பழங்குடிகளுக்கான வன உரிமை மறுக்கப்பட்டதே வனக்குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்!

மீட்கப்பட்ட தந்தத்துடன் வனத்துறையினர்...
மீட்கப்பட்ட தந்தத்துடன் வனத்துறையினர்...

அண்மைக் காலமாக தமிழக வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளையும், வனக் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் முடியாமல் வனத்துறை திணறி வருகிறது. பூர்வகுடிகளாய் வனங்களில் வசிக்கும் பழங்குடி மக்களின் ஒத்துழைப்பு இல்லாததும், அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் இருப்பதுமே இதற்குக் காரணம் என்கின்றனர் பழங்குடியினர் நல ஆர்வலர்கள்.

காடோடி மக்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, பாரம்பரியமாய் வனங்களைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களின் உரிமையை மீட்டுக் கொடுக்கும் வன உரிமைச் சட்டம் 2006-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தின்படி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் தமிழகத்தில் முழுமையாக கிடைக்கவில்லை என்பது பழங்குடி மக்களின் ஆதங்கம்.

ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால் மிகப்பெரிய அளவில் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பழங்குடிகளுக்கான குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கான உரிமைகள் 15 ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை. இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பழங்குடியினர் நலத்துறை, வனத்துறையினர் மீது பழிபோட்டு தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது. இதனால் அரசுத் துறைகளின் மீது நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் பழங்குடி மக்கள். இதனால் வன குற்றங்களை தடுப்பதற்கு பழங்குடிகளின் ஒத்துழைப்பைப் பெறமுடியாமல் வனத்துறையின் தடுமாறி வருகிறார்கள்.

உடுமலைப்பேட்டை அருகே காட்டு யானை மர்மமான முறையில் உயிரிழந்ததும் அதன் தந்தத்தை வெட்டி கடத்திய விவகாரமும் இதற்கு உதாரணம். இந்தச் சம்பவத்தில் யானை இறந்து 10 நாட்களுக்கு பின்பே வனத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் பழங்குடிகளின் ஒத்துழைப்பு இருந்ததால் தான் கடத்தப்பட்ட தந்தத்தை மீட்க முடிந்தது என்பது தனிக்கதை. ஆனால் தங்களுக்கு இருக்கும் விரக்தியால் எல்லா சம்பவங் களிலும் பழங்குடிகள் இப்படி வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவதில்லை.

இது குறித்து காமதேனு இணையத்திடம் பேசிய பழங்குடியினர் நல செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ச.தனராஜ், “பழங்குடியின மக்கள் காடுகளில் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த பாரம்பரிய சமுதாய வன உரிமைகள் வனத்துறையினரால் அடியோடு முடக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் காடுகளுக்குள் குடும்பமாகச் சென்று சுதந்திரமாக மூலிகை சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், தேன் எடுத்தல் உள்ளிட்ட சிறு வன மகசூலில் ஈடுபடுகின்றனர். இப்படி அவர்கள் காடுகளுக்குள் செல்லும் போது அங்கு ஏதாவது குற்றங்கள் நடந்தால் வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்துவிடுவார்கள். பல நேரங்களில் பழங்குடிகள் காட்டுக் கொள்ளையர்களோடு நேரடியாக போராடவும் செய்திருக்கிறார்கள். பழங்குடிகள் காடுகளையும் வன உயிர் பாதுகாப்பினையும் உயிர் மூச்சாக கொண்டவர்கள்.

ஆனால் இன்றோ, பழங்குடி மக்கள் தங்களின் உரிமைகளைப் பெறுவதற்கும், அனுபவிப்பதற்கும் வனத்துறையினர் பெரும் முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் இருக்கிறார்கள். இதை அவர்கள் விரும்பவில்லை. முன்பு வனத்தில் ஏற்படும் காட்டுத் தீயை பழங்குடிகளே தாமாக முன்வந்து அணைப்பது வழக்கம். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீ தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை, நீங்கள் தான் தீ வைத்து இருக்கிறீர்கள் என்று வனத்துறையினர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது அந்த மக்களை தேவையற்ற அச்சத்திற்கும் மனச் சோர்வுக்கும் உள்ளாக்கிவிட்டது.

