
நேற்று நடைபெற்ற வாக்குச்சாவடி சிறப்பு முகாமில் பணியில் இல்லாத நகராட்சி, அங்கன்வாடி பணியாளர்கள் 13 பேரைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி சிறப்பு முகாம்கள் நேற்றும், இன்றும் நடைபெறுகின்றன. வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்துகொள்ளவும் வசதியாக இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்திலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அந்த முகாம்களில் சிலர் பணியில் இல்லாதது மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்தது. அதனையடுத்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, நியமிக்கப்பட்டு ஆனால் பணியில் இல்லாத நகராட்சி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பத்து பேரைத் தற்காலிகப் பணியிடை நீக்கமும், மூன்று பேரை நிரந்தரப் பணி நீக்கமும் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களை திகிலடையச் செய்திருக்கிறது.