரிவர்த்தனைகளும் வேறு வங்கிக்கு மாற்றப்படுவதும் உறுதி” என்றார் அவர்.

“வேறு சில மாவட்ட ஆட்சியர்களும் உங்களைப் போலவே சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியிருப்பதுபோல தெரிகிறதே... அதற்கு என்ன காரணம்?” என்றும் அவரிடம் கேட்டோம்.

“மாநில அளவிலான ஆட்சியர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர், தனிப்பட்ட முறையில் எல்லோருக்குமே அறிவுரைகளை வழங்கினார். அது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ‘எல்லாமும், எல்லோருக்கும்’ என்ற வார்த்தையைச் சொல்லி அதற்கேற்ப அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், எந்த ஒரு செயல்பாட்டிலும் மக்கள் நலன் மற்றும் மக்களின் மீதான அக்கறையையே முதன்மையானதாகக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படியே மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம், அதற்கு அரசின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது” என்றார் பிரபுசங்கர்.

ஆட்சியர்கள் தங்கள் அதிகாரத்தை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்தத் தொடங்கினால் அது மாவட்டத்தில் சுணக்கமில்லாத, நேர்மையான நிர்வாகம் நடைபெற உதவியாக இருக்கும். அதன்மூலம் மக்களுக்கு இன்னும் கூடுதல் பயன் கிடைக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து இன்னும் ஒருபடி மேலே போயும் கலக்குங்க ஆட்சியர்களே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in