வனத்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் தான் வனக் குற்றங்களை தடுப்பதிலும் வனத்தைப் பாதுகாப்பதிலும் பழங்குடிகளுக்கு இருந்த ஆர்வத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதனால் தான் வனத்திற்குள் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் வனத்துறைக்கு தகவல் தெரியாமல் போய்விடுகிறது.

’துக்கம் கேக்கப் போன இடத்தில் தாலியை அறுக்க சொன்னாங்களாம்’ - கிராமத்துப் பக்கம் இப்படியொரு ஒரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் வனக் குற்றங்கள் குறித்து பழங்குடிகள் துப்புக் கொடுத்தால் நீதான் அதைச் செய்திருப்பாய் என்று அவர்களையே அதட்டி, மிரட்டி, பழி வாங்குவது வனத்துறைக்கு கைவந்த கலையாகிவிட்டது.

காடுகளில் சிறு வன மகசூலுக்குச் செல்லும் பழங்குடியினர் ஆங்காங்கே 10 நாட்களுக்கும் மேலாக தங்குவது வழக்கம். இத்தருணங்களில் காடுகளின் முழு பாதுகாப்பையும், அவர்களால் உறுதி செய்ய முடிந்தது. ஆனால், இத்தகைய பாரம்பரிய சிறு வன மகசூல் சேகரிப்பை வனத்துறை தொடர்ந்து தடுப்பதால் காடுகளுக்குள் இறந்து கிடக்கும் வன விலங்குகள் குறித்தும், காடுகளுக்குள் நடக்கும் அத்துமீறல்கள், வனக் குற்றங்கள் குறித்தும் வனத்துறைக்கு அவர்களால் தகவல் தெரிவிக்க இயலாமல் போய்விடுகிறது.

இன்றைக்கும் உள்ளூர் பழங்குடிகளின் உதவி இல்லாமல் வனப்பகுதிக்குள் வனத்துறையால் எளிதாக சென்று வர இயலாது. காடுகளில் ஒவ்வொரு 'பீட்'களில் அலைந்து திரிந்து கண்காணிக்க வேண்டிய வனத்துறையினர், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்து பழங்குடிகளை மட்டுமே கண்காணிக்கும், உளவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டிய பாரம்பரிய உரிமைகளை வழங்கி அவர்களை கண்ணியமாக நடத்திட வழிவகை காணவேண்டிய பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு உள்ளது. தொடர்ந்து அவர்களை விரக்தியின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துவது பெரும் அவலம் மட்டுமல்ல. அவமானமும் கூட.

100 நாள் வேலை திட்டத்தின் மூலம் உண்ணி செடிகளை, களைச் செடிகளை அகற்றி அதற்கு பதிலாக வன உயிரினங்களுக்கு ஏற்ற மர வகைகளை நட்டும், பல்லுயிர்ச் சூழலை உருவாக்கும், மேம்படுத்தும் பணிகளில் வனமக்களை ஈடுபடுத்த வேண்டும். வன உரிமை சட்டத்தின் படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இனியாவது கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் வனக்குற்றங்கள் தடுக்கப்படும், வனங்களும் காக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வன அலுவலரான தேஜஸ்வியிடம் கேட்டபோது, “வன உரிமை சட்டப்படி பயனாளிகளை தேர்ந்தெடுக்க 3 குழுக்கள் உள்ளன. உள்ளூர் மக்களை உள்ளடக்கிய குழு, அடுத்ததாக, கோட்டாட்சியர், வனத்துறையினரை கொண்ட குழு, மூன்றாவதாக, ஆட்சியர், மாவட்ட வன அலுவலர், பழங்குடியினர் நலத்துறை ஆகியோரை கொண்ட குழு. இக்குழுவே இம்மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பொறுப்பு.

உடுமலை கோட்டத்தில் ஏற்கெனவே நில உரிமை பட்டா கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், அதில் பெரும்பாலானவை உள்ளூர் மக்கள் அடங்கிய குழுவினராலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பேருக்கு மட்டுமே நில உரிமை பட்டா விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏன் நிராகரிக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட பயனாளிகள் மீண்டும் ஏன் விண்ணப்பிக்கவில்லை என்பது குறித்து விசாரிக்கவும், பழங்குடியின மக்களின் ஒத்துழைப்பை பெறவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in